You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியை தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. கண்ணெதிரே விழுந்து வெடிக்கும் குண்டு: தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்

    இந்திய மாணவர்கள் சிலர் க்ரைமியாவுக்கு அருகில் இருக்கும் மிகொலயேவ் நகரத்திலுள்ள பெட்ரோ மொஹைலா ப்ளாக் சீ தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திவாகரிடம் பேசினோம்.

    திவாகர், நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவர் சற்று நேரம் முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, “நாங்கள் இருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

    நேற்று முதல் நாங்கள் எங்கள் விடுதியின் அடித்தளத்தில் தான் இருக்கிறோம். இங்கு மின் விளக்கு, ஹீட்டர் என்று எதுவுமே இல்லை. இப்போது எங்களிடம் இருக்கும் உணவு 3 நாட்களுக்குத் தான் தாக்குப் பிடிக்கும். அது முடிந்த பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

    பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு சொல்கிறார்கள். ஆனால், அவை எங்கு உள்ளன என்று எந்த விவரமும் தெரியவில்லை.

    போர் தொடங்கி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதுவரைக்கும் எங்கள் நாட்டிற்குத் திரும்புவது என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டேயிருக்கிறது. இந்திய அரசு சொல்வதுபோல் எல்லைக்குச் செல்ல வேண்டுமெனில் நாங்கள் சுமார் 800 கி.மீ பயணிக்க வேண்டும். இந்தச் சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை,” என்று கூறினார்.

    அவர்கள் கண்ணெதிரே குண்டு விழுந்து வெடிப்பது அவர்கள் பகிர்ந்துகொண்ட விடியோக்களில் தெரிகிறது.

  2. ஏவுகணை தாக்குதல்: எண்ணெய் கிடங்கு வெடித்ததாக தகவல்

    ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கீயவ் நகரின் வாசில்கிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று வெடித்ததாக, செய்திகள் பல வெளியாகியுள்ளன.

    அந்நகரின் மேயர் நடாலியா பலஸினோவிச் மற்றும் யுக்ரேன் அரசு ஆலோசகர் ஆன்டன் கெராஸ்சென்கோ இருவரும் இதனை உறுதிப்படுத்தியதாக, உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    அப்பகுதியிலிருந்து பெருமளவில் தீ வெளியாகும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பிபிசி சரிபார்க்கவில்லை.

  3. கார்கீயவ்வில் எரிவாயு குழாய் வெடித்ததாக பரவும் தகவல்

    யுக்ரேனில் தற்போது அதிகாலை சுமார் 4 மணி ஆகிறது. கடந்த சில மணிநேரத்தில் யுக்ரேனின் வடகிழக்கு நகரமான கார்கீயவ்வில் எரிவாயு குழாய் வெடித்ததாக, சரிபார்க்கப்படாத செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

    யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரம் கார்கீயவ். ரஷ்யா யுக்ரேன் மீது ராணுவ தாக்குதலை தொடங்கிய முதல் நாளிலிருந்து ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளானது.

    இந்நிலையில், ரஷ்யா தற்போது யுக்ரேனின் எரிவாயு மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்பை இலக்கு வைத்துள்ளதாக கருத்து நிலவுகிறது.

  4. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள். நேற்றையநேரலைப் பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • தலைநகர் கீயவில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் சண்டை நடைபெற்றதாக யுக்ரேன் தெரிவித்தது.
    • யுக்ரேன் ராணுவம் நகரத்தில் உள்ள ஒரு தளத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலை முறியடித்ததாகக் கூறியது.
    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா கீயவ் நகரை கைப்பற்ற முயல்வதாக தெரிவித்த நிலையில், அங்கு சண்டை நடைபெற்று வருகிறது.
    • ரஷ்ய ராணுவம் நேற்று தாக்குதலை தொடர்ந்த நிலையில், கீயவின் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
    • யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி சனிக்கிழமையன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'ஆயுதங்களைக் கீழே போட மாட்டோம்' என்று அறிவித்தார்.
    • யுக்ரேன் தலைநகர் கீயவில் திங்கள் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.