இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 21 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்வதாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப் படகுகளையும், அதிலிருந்த 21 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன், மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் கையகப்படுத்தப்பட்ட மீனவர்களுடைய இரண்டு விசைப்படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












