ஜம்மு-காஷ்மீர்: பாந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – காவல்துறை அதிகாரி உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் பாந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதா? – வைகோ கண்டனம்

    வைகோ

    பட மூலாதாரம், GETTY IMAGES

    கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதா என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, வைகோ இன்று (பிப். 11) வெளியிட்ட அறிக்கையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் கதிரியக்க அபாயம் கொண்ட அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும், உரிய முறையில் சேமிக்கவும் இந்திய அணுசக்திக் கழகத்திடம் திட்டங்கள் இல்லை என்பதால்,2013 ஆம் ஆண்டு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

    இதில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அணுக் கழிவுகளை சேமித்து வைத்திட தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) மற்றும் அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நில கருவூல மையம் (Deep Geological Repository - DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) 5 ஆண்டுகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்பட்டு வரும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பாஜக அரசு முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    கூடங்குளத்தில் அணுஉலை 3ஆவது மற்றும் 4ஆவது அலகுகள் அமைத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூடங்குளத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அணு உலைக் கழிவுகளை கொண்டுபோய் சேமித்து வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

  2. அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    கீழடி

    பட மூலாதாரம், TAMIL NADU STATE ARCHEOLOGY DEPARTMENT

    படக்குறிப்பு, கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரம்: கோப்புப்படம்

    கீழடி, கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 11) தொடங்கி வைத்தார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தருமபுரி மாவட்டம் பெரும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதற்காக இந்த நிதியாண்டில் தமிழக அரசால் 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேட்டில் 2ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். கீழடியில் வீரணன் என்பவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளையும் முதல்வர் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

  3. நியாண்டர்தால் மனிதர்கள் பற்றிய புது கண்டுபிடிப்பு

    தற்போது கிடைத்துள்ள புதிய புதைபடிவங்கள், நவீன மனிதர்கள் ஆப்ரிக்காவிலிருந்து வந்தவுடன் நியாண்டர்தால்களை அழித்துவிட்டார்கள் என்ற கருத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன.

    நியாண்டர்தால் இன மனிதர்கள் ஐரோப்பாவில் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வந்தனர். ஆப்பிரிக்காவில் இருந்து ஹோமோ சேபியன்ஸ் ஐரோப்பிய கண்டத்திற்கு வந்த சிறிது காலத்திற்குப் பிறகு, அதாவது சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்துவிட்டதாகத் தற்போதைய கோட்பாடு கூறுகிறது.

    சயின்ஸ் அட்வான்சஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு குறித்து, மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

  4. 'வடகொரிய அதிபருடன் தொடர்பில் இருக்கிறேன் என்று கூறும் டிரம்ப்'

    Kim Jong and Trump

    பட மூலாதாரம், Getty Images

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுடன் தொடர்பில் இருப்பதாக தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் என்று ஒரு புதிய புத்தகத்தின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

    தான் தொடர்பில் இருப்பதாக டிரம்ப் கூறிய ஒரே வெளிநாட்டு தலைவர் கிம் மட்டுமே என்று பத்திரிக்கையாளர் மேகி ஹேபர்மேன் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவல் சரிபார்க்கப்படவில்லை என்று கூறிய அவர், அது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம் என்றார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு, தானும் கிம்மும் கடிதங்களை பரிமாறிக்கொண்ட பிறகு, அவருடன் நட்புணர்வுடன் இருக்கிறேன் என்று டிரம்ப் கூறியது மிகவும் பிரபலமானது. ஆனால், இருவரும் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்றதாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தவறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  5. இந்தியாவில் புதிதாக 58,077 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 58 ஆயிரத்து 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்து 407 பேர் குணமடைந்துள்ளதாவும், 657 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் தினசரி தொற்று பாதிப்பின் விகிதம் 3. 89% ஆக உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. ரஷ்யா கடலில் முற்றுகையிடுவதாக குற்றம்சாட்டும் யுக்ரேன்

    அடுத்த வாரம் ரஷ்யா கடற்படை பயிற்சியில் ஈடுபடத் தயாராகிவரும் நிலையில், அந்நாடு தாங்கள் கடலை அணுகத் தடையாக இருக்கும் வகையில் முற்றுகையிட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறது அண்டை நாடான யுக்ரேன்.

    யுக்ரேனுடனான தனது எல்லையில் ரஷ்யா பெரும் படைகளைக் குவித்து வருவதால் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு நடுவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது யுக்ரேன். அசோவ் கடல் முழுவதையும், கருங்கடலில் பெருமளவையும் தாங்கள் அணுகமுடியாதபடி ரஷ்யப் படையினர் தடுத்துக் கொண்டு நிற்பதாக யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

    யுக்ரேன் மீது படையெடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறது ரஷ்யா. ஆனால், யுக்ரேன் எல்லையில் சுமார் லட்சம் படைகளை அது குவித்திருக்கிறது. அண்டை நாடும் நட்பு நாடுமான பெலாரசோடு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

    பெலாரசுக்கு யுக்ரேனுடன் நீண்ட எல்லைப் பகுதி இருக்கிறது.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்றைய இந்த நேரலைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய செய்திகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள். இந்த நாள் இனியதாகட்டும்.