ஜம்மு-காஷ்மீர்: பாந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – காவல்துறை அதிகாரி உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் பாந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
தமிழகத்தில் இன்று 3,086 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, கொரோனா - மாதிரிப்படம்
தமிழகத்தில் இன்று 3,086 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,31,154ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இன்று (பிப்.
11) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
“தமிழகத்தில் தற்போது வரை 56,002 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இன்று
கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,06,514.
இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின்
எண்ணிக்கை 1,01,830.
தமிழகத்தில் அரசு சார்பாக 69 மற்றும் தனியார்
சார்பாக 263 என, 332 கொரோனா
பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று
மட்டும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,051. இதனால், கொரோனா தொற்றிலிருந்து
குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,37,265ஆக உள்ளது.
இன்று
கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனைகளில்
14 பேர், அரசு மருத்துவமனைகளில் 11 பேர் என,
25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில்
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,887ஆக உயர்ந்துள்ளது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கபடி வீராங்கனைகள்: களம் கொடுத்த திருவாரூர் கிராமம்: நிஜத்தில் ஒரு ''கென்னடி கிளப்''
கட்டுரை தகவல்
எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
பதவி, பிபிசி தமிழ்
பட மூலாதாரம், THIRUVARU DISTRICT KABADI ASSOCIATION
கிராமத்தில் உள்ள ஒரு பெண்கள் கபடி அணி தேசிய அளவில் வெற்றி பெற்று, முத்திரை பதிப்பதை ''கென்னடி கிளப்'' என்கிற திரைப்படத்தில் இயக்குநர் சுசீந்திரன் சொல்லியிருப்பார். அந்த படத்தில் பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சசிக்குமார் ஆகியோர் நடித்து, அவர்களின் ஊக்கத்தால் வீராங்கனைகள் சாதனை படைப்பார்கள். அது போல் நிஜத்திலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் கபடி அணி சாதனை படைத்து வருகிறது என்று தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த கபடி அணி குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜம்மு-காஷ்மீர்: பாந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் – காவல்துறை அதிகாரி உயிரிழப்பு
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
ஜம்மு-காஷ்மீரின் பாந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள்
நிகழ்த்திய தாக்குதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், நான்கு
பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதல்
முக்கிய நகரத்தில் நடைபெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, காஷ்மீர் நியூஸ் அப்சர்வர் செய்தி முகமையிடம்
பேசிய அதிகாரிகள், இன்று (பிப். 11) மதியம் நிஷத் பார்க் பகுதியில் காவல் துறை
மற்றும் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவித்தனர்
இந்த தாக்குதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகவும், 4 பேர்
காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“நானும் முஸ்லிம்தான், ஆனால் பள்ளியில் ஹிஜாப் அணிந்ததில்லை”: குஷ்பு
பட மூலாதாரம், KUSHBU
“நானும் முஸ்லிம்தான், ஆனால் பள்ளியில் ஹிஜாப்
அணிந்ததில்லை” என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் குஷ்பு இன்று (பிப்ரவரி 11) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு,
“ஹிஜாப் அணிவதும், அணிய வேண்டாம் என்பதும் அவரவரின் தனிப்பட்ட
விருப்பம். என்னை பொறுத்தவரையில்,
பள்ளிக்கூடம் செல்லும்போது அங்கு சீருடை என்பது
இருக்கிறது. பள்ளி நுழைவு வாயில் வரை ஹிஜாப் அணியுங்கள். பள்ளிக்கூடத்திற்குள் நுழையும்போது
எந்த சாதியையும் மதத்தையும் உள்ளே கொண்டு போகாமல், இந்த நாட்டின் குழந்தைகளாக, பள்ளியின் விதிமுறைக்கேற்ப
சீருடை அணிந்து கொண்டு தான் உள்ளே போக வேண்டும்.
என்
மகள்கள் பள்ளியில் படிக்கும் போது அவர்களுக்கும் முஸ்லிம் நண்பர்கள் இருந்தனர். நானும்
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவள் தான். நான் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கூடம் சென்றதில்லை, மற்ற தோழிகளும் ஹிஜாப்
அணிந்ததில்லை” என்றார்.
வாரிசு அரசியல்: பிரதமர் விமர்சனத்திற்கு லாலு பிரசாத் பதில்
பிரதமர் நரேந்திர
மோதி எழுப்பிய வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர்
லாலு பிரசாத் பதில் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர
மோதி ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு நேற்று முன்தினம் நேர்காணல் அளித்திருந்தார்.
அதில், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு
அரசியல் நிலவுவதாகவும், வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய
எதிரி என்றும் பிரதமர் கூறியிருந்தார். மேலும், பிகாரின் தற்போதைய
முதல்வர் நிதிஷ் குமார் தன் குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குள் கொண்டு வராதது குறித்தும்
பிரதமர் மோதி பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று (பிப்.
11) செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், “மோடிக்கு குழந்தைகள் இல்லை. நிதிஷின்
மகன், அரசியல் மீது வெறுப்பு கொண்டவர். பிரதமருக்கும் நிதிஷுக்கும் தலைமுறை தழைத்து, அவர்களின் அரசியல் மரபை முன்னெடுத்துச் செல்லட்டும்
என ஒருவர் வேண்டிக்கொள்ள மட்டுமே முடியும்” என தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
கட்டுரை தகவல்
எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
பதவி, பிபிசி தமிழுக்காக
படக்குறிப்பு, மீனவர்கள் போராட்டம்
இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து
ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை
கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை
உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது
செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக
மீனவர்களின் எதிர்ப்பை மீறி பல கோடி மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை வசம்
இருந்த மீன்பிடி விசைப் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டதற்குமத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததை
கண்டித்தும், இன்று (பிப்ரவரி 11) ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 4 மணியளவில்
ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை
சிறையில் உள்ளமீனவர்களின் குடும்பத்தினர்
உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள
மீன்பிடி அனுமதி சீட்டு அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம்
ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்த வந்தனர்.
அப்போது, பாதுகாப்புப்
பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையம் முன்பு தடுப்புகள்
வைத்து மீனவர்களை தடுத்து நிறுத்தினர்.
அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தி ரயில் மறியல் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர்.
ஆனால், போராட்டத்தை கைவிட மறுத்த
மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மீனவர்களின் கோரிக்கை
நிறைவேற்றப்படாதபட்சத்தில் ராமேஸ்வரத்தில்
உள்ள அனைத்து படகுகளின் உரிமம் மற்றும்
மீனவர்கள் இந்திய பிரஜை இல்லை என குறிப்பிடும்
வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர்
அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்
போவதாக கூறி விட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.
இலங்கைக்கு நரேந்திர மோதி அடுத்த மாதம் பயணம் - தாயக நெருக்கடி தீர உதவுமா?
கட்டுரை தகவல்
எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
பதவி, பிபிசி தமிழுக்காக
பட மூலாதாரம், MINISTRY OF FOREIGN AFFAIRS SRI LANKA
படக்குறிப்பு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்: கோப்புப்படம்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சம் தெரிவிக்கின்றது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்வாக் என்றும் அவரது வருகையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, ஏற்கெனவே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
முதன்முதலில் தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத வைத்தது எடப்பாடி பழனிசாமி தான்: முதல்வர் ஸ்டாலின்
பட மூலாதாரம், @MKSTALIN TWITTER PAGE
தமிழக மாணவர்களை முதன் முதலில் நீட் தேர்வு
எழுத வைத்தது எடப்பாடி பழனிசாமி தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,
திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் அக்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்
பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது
அவர் பேசுகையில், “முதன்முதலில் தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத வைத்தது எடப்பாடி பழனிசாமி
தான். அப்படித்தான்
நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான
எந்த செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது திமுக தான். நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தை நடத்தியது திமுக.
கடந்த
திமுக ஆட்சிக் காலத்தில் எந்த மையத்தில் நீட் தேர்வு நடந்தது என்பதை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சொல்ல
வேண்டும். ஆனால், அவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியாது. முதல்
நீட் தேர்வு நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.
பொய்
மூட்டையை கொண்டு வந்து தமிழக மக்கள் முன்பு கொட்டலாம் என நினைக்காதீர்கள். உங்களின்
பொய்களை கேட்டு அவர்கள் வெறுத்துப் போய்விட்டனர். அதனை, தமிழக மக்கள் வெளிப்படையாகவே
சொல்கின்றனர்.
இலங்கை
கடற்படை தொடர்ந்து அத்துமீறி தமிழக மீனவர்களை கைது செய்கிறது. இது குறித்து பிரதமருக்கும்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
தமிழக மீனவர்களுக்கு
சொந்தமான படகுகளை ஏலம் விடுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை தடுக்க வேண்டிய கடமை இந்திய
அரசுக்கு உள்ளது.
இதை இந்திய அரசு வெளிப்படையாக கண்டிக்க வேண்டும். இலங்கை சென்று
இந்திய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தூதரக
அளவிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
உ.பி: காணாமல் போன தலித் பெண் உடல் முன்னாள் அமைச்சரின் ஆசிரமம் அருகே கண்டெடுப்பு
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
உத்தர பிரதேசத்தில் இரு மாதங்களுக்கு முன் காணாமல்
போன தலித் பெண்ணின் உடல், முன்னாள் அமைச்சரின் ஆசிரமம் அருகே
கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த பெண், கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
முன்னதாக, டிசம்பர் 9ஆம் தேதி தன் மகள் காணாமல்
போனதாக, அப்பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரில், சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்த பதே பகதூர்
சிங்கின் மகன் ராஜோல் சிங் தன் மகளை கடத்தியதாக அவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், காவல் துறையினரின் விசாரணை அடிப்படையில்,
நேற்று (பிப். 10) பதே பகதூர் சிங்குக்கு சொந்தமான ஆசிரமம் அருகே
உள்ள காலி நிலத்தை தோண்டியபோது அப்பெண்ணின் உடல் கிடைத்தது.
பிரேத பரிசோதனைக்குப்
பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம்
தொடர்பாக ராஜோல் சிங்கை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சி
தலைவருக்கு சொந்தமான ஆசிரமம் அருகே உள்ள நிலத்திலிருந்து தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, “சமாஜ்வாதி கட்சி தலைவரின் நிலத்திலிருந்து தலித் பெண்ணின்
உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் தாயார் உங்கள் (அகிலேஷ் யாதவ்) கார் முன்பு
கெஞ்சியபோது கூட நீங்கள் கேட்கவில்லை. உங்கள் கட்சி தலைவரை காப்பாற்றினீர்கள்”
என தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ்
கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், “இச்சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது. அப்பெண் கடத்தப்பட்டிருக்கலாம்
என ஏற்கெனவே அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தேகித்தனர். இக்குற்றத்தை இழைத்தவர்களுக்கு
எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு
நீதி வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
ஹிஜாப் சர்ச்சை: “பொது சிவில் சட்டம் தேவை” – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, கிரிராஜ் சிங்
ஹிஜாப் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நாட்டுக்கு பொது சிவில் சட்டம் தேவை என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு
கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இவர்களது
போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கத் தொடங்கியது. உள்ளூர் நிர்வாகமும், கல்லூரி நிர்வாகமும், மாணவிகளின்
குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பாக மாணவிகள்
உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், தற்போது மூன்று
நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.
இதற்கிடையில், சில
இந்துத்துவ குழுக்கள், இந்து மாணவர்களை காவி சால்வை மற்றும்
மேல்துண்டு அணிந்து வருமாறு வலியுறுத்தின.
கர்நாடகாவில் மாணவர்கள் இரண்டு
குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒன்று ஹிஜாபை ஆதரிக்கிறது, மற்றொன்று
அதை எதிர்க்கிறது.
இந்நிலையில், இச்சமயத்தில் நாட்டுக்கு பொது சிவில்
சட்டம் தேவை என, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
“பொது
சிவில் சட்டமே இப்போது தேவை. இந்த நாடு ஒன்றுதான், எனவே, அனைவருக்கும்
ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும்” என அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நடிகை ரவீணா டாண்டனின் தந்தை காலமானார்
பட மூலாதாரம், officialraveenatandon/Instagram
படக்குறிப்பு, தன் தந்தையுடன் ரவீணா டாண்டன்
பாலிவுட் இயக்குநரும் நடிகை ரவீணா டாண்டனின் தந்தையுமான ரவி டாண்டன் இன்று (பிப்ரவரி 11) காலமானார், அவருக்கு வயது 87.
அமிதாப் பச்சனின் ‘குத்தார்’, ரிஷி
கபூரின் ‘கேல்-கேல் மெய்ன்’, அன்ஹோனி,
நஸ்ரானா, மஜ்பூர், குட்டார்,
சிந்தகி உள்ளிட்ட திரைப்படங்களை ரவி டாண்டன் இயக்கியுள்ளார். கடந்த
சில ஆண்டுகளாக, சுவாச கோளாறு பிரச்னையால் ரவி டாண்டன் பாதிக்கப்பட்டிருந்தார்.
தன் தந்தையின் மறைவு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரவீணா டாண்டன், “நீங்கள்
எப்போதும் என்னுடனேயே இருக்கிறீர்கள், நீங்கள் என்னை விட்டு
விலக விட மாட்டேன், லவ் யூ பப்பா” என தெரிவித்துள்ளார்.
“என் தந்தை நேர்மையானவர்”: நவ்ஜோத் சிங் சித்து மகள் பேட்டி
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ரபியா கவுர் சித்து
நேர்மையான மனிதரை நீண்ட காலத்திற்கு தடுத்து
நிறுத்த முடியாது என பஞ்சாப்
காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மகள் ரபியா கவுர் சித்து தெரிவித்துள்ளார்.
தன் தந்தையை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தாதது குறித்த கேள்விக்கு
அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பஞ்சாப்
மாநிலத்தில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இது
தொடர்பாக, நவ்ஜோத் சிங்கின் மகள் ரபியா கவுரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
“ஒருவேளை காங்கிரஸ் தலைமைக்கு சில நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம்.
ஆனால், நேர்மையான மனிதரை நீங்கள் நீண்ட காலத்திற்கு தடுத்து
நிறுத்த முடியாது.
ஒரு
மகளாக என் தந்தை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படாதது ஒரு பொருட்டல்ல.
ஆனால், ஒருநாள்
அவர் மிகப்பெரிய விஷயங்களை செய்வார். ஏனெனில், அவரது பிம்பம்
தெளிவாக இருக்கிறது. அவர் பெயரின் மீது எவ்வித கறையும் இல்லை.
எந்தவொரு
அரசியல்வாதியை எடுத்துக்கொண்டாலும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும்.
என் தந்தை மிகவும் நேர்மையான மனிதர்” என தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: மேக்கேதாட்டு பிரச்னையை விவாதிக்க தமிழ்நாடு எதிர்ப்பு
பட மூலாதாரம், DIPR TAMILNADU
படக்குறிப்பு, காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில்
மேக்கேதாட்டு பிரச்னை குறித்து விவாதிக்க தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15வது
கூட்டம் இன்று (பிப்ரவரி 11) பிற்பகல் 2.40 மணிக்கு காணொளி காட்சி மூலம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்
தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை
கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர்
ஆர். சுப்பிரமணியன், குழுவின் உறுப்பினர் பட்டாபிராமன்
ஆகியோர் பங்கேற்றனர். மேலும், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள், புதுவை யூனியன் பிரதேசம் சார்பிலும்
அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இது
குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து
விவாதிக்கப்பட்டது. வரும் பாசன ஆண்டில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி மாதம் வாரியாக நீரை
பிலிகுண்டுலுவில் கர்நாடகம் வழங்கிட வலியுறுத்தப்பட்டது.
மேக்கேதாட்டு அணை விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்பொருள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் இக்கூட்டத்தில் விவாதத்திற்கு
எடுத்துக் கொள்ளக்கூடாது என தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகவே, இப்பொருள் குறித்து
விவாதம் தவிர்க்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதியை நிறுத்திய சீனா
பட மூலாதாரம், Getty Images
மாட்டிறைச்சி, பால் பொருட்கள், பீர் உள்ளிட்டவற்றை லித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பால்டிக் நாடான
லித்துவேனியா தைவானுடன் கொண்டுள்ள தொடர்பு குறித்த விவாதங்கள் தீவிரமாகியுள்ள
நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சுங்கவரித்துறைக்கான பொது
நிர்வாகம், “ஆவணங்களின் குறைபாட்டைக்” காரணம்
காட்டி, தங்கள் நாட்டிலிருந்து அந்நாட்டுக்கு
ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக, லித்துவேனியா முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் அதன் தூதரகத்தை தங்கள்
நாட்டில் திறந்துகொள்ள லித்துவேனியா அனுமதித்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமது உறுப்பினர் நாட்டுக்கு எதிராக
பாரபட்சமாக நடந்துகொள்வதாக சீனாவின் மீது குற்றம்சாட்டி ஐரோப்பிய
ஒன்றியம் தொடர்ந்துள்ள வழக்கு வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லித்துவேனியா உணவு மற்றும் கால்நடை
சேவை துறை இது குறித்து கூறுகையில், “எந்தவொரு தகவல் அல்லது தரவுகளோ இல்லை என, சீனாவிடமிருந்து எந்தவொரு அறிவிப்பாணையும்
இதுவரை கிடைக்கப் பெறவில்லை” என தெரிவித்துள்ளது.
மன்னார் கடலில் எண்ணெய் தேடும் பணிக்கு இந்தியா விருப்பம்
கட்டுரை தகவல்
எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
பதவி, பிபிசி தமிழுக்காக
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, எண்ணெய் - மாதிரிப்படம்
இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள்
அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா
முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில
தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து
முன்னெடுக்கக்கூடிய திட்டத்தை, அமெரிக்காவில்
மார்ச் மாதம் நடைபெறும் எரிபொருள் உச்சி மாநாட்டில் தான் முன்வைத்து, தனியார் துறையையும் இதனுடன் இணைக்க
நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.இதன்படி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார்
வளைகுடாவிலுள்ள எம் - 02 என்ற பிரிவை ஏலத்தில் விடுவதற்கு
எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த ஏலம்
நிறைவடைந்து, நிறுவனமொன்று தெரிவு
செய்யப்பட்டதன் பின்னர், அன்று முதல் 9 தொடக்கம் 12 மாதங்களுக்குள் அகழ்வு பணிகளை
ஆரம்பிக்க முடியும் என உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிடுகின்றார்.இலங்கையை
சூழ முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஆய்வு நடவடிக்கைகளிலும், இலங்கை கடற்பரப்பில் எரிபொருள்
உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மன்னார்
வளைகுடா, காவிரி வளைகுடா மற்றும் இலங்கை
வளைகுடா என மூன்றாக பிரித்துள்ளதுடன், இந்த அனைத்து வளைகுடாக்களிலும் எரிபொருள் உள்ளமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த
அனைத்து பகுதிகளும் 873 பிரிவுகளாக பிரித்து இந்த ஆய்வுகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி, மன்னார் வளைகுடாவில் மாத்திரம்
நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் பிரகாரம், 2 பில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் மற்றும் 9 ரில்லியன் கன அடி இயற்கை வாயு
உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்த
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்கான ஒழுங்குப்படுத்தல்களை
மேற்கொள்ள இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நீட்: "பொது மேடையில் விவாதம் செய்ய தயார்": முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
படக்குறிப்பு, அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வு குறித்து பொது மேடையில்
விவாதம் செய்ய தயார் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக
வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை புதூர் பகுதியில் இன்று (பிப். 11) நடைபெற்றது.
இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ஒரு சவால் விட்டார். உங்களுடைய சவாலை நாங்கள் ஏற்கிறோம்.
திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என கூறினீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 9 மாதம் கடந்த நிலையில், நீட்
தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
பொய் பேசுவதற்கான நோபல் பரிசை முதல்வர்
மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்.
தேர்தல் சமயத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி
ஸ்டாலின் கூறினார். தற்போது தொடந்து மத்தியில் பேசி நீட்
தேர்வை ரத்து செய்வோம் என்கிறார். தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து
செய்வதுதான் உங்கள் ரகசியமா??
‘பிளேட்’டை
மாற்றும் வேலையை திமுகவினர் செய்து வருகின்றனர்.
மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி
நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்து வெளியிட்ட உதயநிதி
ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே அளிக்கலாம்.
நீட் குறித்து பொது மேடையில் விவாதிக்க நானும், ஓபிஎஸ்ஸும் தயார்.
நாட்டின் முதல்வர் மக்களிடம் நீட்
குறித்து பொய்யை பரப்புகிறார்” என தெரிவித்தார்.
அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்
கட்டுரை தகவல்
எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பதவி, பிபிசி தமிழ்
பட மூலாதாரம், GETTY IMAGES
படக்குறிப்பு, சென்னை தேவாலயம் ஒன்றில் கிறிஸ்துமஸ் ஜெபத்தில் கிறிஸ்தவர்கள். கோப்புப் படம்.
மதம் மாற வலியுறுத்தியதால் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் சம்பவத்தில்உண்மையில் நடந்தது என்ன? மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது இந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்துகின்றனவா?
பிபிசி தமிழ் நடத்திய ஒரு கள ஆய்வு:
பின்னணி: அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தான் படித்துவந்த கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தின் விடுதியில் தற்கொலைக்கு முயன்று சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விடுதியில் மதம் மாற வலியுறுத்தப்பட்டதால்தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இறந்தார் என இந்து அமைப்புகள் ஒரு வீடியோவை வெளியிட்டுக் கூறின. ஆனால், அதற்கு சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவில், தன்னை விடுதியில் அதிகமாக வேலைசெய்யச் சொன்னதால், தான் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி தெரிவித்திருந்தார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளோம் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி
1 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம்
இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இந்நிலையில், இன்று (பிப். 11) மாநிலங்களவையில் பதிலுரை அளித்து
பேசிய நிர்மலா சீதாராமன், “நிலைத்த
பொருளாதாரத்திற்கான பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். பாஜகவுக்கு முந்தைய ஆட்சிக்
காலத்தில் விலைவாசி உயர்வு 9.1 சதவீதமாக இருந்தது. கொரோனா காலத்திலும் விலைவாசி உயர்வை
6.2 சதவீதமாக கட்டுப்படுத்தியுள்ளோம்.
மத்திய பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதற்காக ட்ரோன் பயன்பாட்டைக் கொண்டு
வந்துள்ளோம். ட்ரோன் பயன்பாட்டின் மூலம் பூச்சிக்கொல்லிகள், உரங்களின் பயன்பாட்டை மேம்படுத்த முடியும்” என பேசினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
உலக அளவில் ஓராண்டில் 2.3 கோடி கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன
காணொளிக் குறிப்பு, உலகளவில் ஓராண்டில் 2.3 கோடி கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன
உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.3 கோடி கருச்சிதைவுகள் நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளையின பெண்களை விட கருப்பின பெண்களிடையே இந்த ஆபத்து 40% அதிகம்.
தாங்கள் கவனிக்கப்படுவதில்லை என்று பல கருப்பினப் பெண்கள் கருதுகின்றனர்.
நடாஷாவுக்கு 12 ஆண்டுகளில் 8 கருச்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒரு கருச்சிதைவு 19 வாரங்களில் நடந்தது.
"நான் கேட்கும் ஒரு கேள்வி அல்லது நான் எப்படி உணர்கிறேன் என்று கூறுவது, அல்லது ஒரு சூழ்நிலையை விளக்குவது ஒரு பக்கமாக ஒதுக்கப்படுவதாக நான் உணர்ந்த நேரங்கள் உண்டு.
எனக்குத் தெரியவில்லை. இது இனம் சார்ந்ததா அல்லது பெண்கள் சார்ந்த விஷயமா என்று தெரியவில்லை," என்கிறார் நடாஷா.
கருப்பின, ஆசிய, சிறுபான்மை இன பெண்கள், மகப்பேறு பரமாரிப்பை பொறுத்தவரை வெள்ளையின பெண்களை விட மோசமான விளைவுகளை எதிர்கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.