புதுச்சேரி ஹிஜாப் விவகாரத்தை விசாரிக்க புதிய அதிகாரி - கல்வி அமைச்சர்

புதுச்சேரியில் பள்ளி மாணவியிடம் ஹிஜாப் அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்ததாக எழுந்த புகாரில் ஏற்கெனவே விசாரணை நடத்திய கல்வி அலுவலர் மீது நம்பிக்கை இல்லை என சமூக நல அமைப்புகள் புகார் கூறின. இதையடுத்து புதிய அதிகாரியை கல்வித்துறை நியமித்திருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

அ.தா. பாலசுப்ரமணியன் and நந்தினி வெள்ளைச்சாமி

  1. ஆபாச இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் - சட்டம் இயற்றிய இங்கிலாந்து

      • எழுதியவர், ஷியோனா மெக்கலம்
      • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
    செல்போன் - மாதிரிப்படம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    இங்கிலாந்தில் உள்ள ஆபாச இணையதளங்கள், புதிய இணைய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் தங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்பதைச் சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

    இணைய பாதுகாப்பு வரைவு மசோதாவின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தச் சட்டம் ஆபாசமான விஷயங்களில் இருந்து குழந்தைகளுக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    பயனர்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளாக, கிரெடிட் கார்ட் வைத்திருப்பதை நிரூபிக்கவோ அல்லது மூன்றாம் தரப்பு சேவையின் மூலம் தங்கள் வயதை உறுதிப்படுத்தவோ மக்கள் கேட்கப்படுவார்கள்.

    இதன்படி செயல்படத் தவறும் தளங்களுக்கு, அவற்றின் உலகளாவிய வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கப்படும்.

  2. பாஜக அலுவலகம் மீது குண்டு வீச்சு: தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை

    அண்ணாமலை

    பாஜக அலுவலகம் மீது குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து, தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இன்று அதிகாலையில் பாஜகவின் மாநிலத் தலைமையகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, "தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. மாநிலம் முழுவதும் பாஜக அலுவலகங்கள், தேர்தல் பணிமனைகள் மீது தாக்குதல் நடக்கின்றன.

    முதலமைச்சர் கவனம் கொடுத்து இதை நிறுத்தவில்லையென்றால் என்ன ஆகுமென்று எனக்குத் தெரியவில்லை.

    யார் சொல்லி இதைச் செய்தார்கள் என்று தெரியவேண்டும். இதையெல்லாம் தனிமனிதர் செய்ய வாய்ப்பில்லை. இது மிகப் பெரிய சதி.

    ஆகவேதான் இதனை என்ஐஏ விசாரிக்கவேண்டும் எனக் கோருகிறோம். யார் இதைச் செய்ததாக கைது செய்யப்பட்டாரோ அவருக்கும் கல்விக்கும் பல்லாயிரக்கணக்கான மைல் இடைவெளி இருக்கிறது.

    இதைச் செய்தவருக்கு 'நீட்' என்ற வார்த்தை தெரியுமா என்பது தெரியவில்லை. அதன் விரிவாக்கம், அர்த்தம் தெரியுமா என்பது தெரியவில்லை.

    டாஸ்மாக் வேண்டாமென்று குண்டு வீசியதாக சொல்லப்பட்ட நபர், இப்போது குடித்துவிட்டுவந்து குண்டு வீசியதாகச் சொல்கிறார்கள். இதைச் செய்யச் சொன்னவர் இங்கே வந்திருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகவேதான் இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க இந்த விவகாரத்தை என்ஐஏ விசாரிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

  3. உ.பி தேர்தல்: இதுவரை 20.03% வாக்குகள் பதிவு

    உத்தரப் பிரதேச தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 11 மணி நிலவரப்படி, 20. 03% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 58 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

  4. பா.ஜ.க. அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது ஏன்?, முரளிதரன் காசி விஸ்வநாதன்

    நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.கவின் நிலைப்பாட்டைக் கண்டித்தேபா.ஜ.கவின் மாநில தலைமையகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீசியதாக கைதுசெய்யப்பட்ட நபர் கூறியுள்ளார். இவர் இதற்கு முன்பாகவும் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

    சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.கவின் மாநிலத் தலைமையகமான கமலாலயம் மீது இன்று அதிகாலை 1.20 மணியளவில் பெட்ரோலால் நிரப்பட்ட பாட்டில்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசிச் சென்றார். இந்த விவகாரத்தில் நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

    இந்தத் தாக்குதல் சம்பவம் ஏன் நடைபெற்றது என்பது தொடர்பாக சென்னை நகரக் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியதில், பழைய குற்றவாளியான வினோத்என்ற கருக்கா வினோத் இந்தச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (38) கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.கவின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் நிரப்பிய மூன்று பாட்டில்களைவீசியது தெரியவந்தது.

    இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும் இவ்வாறு பொதுப் பிரச்சனைகளில் தானாகவே தலையிட்டு, குடிபோதையில் இதுபோன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்ட வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி என்றும் இவர் மீது 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 10 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுதவிர, 2015ஆம் ஆண்டு மாம்பலம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதும் 2017ஆம் ஆண்டில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்துள்ளது" எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

  5. ஹிஜாப் வழக்கு விசாரணை அமர்வு குழுவில் முஸ்லிம் பெண் நீதிபதி, இம்ரான் குரேஷி

    Hijab row

    பட மூலாதாரம், Getty Images

    ஹிஜாப் விவகாரம் குறித்த வழக்கை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட நீதிபதி அமர்வு குழுவில், முஸ்லிம் பெண் நீதிபதி ஒருவரையும், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி நியமித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மதியம் 2: 30 மணியளவில் நடைபெறுகிறது.நீதிபதி ஜெய்புனிஸ்ஸா மொஹிதீன் காசி கடந்த ஆண்டு மாவட்ட நீதிபதி பதவியிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்ந்தார். அவர் தலைமை நீதிபதி தலைமை தாங்கும் இந்த அமர்வு குழுவில் மூன்றாவது உறுப்பினர் ஆவார்.இந்த வழக்கு குறித்து மூன்று நாட்கள் விசாரித்த அக்குழுவின் இரண்டாவது உறுப்பினர் நீதிபதி கிருஷ்ணா தீட்சித், இதில் அரசியலமைப்பு கேள்விகளும், தனிநபர் சட்டங்களும் இருப்பதால் பெரிய அமர்வு குழுவுக்குபரிந்துரை செய்தார்.

    கர்நாடகா மாநிலத்தில், உடுப்பியில் உள்ள அரசு பல்கலைக்கழக புகுமுக கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டவில்லை. இதனால், அங்கு படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும், இது காவி துண்டு அணிவது குறித்த விவாதத்தையும் எழுப்பியது.

    இதனையடுத்து, கடந்த 5 ஆம் தேதி, ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் செவ்வாய்கிழமையன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

  6. உ.பி. தேர்தல்: வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் செய்த ஏற்பாடுகள் - பிபிசி தமிழ் நேரலை

    உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல் ஆணையம் செய்திருக்கும் புதுமையான ஏற்பாடுகள். பிபிசி தமிழ் செய்த ஃபேஸ்புக் நேரலை.

  7. உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவு

    உத்தரப்பிரதேசத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது வாக்களிக்கச் செல்லும் ஒரு பெண்.

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, உத்தரப்பிரதேசத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது வாக்களிக்கச் செல்லும் ஒரு பெண்.

    உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இன்று தொடங்கி 7 கட்ட வாக்குப் பதிவுகள் வரும் ஒரு மாத காலத்தில் நடக்கவுள்ளன. இன்று தொடங்கிய முதல் கட்ட வாக்குப் பதிவு, பாஜக-வுக்கு சோதனைக் களமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் நடக்கிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 58 தொகுதிகளில் வாக்காளர்கள் இன்று வாக்குப் பதிவு செய்கின்றனர்.

    இன்று வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் சில இந்தியத் தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்திருக்கக்கூடியவை.

  8. பா.ஜ.க. மாநிலத் தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது

    சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.கவின் மாநிலத் தலைமையகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தியாகராய நகரில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயம் அமைந்திருக்கிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் அந்தத் தெருவுக்குள் வந்த ஒருவர், பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்.

    அந்த அலுவலகத்தின் முன் கதவு சாத்தப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடந்தது.

    இதற்குப் பிறகு அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்ததில், இருசக்கர வாகனத்தின் எண் கண்டுபிடிக்கப்பட்டு, நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  9. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள் நன்றி.