கர்நாடகாவில் பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய உரிமை கோரி சில மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தெரிவித்துள்ள கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார் ஒவைஸி.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நந்தினி வெள்ளைச்சாமி
பிப்ரவரி 9ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
ஹிஜாப் சர்ச்சை: எங்களுடைய வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம் - ஒவைஸி
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, அசாதுதீன் ஒவைஸி
ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஆதரவான கருத்துகளுக்கு அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். "இது எங்கள் வீட்டுப் பிரச்னை. இதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் போது ஒவைஸி பேசினார்.
“பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றை சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள், அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்னை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை பாருங்கள். இந்த நாடு என்னுடையது. இது உங்களுடையது அல்ல. இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க முயன்றால் காயமடையும் என்று ஒவைஸி எச்சரிக்கும் வகையில் பேசினார்.
கோவை தேவாலய தாக்குதல்: இந்து முன்னணியினர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு
பட மூலாதாரம், JOE RAEDLE
ராமநாதபுரத்தில் அமைந்துள்ள டிரினிட்டி தேவாலயத்தை கடந்த ஜனவரி 23-ம் தேதி மர்ம நபர்கள் தாக்கினர்.
இதில், தேவாலயத்தின் முகப்பில் அமைந்திருந்த செபஸ்தியர் சிலை கடும் சேதத்திற்கு உள்ளாகியிருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ராமநாதபுரம் காவல்துறையினர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த தீபக், மதன்குமார், மருதாச்சல மூர்த்தி மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்திருந்தனர்.
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலைக்கு எதிர்வினையாக டிரினிட்டி தேவாலயத்தை தாக்கியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், டிரினிட்டி தேவாலயத்தை சேதப்படுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் தவிர இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் ஹிஜாப் அணிந்து பிரச்சாரம் செய்த வேட்பாளர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் பல வழிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாநகராட்சி 78வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோமதி காட்டுதுறை செல்வபுரம் பகுதியில் இன்று ஹிஜாப் அணிந்து வாக்கு சேகரித்தார்.
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஹிஜாப் அணிந்து பிரச்சாரம் செய்வதாக கோமதி காட்டுதுரை தெரிவித்தார்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் பெரிய எதிரி: பிரதமர் நரேந்திர மோதி
பட மூலாதாரம், ANI
வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் ஒரே குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக கட்சியை வழிநடத்தி வருவதை பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோதி ஏஎன்ஐ செய்தி
முகமையின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார்.
இப்பேட்டியில் பிரதமர் நரேந்திர மோதி பேசியதன்
முக்கிய அம்சங்கள்:
மாநிலங்களின் விருப்பங்களை பாஜக மதிப்பதில்லை
என்பது தொடர்பான விமர்சனம் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “நாட்டின் முன்னேற்றத்திற்கு பிராந்திய
சிந்தனைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
நானும் மாநில முதல்வராக இருந்திருக்கிறேன்,
மாநிலங்களின் விருப்பங்களை புரிந்துகொண்டுள்ளேன். முன்பு, இந்தியாவுக்கு வருகை தரும் தலைவர்கள் டெல்லிக்கு மட்டுமே வருவார்கள்.
ஆனால், இப்போது, அவர்களை
நான் பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்” என தெரிவித்தார்.
தமிழகம் குறித்து பேசிய பிரதமர் மோதி, “ஒரு கட்சி ஒரே குடும்பத்தால்
தலைமுறை தலைமுறையாக நடத்தப்படும்போது, அங்கு வாரிசு அரசியல் மட்டுமே
இருக்கும், ஆக்கம் தரும் செயல்கள் இருக்காது. ஜம்மு-காஷ்மீர்
முதல், இரு வேறு குடும்பங்களால் நடத்தப்படும் இரு கட்சிகள்
உள்ளன. அதே போக்கை ஹரியாணா, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணலாம்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் பெரிய எதிரி” என தெரிவித்தார்.
காங்கிரஸ்
எம்.பி ராகுல் காந்தி குறித்து மறைமுகமாக விமர்சித்த பிரதமர், “நாடாளுமன்றத்தை தவிர்க்கும்,
கவனிக்காத ஒருவருக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்றார்.
வேளாண்
சட்டங்கள் குறித்து பேசிய பிரதமர்,
“ நான் விவசாயிகளின் இதயங்களை வெல்ல வந்தேன், அதனைச்
செய்துமுடித்தேன். சிறு விவசாயிகளின் வலியை நான் புரிந்துகொண்டுள்ளேன். வேளாண் சட்டங்கள்
விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால், தேசத்தின்
விருப்பத்திற்காக அவை திரும்ப பெறப்பட்டன” என தெரிவித்தார்.
“ஊழல்
வழக்குகளில் தேசத்தின் சொத்துக்கள் விசாரணை முகமைகளால் மீட்கப்படுவதற்கு, அரசாங்கத்தைப் பாராட்ட
வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு
பட மூலாதாரம், GETTY IMAGES
தமிழகத்தில் இன்று (பிப். 09) 3,971
பேருக்கு புதிதாக கொரோனா
தொற்று ஏற்பட்டுள்ளது.
இத்துடன் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,24,476ஆக உயர்ந்துள்ளது.
இன்று
1,10,494 மாதிரிகள்
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1,05,003 தனி நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில்
அரசு சார்பாக 69 மற்றும் தனியார் சார்பாக 262 என, மொத்தம் 331 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று
மட்டும் 16,473 பேர்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனா தொற்றால் குணமடைந்தோரின்
எண்ணிக்கை 33,09,032ஆக
உள்ளது.
இன்று
தனியார் மருத்துவமனைகளில் 12 பேர்,
அரசு மருத்துவமனைகளில் 16 பேர் என 28 பேர் கொரோனா
தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,837ஆக உள்ளது.
இந்த
தகவல்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கே பெரும்பான்மை - பிரதமர் நரேந்திர மோதி
பட மூலாதாரம், ANI
5 மாநில தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையுடன்
வெற்றி பெறும் என இந்திய பிரதமர்
நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி ஏஎன்ஐ செய்தி முகமையின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில், 5 மாநில தேர்தல்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப்
பேசி வருகிறார்.
அதில் அவர், 5 மாநில சட்டப்பேரவைத்
தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். “மக்களுக்கு எப்போதும் பாஜக சேவையாற்றி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும்
பாஜக அலை வீசுகிறது. அறுதிப்பெரும்பான்மையுடன் அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும். 5 மாநில மக்களுக்கு சேவையாற்ற அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.
ஹிஜாப்: மாணவி முஸ்கானுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகள் ஆதரவு
பட மூலாதாரம், Maryam Nawaz Sharif/Twitter
கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும்
எதிர்ப்பு மாணவர் குழுவினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து,
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு
உத்தரவிட்டது.
இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில்
ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் எனும் மாணவியை நோக்கி, காவித்துண்டு அணிந்திருந்த மாணவர்கள் சிலர்,
‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். அப்போது மாணவி
முஸ்கான், ‘அல்லாஹூ அக்பர்’ என கூறினார்.
மாணவி இவ்வாறு கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அம்மாணவிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும் குவிகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசியல் தலைவரும்
அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகளுமான மரியம் நவாஸ் ஷெரிப், மாணவி முஸ்கானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தன்
ட்விட்டர் பக்கத்தின் முகப்புப்படமாக, அம்மாணவியின் புகைப்படத்தை
மாற்றியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அணுக்கரு இணைவு சோதனையில் முக்கிய மைல்கல்
பட மூலாதாரம், JET/UKAEA
படக்குறிப்பு, ஜெட் ரியாக்டர்
அணுக்கரு இணைவு தொடர்பான செயல்முறையின் நீண்ட கால தேடலில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, ஐரோப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அணுக்கரு இணைவு என்பது நட்சத்திர உருவாக்கத்தின்போது நடக்கும் ஒரு நிலை. இந்த நிலையின்போது
அதிகளவிலான ஆற்றல் கிடைக்கிறது.
இரு ஹைட்ரஜன் அணுக்கருவை ஒன்றாக இணைக்கும்போது
வெளியாகும் ஆற்றலின் அளவில், பிரிட்டனின் ஜெட் லேபரேட்டரி
தன்னுடைய சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளது.
அணுக்கரு இணைவு பூமியில் வெற்றிகரமாக மீளுருவாக்கம் செய்யப்பட்டால்,
குறைந்தளவிலான கார்பன் டை-ஆக்சைடு, கதிரியக்க உமிழ்வை
கொண்டுள்ள எல்லையற்ற ஆற்றல் உருவாகும் சாத்தியம் ஏற்படும்.
இந்த சோதனையில் 5 நொடிகளில் 59 மெகாஜூல்ஸ் (11
மெகாவாட் மின்சக்தி) அளவிலான ஆற்றல் உருவானது.
இது கடந்த 1997-ல் இதேமாதிரியிலான சோதனையில் உருவான ஆற்றலை
விட இருமடங்காகும்.
இந்த சோதனை வெற்றியடைந்தால், எதிர்காலத்தில்
பக்கவிளைவுகள் இல்லாத, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையிலான ஆற்றல் மூலம் மின்சக்தி பயன்பாட்டை
உருவாக்கலாம் என்பதால், இந்த சாதனை முக்கியமானதாக கருதப்படுகிறது.
உ.பி. தேர்தல்: ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி - காங்கிரஸ் வாக்குறுதி
பட மூலாதாரம், ANI
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையான ‘உன்னட்டி
விதான் ஜன் கோஷ்னா பத்ரா-2022’ஐ காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தர பிரதேசத்துக்கான
தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டார்.
இதனை
வெளியிட்டுப் பேசிய பிரியங்கா காந்தி,
“உத்தரபிரதேச மக்களிடமிருந்து வந்த அனைத்து பரிந்துரைகளும் எடுத்துக்
கொள்ளப்பட்டன. ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். 20 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள்
உருவாக்கப்படும்.
எந்த
நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும். மாட்டுச்
சாணம் ஒரு கிலோவுக்கு ரூ.2 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். சிறு மற்றும் நடுத்தர
தொழில்கள் ஊக்குவிக்கப்படும்.
பள்ளிக்
கட்டணம் கட்டுப்படுத்தப்படும். சுமார் 2 லட்சம் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மழலையர் வகுப்பு முதல்
முதுநிலை கல்வி வரை பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு
இலவச கல்வி வழங்கப்படும்” என தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நேபாள எல்லையில் சீன ஊடுருவல்: பிபிசிக்கு கசிந்த அரசின் அறிக்கை சொல்வது என்ன?
பட மூலாதாரம், NAMKHA RURAL MUNICIPALITY
படக்குறிப்பு, நேபாளத்தின் ஹூம்லா பகுதியில் தெரியும் சீன கட்டடங்கள்
சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை பிபிசிக்கு கிடைத்துள்ளது.
மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த அறிக்கை தயாரிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. அதே சமயம் பிபிசியின் கேள்விகளுக்கும் நேபாள அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட்
பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகரத்தில் தாம் பேராயராக இருந்தபோது பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டத்தில் தவறுகள் நடந்ததாக, முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
தாம் ஏதேனும் 'மிகவும் மோசமான தவறு' செய்திருந்தால் மன்னிக்குமாறு, வாட்டிகனில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையாகத்தால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் முன்னாள் போப்பாண்டவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், தனிப்பட்ட தவறுகளை தாம் செய்யவில்லை என்றும் மறுத்துள்ளார்.
"கத்தோலிக்க திருச்சபையில் நான் பெரும் பொறுப்புகளை வகித்துள்ளேன். அக்காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த துன்புறுத்தல்கள் மற்றும் தவறுகளுக்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன்" என அவர் தெ்ரிவி்த்துள்ளார்.
கல்வி மையங்களில் சீருடை அணிவதை பின்பற்ற வேண்டும்: ஆதித்யா தாக்கரே
பட மூலாதாரம், ANI
கல்வி மையங்களில் சீருடை அணிவதை பின்பற்ற
வேண்டும் என மகாராஷ்டிரா
அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் அணிய உரிமை கோரி அந்த உயர்
நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மாநிலத்தின் இரு மாவட்டங்களில்
மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் காவி
சால்வை அணிந்து போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும்
எதிர்ப்பு மாணவர் குழுவினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து,
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு
நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே
இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“பள்ளிகள்/கல்லூரிகளில் குறிப்பிட்ட சீருடைதான் அணிய வேண்டும் எனும்போது,
அதனை பின்பற்ற வேண்டும். கல்வி மையங்களில் கற்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். மதம் அல்லது அரசியல்
ரீதியான பிரச்னைகள் பள்ளிகள்/கல்லூரிகளுக்குள் கொண்டு வரப்படக் கூடாது” என கூறியதாக,
ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நெல்லை வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள், பொருட்கள் தீயில் கருகி சேதம்
படக்குறிப்பு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர்
நெல்லை வங்கியில் ஏற்பட்ட தீ
விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், பொருட்கள் தீயில் கருகி சேதமாயின.
நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் இயங்கி
வரும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள இன்வெர்ட்டரில் திடீரென தீ
ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அந்த தீ வங்கி முழுவதும் வேகமாக
பரவத் தொடங்கியதால் பதறிப்போன ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல்
தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் வந்சு சுமார்
2 மணி நேரமாக போராடி தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கி கட்டடத்தின் சீலிங் பகுதியில்
உள்ள தெர்மாகோல் தீப்பிடித்து எரிந்ததால் வங்கியில் இருந்து அதிக புகை மூட்டம்
வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளிக்கிறது.
இந்த வங்கியில் இருந்த பல
லட்சம் மதிப்பிலான கணினிகள், பணபரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் நகை கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்
ஆவணங்கள் தீயில் கருகி சேதம் ஆனதாக கூறப்படுகிறது.
வங்கியில் வைக்கப்பட்டிருந்த
பணமும் தீயில் கருகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முடி திருத்தும் நிலையத்தில் சாதிய பாகுபாடா? - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்திலுள்ள பட்டியல் பிரிவைச்
(எஸ்.சி) சேர்ந்தவர்களுக்கு
முடி திருத்துவதில்லை எனும் புகார் தொடர்பான வழக்கில்,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு
பகுதியை சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற
மதுரைக்கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி
கிராமத்தில் 600 குடும்பங்கள்
வசிக்கின்றன. இதில், பெரும்பான்மையாக கோனார், கள்ளர் மற்றும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
வசிக்கின்றனர். இதில், 150 குடும்பங்கள் பட்டியல் (பறையர்) பிரிவைச்
சேர்ந்தவர்கள். இவர்கள் மிக ஏழ்மையான நிலையில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் கூலித்தொழிலாளியாக உள்ளனர்.
இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக 3 முடி திருத்தும் நிலையங்களும், 1 சலவை நிலையமும் உள்ளது. ஆனால், இங்கு செயல்படும் முடி திருத்தும்
நிலையத்தில் எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை.
எனவே, இந்த புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு
செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று (பிப். 09) விசாரித்த
நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு,"புகார் உண்மையாக இருப்பின் மிகப்பெரிய
பிரச்னை. குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யேகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா? ஏன் இது போன்ற பாகுபாடு உள்ளது?” என கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, மனுவுக்கு புதுக்கோட்டை மாவட்ட
ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு
விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
படக்குறிப்பு, திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழிசை
புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சுற்றுலா துறை சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் சுடுகளிமண் சிற்ப பூங்கா மற்றும் 40 கிலோவாட் சூரிய சக்தி மின்னாற்றல் அமைப்பு திறப்பு விழா இன்று (பிப். 09) நடைபெற்றது. இதில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சுடுகளிமண் சிற்ப பூங்கா மற்றும் 40 கிலோவாட் சூரிய சக்தி மின்னாற்றல் அமைப்பை திறந்து வைத்தார்.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, "புதுச்சேரியில் 35 லட்சம் ரூபாய் செலவில் இந்த சுடுகளிமண் சிற்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. பட்ஜெட்டிலும் இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படவுள்ளது" என்றார்.
புதுச்சேரியில் அரசு பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்த மாணவியை தடுத்ததாக எழுந்த புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழிசை, "மாணவர்கள் சீருடை விவகாரத்தில் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை உரிய முடிவெடுக்கும்" என தெரிவித்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஹிஜாப் வழக்கு: அதிக நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்த நீதிபதி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப்
அணியும் விவகாரம் வகுப்புவாத வன்முறையாக தீவிரம் அடைந்து வரும் நிலையில், அந்த விவகாரம் தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றியிருக்கிறார் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி.
ஹிஜாப் அணிய உரிமை கோரி அந்த உயர் நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மாநிலத்தின் இரு
மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள்
சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தியனர்.
கர்நாடகாவில் ஹிஜாப் ஆதரவு மற்றும்
எதிர்ப்பு மாணவர் குழுவினர் இடையே வன்முறை மற்றும் மோதல்கள் வெடித்ததையடுத்து,
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூன்று நாட்களுக்கு மூட மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் நடவடிக்கை தங்களுடைய
அரசியலமைப்பு உரிமையை மீறும் வகையிலும் இருப்பதாகக் கூறி, சுஹா மெளலானா, அய்ஷா அலீஃபா ஆகிய உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த இரு அரசு
பல்கலைக்கழக முன் கல்லூரி மாணவிகள், குந்தாபூரைச்
சேர்ந்த தனியார் கல்லூரியின் இரு மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த
வாரம் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (பிப். 09) விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நியாய விலை கடைகளில் வாங்காத பொருட்களை வாங்கியதாக குறுஞ்செய்தி: ஓபிஎஸ் புகார்
பட மூலாதாரம், Getty Images
குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 09) வெளியிட்ட அறிக்கை:
“அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் நியாய விலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவை முக்கியப் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக திகழும் இவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்கியவுடன் அவர்களுடைய கைபேசிகளுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. ஆனால், வாங்கப்படாத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.
எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளிலும், நியாய விலை கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டினை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
“திமுக ஒரு நாடக கம்பெனி - அதன் ரீல் அறுந்துவிட்டது”: அண்ணாமலை பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சி பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டர்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
“கடந்த 8 ஆண்டுகளாக களத்தினை தயார்படுத்தி பாஜக வேட்பாளர்களை போட்டியிட வைத்துள்ளோம். பாஜக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.
திமுக என்றைக்கு தமிழகத்தை விட்டுப் போகிறதோ அன்று தான் நல்லாட்சி.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள். இதுகுறித்து மக்கள் கேட்பார்கள் என்பதால் முதல்வர் காணொலி காட்சி மூலமாக பிரச்சாரம் செய்கிறார்.
உதயநிதி துபாயில் உள்ளார்.
நீட் ‘டிராமா’ கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்களின் ‘ரீல்’ அறுந்து போய்விட்டது. ஏழை எளிய மக்கள் நீட் தேர்வினால் அதிகம் பயன்பெற்றுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் தான் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். இதில் சதி உள்ளது.
திமுக ஒரு நாடக கம்பெனி - அதனை உடைப்போம். உள்ளாட்சியில் விழும் வாக்குகள் பிரதமர் மோதி நல்லாட்சிக்கு விழும் வாக்குகள்”.
இவ்வாறு அவர் பேசினார்.
ராமேஸ்வரம் மீன்வளத்துறையை கண்டித்து மீனவர்கள் நூதன போராட்டம்
படக்குறிப்பு, மீனவர்கள் போராட்டம்
கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தாத மீன்வளத் துறையினரை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தீவுப் பகுதி மற்றும் கரையோர மீன் பிடிப்பை நம்பி தொழில்செய்து வருகின்றனர்.
சிறு தொழில் மீனவர்கள் கடல் வளத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீன்பிடித்து வருவதாகவும் ஆனால், விசைப்படகு மீனவர்கள் இழுவை வலைகளை பயன்படுத்தி கரையோர பகுதியில் மீன் பிடித்து நாட்டுப்படகு மீனவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவதாகவும் நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, கரையோர மீன் பிடிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் மீன் வளத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறையினரை கண்டித்து, ராமேஸ்வரம் தீவு அனைத்து நாட்டுப்படகு மற்றும் சிறுதொழில் மீனவர்கள் சுமார் 50-க்கும் அதிகமானோர் கழுதைக்கு பூ மாலை அணிவித்து கழுதை கழுத்தில் மீன் வளத்துறை என எழுதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் முன் கழுதைக்கு மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காதில் பூ சுற்றிக்கொண்டு மீன் வளத்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.