கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதை தடை செய்யும் அரசாணைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், மாணவ சமுதாயம் உணர்ச்சி வசப்படாமல் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடகாவில் குறிப்பிட்ட சில பள்ளிகளின் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வந்த செயல்பாடு சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், ஹிஜாப் அணிந்து வர அனுமதித்தால் காவி நிற ஆடையில் வருவோம் என மற்றொரு தரப்பும் போராட்டத்தில் குதித்துள்ளது.
பள்ளி வளாக அளவில் நடைபெற்ற இந்த போராட்டம் இப்போது கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இருந்து மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் நகரங்களில் வன்முறையாக விரிவடைந்தது.
தாவணகெரேவில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
ஷிவமொக்காவில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலோர நகரான உடுப்பி மற்றும் குந்தாபுராவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் தொடங்கிய கல் வீச்சு சம்பவங்கள், வடக்கு கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள பன்னஹட்டி வரை பரவியது.
அதே நேரத்தில் ஷிவமோகாவில் இரண்டு கல்லூரிகளில் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது. அங்கு கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டது. உடுப்பியிலும், பன்னஹட்டியிலும் மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலப்பிரயோகம் செய்து காவல்துறையினர்
தாவணகெரேவில் போராட்டக்காரர்கள் கற்களை வீசி வாகனங்களுக்கு தீவைக்க முயன்றதைத்தொடர்ந்து இந்த வன்முறை தீவிரமானது.
இந்த விவகாரத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திடமும், கர்நாடகா மக்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுங்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கோரப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.