தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,916 ஆக பதிவு, 30 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,916 ஆக பதிவானதாகவும் 30 பேர் இறந்துள்ளதாகவும் மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த நான்கு பயணிகள், இலங்கையில் இருந்து வந்த ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த ஆறு பேர், ஆந்திராவில் இருந்து வந்த நால்வர், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
மாநிலத்தில் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 1,55,329 உள்ளது என்றும் அந்த இயக்குநரகம் இன்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 1,475 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 9 பேர் கொரோனா உயிரிழப்பு என்று பதிவாகியிருக்கிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 1,224 பேருக்கும் செங்கல்பட்டில் 983 பேருக்கும், திருப்பூரில் 857 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதா: நாடாளுமன்றத்தை தவறாக திசை திருப்புகிறார் டி.ஆர். பாலு - வானதி ஸ்ரீனிவாசன்
நீட் விலக்கு தொடர்பான தீர்மானம் மற்றும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது பாரதிய ஜனதா கட்சியும் அதை ஆதரித்ததாக மக்களவையில் திமுக உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு பேசி நாடாளுமன்றத்தை தவறாக திசை திருப்பியிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டபோது பாஜக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நீட் விலக்கு சர்ச்சை: தீவிரமாகும் ஆளுநர், தமிழக அரசு மோதல் - அதிகாரத்தை மீறுகிறாரா ஆர்.என்.ரவி?
பட மூலாதாரம், ㅤ
படக்குறிப்பு, கோப்புப்படம்
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நடவடிக்கை, அரசியல் சர்ச்சையாக மாறி, மாநில அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் என்ன?
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை (Undergraduate Medical Degree Courses Bill, 2021), சட்டப்பேரவை சபாநாயகரின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்ச மசோதா நிறைவேற்றப்பட்ட சுமார் 5 மாதங்களுக்குப் பின் தமது நிலைப்பாட்டை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் என்ன? ஒரு சட்ட மசோதாவுக்கு அவர் அனுமதி கொடுக்க என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? இது குறித்து சட்ட நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
இந்திய நாடாளுமன்றத்தில் அசாதுதீன் ஓவைசி பேச்சு: மரணத்திற்கு பயப்படவில்லை. நீதி வேண்டும்
மரணத்திற்கு பயப்படவில்லை. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம், அதை நிராகரிக்கிறேன் என்று ஏ ஐ எம் ஐ எம் கட்சி தலைவரும் எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி இந்திய நாடாளுமன்றத்தில் கூறுகையில், ''நான் மரணத்திற்கு பயப்படவில்லை. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம், அதை நிராகரிக்கிறேன். என்னை 'ஏ' வகை குடிமகனாக ஆக்குங்கள். நான் அமைதியாக இருக்க மாட்டேன். தயவு செய்து நீதி வேண்டும். அவர்கள் மீது (சுட்டவர்கள்) உபா வழக்கு போடுங்கள். வெறுப்பு, தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு சொல்லுங்கள்.'' என்றார்.
அசாதுதீன் ஓவைசி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.
''பிரசாரம் முடிந்து டெல்லி நோக்கி காரில் சென்ற போது, சாஜர்சி சுங்கச்சாவடி அருகே 4 பேர் திடீரென என் கார் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். அதில் காரின் டயர்கள் பஞ்சர் ஆயின'' என்று ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் வரும் 7ஆம் தேதி விரிவான பதில் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கோவிட்: மாடர்னா தடுப்பூசியின் வடிவத்தை சொந்தமாக தயாரிக்கும் ஆப்ரிக்கா
பட மூலாதாரம், AFP
தென்னாப்ரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னா கொரோனா தடுப்பூசியின் பதிப்பை சொந்தமாக தயாரித்துள்ளனர்.
இது ஆப்ரிக்கா முழுவதும் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த கண்டம் தற்போது உலகிலேயே மிக குறைவான கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுள்ளது.
புதிய தடுப்பூசியின் பின்னால் உள்ள நிறுவனமான ஆஃப்ரிஜென் பயோலாஜிக்ஸ் நவம்பரில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கும் என்று நம்புகிறது. இதற்கு முன்பு மாடர்னா நிறுவனம் அதன் தடுப்பூசிக்கான பேட்டன்ட் உரிமையை வெளியார் மீது திணிக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. இதையடுத்து கேப் டவுனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னாவின் மறுபதிப்பை அனுமதிக்கிறது.
இந்தியாவில் அதிகரிக்கும் வேலையின்மை: மெல்போர்ன் கல்வியாளர்கள்
பட மூலாதாரம், Getty Images
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த வார பட்ஜெட் அறிவிப்புகளின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு வைத்துள்ளது. அதனைச் செய்வது எளிமையானது அல்ல. நாட்டின் வேலையின்மை விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவில் வேலையின்மை பற்றி ஆய்வு செய்த கிரேக் ஜெஃப்ரி மற்றும் ஜேன் டைசன் ஆகியோர், இந்தியாவில் வேலையின்மையின் தன்மை குறித்து எழுதியுள்ளனர்.
தான்சானியாவில் கர்ப்பிணி மாணவிகள் பள்ளி செல்ல மீண்டும் அனுமதி
காணொளிக் குறிப்பு, தான்சானியா பள்ளியில் கர்ப்பிணி மாணவிகள்
தான்சானியாவில் கர்ப்பமடையும் மாணவிகள் பள்ளி செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
சிப்காட் விவகாரம்: 424 தகவல் உரிமைச் சட்ட மனுக்கள் தாக்கல் செய்த விவசாயிகள்
காணொளிக் குறிப்பு, சிப்காட் விவகாரம்: நூற்றுக்கணக்கில் தகவல் உரிமைச்சட்ட மனுக்களைத் தாக்கல் செய்த விவசாயிகள்
திருவண்ணாமலை அருகே பாலியப்பட்டு
கிராமத்தில் விளை நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கூடாது
என்று வலியுறுத்தி 45வது நாளாகப் போராடிவரும் விவசாயிகள், அது தொடர்பாக நூற்றுக்கணக்கான
தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களை தாக்கல் செய்தனர்.
சிப்காட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
என்ற அமைப்பின் சார்பில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு
விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்
கொளத்தூர் மணி, மனித உரிமை செயற்பாட்டாளர் சு.கண்ணன், எட்டுவழிச்சாலை எதிர்ப்பியக்க ஒருங்கிணைப்பாளர் அபிராமன், செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முஸ்தாக் பாஷா, இப்ராஹிம் உள்ளிட்டோர்
நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புரட்சிகர
மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்றுள்ள, திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, “இது தகவல் கோரும் நடவடிக்கை மட்டுமல்ல. இத்தனை நாள்கள் போராடினாலும்,
மக்களிடம் தங்கள் திட்டம் குறித்துப் பேச முன்வராத அரசாங்கத்துக்கு தங்கள் குரலை
உரத்துக் கேட்க வைக்கும் முயற்சியும் ஆகும்,”
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
என்னவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன
என்று கேட்டபோது, “தமிழ்நாடு அரசு எங்கெங்கே புதிதாக சிப்காட்
தொழிற்பேட்டை தொடங்கத் திட்டமிட்டுள்ளது? ஏற்கெனவே
சிப்காட் தொழிற்பேட்டைக்கு என கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எவ்வளவு
பயன்படுத்தப்பட்டுள்ளன? என்ன விதமான நிலங்களில் சிப்காட்
அமைக்ககூடாது? என்பது உள்ளிட்ட 25 கேள்விகளை, 424
பேர் தங்கள் மனுக்களில் கேட்டுள்ளனர்,” என்று
தெரிவித்தார்.
பிப்ரவரி 19 நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நிறைவு
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறை இன்றுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 390 பேரூராட்சிகள் என 12,838 வார்டுகளுக்கு பிப்ரவரி 19இல் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதேபோல, 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணி கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. இந்த வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4ஆம் தேதி கடைசி நாள் என்பதால் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இந்த வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5ஆம் தேதி பரிசீலனை செய்யப்படவுள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதன் பிறகு களத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பது தெரிய வரும்.
நீட் விலக்கு: எந்தவொரு மசோதாவையும் திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
படக்குறிப்பு, ஆளுநர்கள் கைப்பாவையாக இருப்பார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக இருப்பார்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் - தமிழிசை சௌந்தரராஜன்
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் நடந்தார் என்று சொல்வது சரியாகாது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீட் சட்ட மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு, "ஆளுநருக்கு மசோதாவை திருப்பி அனுப்ப அதிகாரம் இருக்கிறது. அதிகாரம் இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் ஆளுநர் சில கருத்துக்களை சொல்லிருக்கிறார். அதற்கு சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த மசோதாவாக இருந்தாலும் அதைத் திருப்பி அனுப்ப, ஆளுநருக்கு முழு அதிகாரம் இருக்கிறது," என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "அதே நேரத்தில் ஆளுநர்கள் கைப்பாவையாக இருப்பார்கள், ஆளும் கட்சிக்கு எதிராக இருப்பார்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்படி கிடையாது, எல்லா ஆளுநர்களுமே திறமைசாலிகள். ஒரு பிரச்சினையை எப்படி அணுகுவது என்று தெரிந்தவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு இருக்கின்ற உரிமையைத் தான் ஆளுநர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆகவே, ஆளுநருக்கு மசோதாவை திருப்பி அனுப்ப உரிமை இருக்கிறது. சட்டத்தில் அதற்கு இடமுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பது கிடையாது.
அரசியலமைப்பு சட்டம் 200வது சரத்தில் ஆளுநருக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், மக்களுக்கு அது நல்லதில்லை என்று நினைத்தால் அந்த மசோதாவை திருப்பி அனுப்பலாம் என்ற சரத்து சட்டத்தில் உள்ளது. ஆகவே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எதிராக தமிழக ஆளுநர் நடந்தார் என்று சொல்வது சரியாகாது," என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உடனிருந்தார்.
நீட் விலக்கு மசோதா சர்ச்சைக்கு மத்தியில் பிப்ரவரி 7இல் டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர்
பட மூலாதாரம், RAJ BHAVAN, TAMIL NADU
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் வேளையில் வரும் 7ஆம் தேதி அவர் டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாட்கள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்லவிருப்பதாகவும் அப்போது அவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.ரவி திருப்பி அனுப்பியது குறித்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்து விட்டார்.
இதையடுத்து திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்ட்டு, அமளியில் ஈடுபட்டு, தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டபடி, வெளி நடப்பு செய்தனர். தமிழ்நாடு எம்.பிக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் வெளி நடப்பு செய்தனர்.
"தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது, மாநில உரிமைகளுக்கு எதிரானது. கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால் ஆளுநரை எதிர்த்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.'' என்று திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி பள்ளி விபத்து: தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
படக்குறிப்பு, நெல்லை பள்ளி விபத்து - கோப்பு படம்
திருநெல்வேலியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விபத்தில் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த டிசம்பர் 17ம் தேதி சுகாதார வளாக சுற்றுச் சுவர் இடிந்தது விழுந்தது . இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுவில் "சம்பவம் நடந்த சில மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாகவும், கழிவறை சுற்றுச்சுவர் 2007 லேயே கட்டப்பட்டது,'' என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''மனுதாரர்கள் இருவரும், இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றுள்ளனர். ஆகவே விபத்திற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது'' என கூறி இருவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் 135 ரன்கள், 5 விக்கெட்கள் எடுத்து சாதனை
பட மூலாதாரம், ICC@Twitter
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் காசிம் அக்ரம் பேட்டிங்கில் 135 ரன்களும் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கு இந்திய தீவுகளில் ஜுனியர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன்.
இதில், ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.
முதலிட் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்து 365 ரன் எடுத்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் காசிம் அக்ரம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து பந்து வீச்சில் 37 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால், ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். மேலும் இப்போட்டியில், பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.
பாகிஸ்தான் வீரருக்கு தடை
பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு ஐசிசி தடைவிதித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் 21 வயதான வேகப் பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியா நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின் போது அவரது நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ''ஹஸ்னைனின் செயல் ஐசிசியின் வரம்பை மீறுவதாகவும் அவர் தவறு செய்துள்ளதாகவும்'' விசாரணைக்குப் பிறகு லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் கறுப்பு கொடியுடன் போராட்டம், ரஞ்சன் அருண் பிரசாத்
இந்திய மீனவர்கள் கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசம் செய்வதாக குற்றம்சாட்டி இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் இன்று 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் பகுதியில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தின் போது, வடக்கு மாகாண தமிழர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு சுதந்திர தினத்திலும் போராடி வருவதை அவதானிக்க முடிகின்றது.
''சுதந்திர தினத்தின் போது, தாம் சுதந்திரமின்றி வாழ்ந்து வருவதாக'' பலாலி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் நிரோஷ் குமார் தெரிவிக்கின்றார்.
''இதுவரை தாங்கள் சுதந்திரமாக கடலுக்கு சென்ற போதிலும், இன்று உயிருக்கு பயந்து, கடலுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக'' பலாலி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அன்டனி டினேஷ் தெரிவிக்கின்றார்.
நீட் முதுநிலைப் பட்ட சேர்க்கை 2022: தேர்வு தேதியை ஒத்தி வைத்துள்ளது இந்திய அரசு
பட மூலாதாரம், Getty Images
இந்திய அளவிலான முதுநிலை மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் - 2022 நுழைவுத் தேர்வை 8 வாரங்களுக்கு மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.
இந்திய சுகாதார அமைச்சகம் மருத்துவ முதுநிலைப் சேர்க்கைக்கான நீட் - 2022 தேர்வை வரும் மார்ச் 12ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், "நீட் முதுநிலைப்பட்ட படிப்புக்கான 2021க்கான கலந்தாய்வு நடைபெற்று வருவதால், 2022க்கான தேர்வு தேதியை ஒத்திவைக்க மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகையால், பலரும் பங்கேற்கும் வகையில் தேர்வு தேதியை 8 வாரம் வரை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நீட் முதுநிலை 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 25ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானில் விடிய விடிய துப்பாக்கிச் சூடு - பாதுகாப்பு படையின் தளத்தை குறி வைத்த ஆயுததாரிகள்
பலூசிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் தளத்தை குறி வைத்து ஆயுததாரிகள் தாக்கியதில் ஏழு வீரர்கள் பலியாகினர். விடிய விடிய நடைபெற்ற தாக்குதல் குறித்த வீடியோவைக் காணலாம்.
காணொளிக் குறிப்பு, பலூசிஸ்தானில் படையினரின் தளத்தை இலக்கு வைத்த ஆயுததாரிகள் - ஏழு வீரர்கள் பலி
இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேசப் பேச்சு: சிறந்த, உண்மையான பேச்சாக பார்க்கிறேன் - என்.ராம்
பட மூலாதாரம், SANSAD TV
தமிழ்நாடு குறித்து மக்களவையில் ராகுல்காந்தி பேசிய பேச்சுக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், `மாநிலங்களின் ஒன்றியம் இது. மத்தியில் இருந்து மட்டும் யாராலும் அதிகாரம் செலுத்த முடியாது. அது உண்மை. நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் அது தெளிவாக உள்ளது. ராகுல்காந்தியின் பேச்சு வரவேற்கத்தக்கது,' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்காந்தி ஆற்றிய உரையின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
''அதை ஒரு சிறந்த பேச்சாகவும் உண்மையான பேச்சாகவும் பார்க்கிறேன். அவரது பேச்சுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் சாராம்சம் என்னவென்றால், இது மன்னர் காலம் கிடையாது. மாநிலங்களின் ஒன்றியம் இது.'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம். இது குறித்த அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை படிக்க
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன - பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு, நடராஜன் சுந்தர்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள், கொரோனா தாக்கம் படிப்படியாக குறைவதை தொடர்ந்து இன்று முதல் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜனவரி மாதம் தொடக்கத்திலே கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக, கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் 1 முதல் 9ஆம் வகுப்புகள் மூடப்பட்டன. தொடர்ந்து கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்த்து வருவதால், 1ஆம் வகுப்பு முதல் 12ம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியது. வாரம் 6 நாட்கள் வகுப்புகள் முழுமையாக நடைபெறும். மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்து, அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதை கட்டாயமாக பின்பற்றப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 15 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று முதலே பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தவும் சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்களும் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
நீட் விலக்கு மசோதா: இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஓ பன்னீர்செல்வம் அறிக்கை
இந்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சி அமையும் போது 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இது உறுதி. 8 மாதங்கள் பொறுத்திருங்கள். விடியல் பிறக்கும்" என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, திமுக மவுனமாக இருந்தது .
ஆளுநரைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்றால், என்ன பேசப்பட்டது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நீட் விலக்கு மசோதா தமிழ்நாடை விட்டே செல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதற்கு சரியான தரவுகளை ஆளுநரிடம் எடுத்துரைக்காததே காரணமாகும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்'என்ற பிரச்சனையே வந்திருக்காது'' என்று கூறியுள்ளார்.
எனவே, ''தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் இதில் கவனம் செலுத்தி, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுகொள்கிறேன்.'' என்று தனது அறிக்கையில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது