வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

பட மூலாதாரம், ANI
இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை இடம் பெற்றது.
குடியரசுத் தலைவர் தனது உரையில், ''நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் வணக்கம். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது. சுகாதார கட்டமைப்பு பெருமளவு மேம்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது''. என்றார்.
தமிழக எம்.பிக்கள் முழக்கம்:
குடியரசுத் தலைவர் உரையின் போது, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கோரி திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறுகையில், ''இந்த அரசு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் விவாதிக்க தயாராக உள்ளதாக'' தெரிவித்துள்ளார். தொடர்ந்து நாளைய தினம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும் மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் என இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பட மூலாதாரம், ANI





