பெய்ஜிங்கில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று; நெருங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பறவைகள் வருகை - கணக்கெடுப்பில் தகவல், பிரபுராவ் ஆனந்தன்

    பறவைகள் கணக்கெடுப்பு
    படக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம், மணக்குடி, ராஜாக்கமங்கலம் ஆகிய 3 கடல் சார்ந்த நீர் நிலைகளில் வனத்துறையினர் , பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆபிரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா (அதிலும் குறிப்பாக சைபீரியா), மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் வெளி நாட்டு பறவைகள் வந்து உள்ளதாக வனத்துறை அலுவலர் தீலீபன் தெரிவித்தார்.

    ஆபிரிக்கா, ஐரோப்பியா, சைபீரியா, ரஷ்யா, மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் ஏற்படும். ஆகையால், பறவைகள் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டு, இந்தியாவில் முக்கிய இடங்களுக்கு வலசை வருவது வழக்கம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வந்து முகாமிட்டு இனப்பெருக்கம் செய்யும் வெளிநாட்டு பறவைகளான நாரை, ஊசிவால் வாத்து, உள்ளான் வகைகள் , சோவலர் வாத்து இனங்கள், ரெட் சேன், கிரீன் சேன் உள்ளிட்டவையும் இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள கூழைக் கடா, பல்வேறு நாரை மற்றும் கொக்கு இனங்கள் உள்ளிட்டவையும் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி, சுசீந்தரம், தேரூர் , சாமிதோப்பு ,புத்தளம் உள்ளிட்ட 7 இடங்களில் பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில்,பறவைகளின் கணக்கெடுக்கும் பணி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான மணக்குடி, புத்தளம், ராஜக்கமங்கலம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், வனத்துறையினர், தன்னார்வலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரியில் பறவைகள் கணக்கெடுப்பு
  2. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: சாதனை படைப்பாரா ரபேல் நடால்?

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்

    பட மூலாதாரம், BBC Sport

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் ரஷ்யாவின் மெத்ததேவ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் புதிய உலக சாதனை படைப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதுவரை 20 கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் ரபேல் நடால், இந்த போட்டியின் வெற்றி பெற்று, 21வது பட்டத்தை வென்று உலக சாதனை படைப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இது வரை ரபேல் நடால், ரோஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோர் 20 கிரான்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

  3. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2.34 லட்சம்

    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2,34,281 ஆக பதிவாகியுள்ளது. ஒரு நாளில் மட்டும் 893 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 3,52,784 பேர் நலம் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தினசரி தொற்று விகிதம் 14.50 சதவீதமாக உள்ளது.

    தற்போது வரை மொத்தம் 18,84,937 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை மொத்தம் 1,65,70,692 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. பாலக்காடு – போத்தனூர் வழித்தடத்தில் 20 விபத்துகளில் 27 யானைகள் பலி: ஆய்வுக்குழு அறிக்கையில் தகவல்

    யானைகள் உயிரிழப்பு

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாடு, கேரளா இடையே பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் 2002ல் இருந்து 2021 வரை 20 விபத்துகளில் 27 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் யானைகள் திட்டப் பிரிவுக்கான ஆய்வுக்குழுவின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க 16 பரிந்துரைகளையும் ஆய்வுக்குழு வழங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், பாலக்காடு – போத்தனூர் ரயில் வழித்தடத்தில் இரவு நேரத்தில் ரயில் விபத்துகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பதாக, வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்தது. இந்த வழக்கில், உடனடியாக ஆய்வுக்குழு அமைத்து அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.

    அந்த அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாண்டியராஜா என்பவர் பெற்றுள்ளார். அந்த அறிக்கையின்படி, 2002-ல் இருந்து 2021 நவம்பர் வரையிலான 20 ஆண்டுகளில் 19 ரயில் விபத்துகளில் 26 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 2011ல் இருந்து 2015 வரை 5 ஆண்டுகள் விபத்து எதுவும் நடைபெறவில்லை. கேரள எல்லைக்குள் நடந்த 10 விபத்துக்களில் 12 யானைகளும் தமிழ்நாடு எல்லைக்குள் நடந்த 10 விபத்துக்களில் 15 யானைகளும் உயிரிழந்துள்ளன. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

    ஜூனியர் உலக கோப்பை

    பட மூலாதாரம், BCCI

    ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    மேற்கு இந்திய தீவுகளில் 14வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த போட்டியில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆப்கனிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இப்போட்டியின் இறுதி காலிறுதி ஆட்டத்தில் இந்திய – வங்கதேச அணிகள் நேற்று விளையாடின. இதில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அரையிறுதிப் போட்டிக்கு தகுதியும் பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

  6. இலங்கையில் ஆற்றில் முழ்கி 4 பேர் உயிரிழப்பு: ஒருவரை தேடும் பணி தொடர்கிறது

    இலங்கை கெரன்டி ஆற்றில் நீராடச் சென்ற ஐவர் நீரில் மூழ்கியதில், நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இலங்கை பதுளை மாவட்டம் எட்டம்பிட்டி பெருந்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், 11 பேர் அடங்கிய குழு, ஆற்றுக்கு நீராடச் சென்றது. இந்த ஆற்றின் ஆழமான பகுதியில் நீராடிக் கொண்டிருந்த தருணத்திலேயே, இந்த இளைஞர், யுவதிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக, போலீஸார் கூறுகின்றனர்.சம்பவத்தில் எட்டம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ராஜா டேவிட் குமார், 21 வயதான சிவ சுப்ரமணியம் காஞ்சனா, 22 வயதான பவானி, 18 வயதான சிந்து மற்றும் 20 வயதான சிரியா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நால்வரின் சடலங்கள், மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.அத்துடன், காணாமல் போனதாக கூறப்படும் யுவதியை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். விபத்து நேர்ந்த இடமானது, மிகவும் ஆழமான பகுதி என்பதனால், நீராடுவதற்கு உரிய இடம் அல்லவென போலீஸார் தெரிவிக்கின்றனர்.

  7. அமெரிக்காவில் வெடிகுண்டு பனிப்புயல் எச்சரிக்கை

    அமெரிக்கா பனிப்புயல்

    பட மூலாதாரம், Getty Images

    கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது.

    கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, 5 மாநிலங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கடலோரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6,000 அமெரிக்க விமானங்கள் இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

  8. விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து 2 பேர் உயிரிழப்பு: உரிமையாளர் கைது

    பட்டாசு ஆலை விபத்து

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் அம்மன் கோவில்பட்டி பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை உள்ளது. நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, வழக்கம் போல் மீதம் உள்ள கழிவுகளை ஆலையின் பின் பகுதியில் உள்ள குழியில் போட்டு எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆறுமுகம், தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வினால், பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில்,ஆறுமுகம் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தெய்வேந்திரன், குபேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த, தீயணைப்பு & மீட்புப் பணித்துறையினர் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    படுகாயமடைந்த தெய்வேந்திரன் என்பவர் மதுரை அரசு மருத்துவமனையிலும், குபேந்திரன் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். இதில், சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு தொழிலாளி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

  9. எம்.பி.பி.எஸ் பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு: ஆன்லைன் பதிவு தொடங்கியது

    மருத்துவ மாணவர் சேர்க்கை

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்விற்கான ஆன் லைன் பதிவு இன்று தொடங்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 27ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடங்கியது.

    முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பொதுப்பிரிவு கலந்தாய்வு பணி தொடங்கியுள்ளது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுப்பிரிவு கலந்தாய்வு இணைய வழியில் (ஆன்லைனில்) நடைபெறுகிறது. இதன்படி, ஆன்லைனில் பதிவு செய்வது இன்று தொடங்கியுள்ளது. வரும் 6ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கும்.

  10. நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகளைத் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.