You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பெய்ஜிங்கில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று; நெருங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புப் பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இஸ்லாமிய அரசு பெண்கள் படைப்பிரிவுக்கு தளபதியாக இருந்த பெண் அமெரிக்காவில் கைது

    இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவில் பெண்கள் மட்டுமே இருந்த படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கி, பயிற்சி அளித்ததாக ஓர் அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆலிசன் ஃப்ளூக்- எக்ரன் எனும் இந்த பெண், சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் வாழ்ந்தவர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இவர் சேர்த்ததாகவும் ஏகே- 47 ரக துப்பாக்கிகளை கையாளவும், தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான அங்கிகளை அணியவும் இவர் சிரியாவில் பயிற்சி அளித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

  3. யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்

    யேமன் உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1500 குழந்தைகள் 2020ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவிக்கிறது.

    2021ஆம் ஆண்டு உயிரிழந்த குழந்தை போராளிகளின் எண்ணிக்கை இன்னும் நூற்றுக்கணக்கில் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோடைக் கால முகாம்கள், மசூதிகள் ஆகியவற்றின் மூலம் இன்னும் அரசுக்கு எதிராக போரிடும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளை போரிடுவதற்காக தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    2015ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் மற்றும் யேமன் அரசுக்கு இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    லட்சக் கணக்கில் பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர்.

  4. நெருங்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்: பெய்ஜிங்கில் அதிகரிக்கும் கொரோனா

    சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளது.

    அங்கே 20 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் நகரின் சில பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    நகரவாசிகள் அல்லாமல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள பகுதியில் 34 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

    இவர்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்த 13 தடகள வீரர்கள் அல்லது அவர்களுடன் வந்த அதிகாரிகளும் அடக்கம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

  5. ரஃபேல் நடால் உலக சாதனை

    இன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் வென்றதன் மூலம் 22 ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று உலக சாதனை படைத்துள்ளார் ரஃபேல் நடால்.

  6. இன்டர்நெட்டில் வைரலாகும் ஜம்முவைச் சேர்ந்த தந்தை-மகளின் பாடல்கள்

    சமூக ஊடகங்களில் இப்போது ஜம்முவைச் சேர்ந்த இந்த தந்தையும் மகளும் சேர்ந்து பாடும் பாடல்கள், அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளன.

    இருவரும் பழைய இந்தி படங்களின் பாடல்களை மட்டுமல்லாமல், டோக்ரி மொழி பாடல்களையும் பாடி வருகின்றனர். அதை இந்த வீடியோவில் காணலாம்...

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் ஆனார் ரஃபேல் நடால்

    ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் இடையே நடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் ரஃபேல் நடால்.

    5 மணி நேரம் 24 நிமிடம் நடந்த இந்தப் போட்டியில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்றார் நடால்.

  8. 'காக்கி உடைக்குள் காவி உணர்வா?' - கோவை காவல்துறைக்கு சிபிஐ(எம்) கண்டனம்

    காந்தி நினைவு நாளையொட்டி இன்று காலை கோவை மாவட்டம் சிவானந்தா காலணியல் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

    இந்த நிலையில் இந்நிகழ்வுக்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் கோட்சே, ஆர்.எஸ்.எஸ் பற்றி கோஷங்கள் எழுப்ப வேண்டாம் எனத் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கி உள்ளிட்ட கருவிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து பின்னர் விடுவித்தனர்.

    கோவை காவல்துறையின் செயல்பாட்டை கண்டித்து சிபிஐ(எம்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "நிகழ்ச்சி நடக்கும்போதே காவலர்கள் சென்று பாதியில் இடையூறு செய்தது மிகத் தவறான நடவடிக்கையாகும். காந்தி நினைவு நாளில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோட்சேவின் வாரிசுகளுக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை தெளிவுபடத் தெரிவித்துள்ளனர். இதை சம்மந்தப்பட்ட கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கோவை சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், "நேற்று தான் அனுமதி கடிதம் கொடுத்தனர். முறையான அனுமதி இல்லாமல் நடத்த வேண்டாம், யார் மனதையும் புண்படுத்தாதவாறு கோஷம் எழுப்ப வேண்டும் என்று தான் தெரிவிக்கப்பட்டது" என்றார்.

  9. இலங்கையில் நீரில் அடித்துச் சென்ற ஐந்து தமிழர்கள் சடலங்களும் மீட்பு, ரஞ்ஜன் அருண் பிரசாத்

    பதுளை மாவட்டத்தின் எட்டம்பிட்டி பகுதியிலுள்ள கெரன்டி ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களையும், மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

    உமா ஓய ஆற்றில் நீராடச் சென்ற வேளையில், நேற்று (29) மாலை ஐவர் நீரில் அடித்துச் சென்றிருந்தனர். இவ்வாறு நீரில் அடித்துச் சென்ற நால்வரின் சடலங்கள் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், யுவதியொருவரின் சடலத்தை நேற்றைய தினம் கண்டுபிடிக்க முடியவில்லை.

    குறித்த யுவதியை தேடும் பணிகள் இன்று (30) முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிற்பகல் அவரது சடலத்தை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

    எட்டம்பிட்டி பெருந்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், 11 பேர் அடங்கிய குழுவொன்று ஆற்றிற்கு நீராடச் சென்றுள்ளது.

    இந்த ஆற்றின் கீழ் பகுதியிலுள்ள மிக ஆழமான பகுதியில் நீராடிக் கொண்டிருந்த தருணத்திலேயே, இந்த இளைஞர், யுவதிகள் நீரில் அடித்துச் சென்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

    சம்பவத்தில் எட்டம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ராஜா டேவிட் குமார், 21 வயதான சிவ சுப்ரமணியம் காஞ்சனா, 22 வயதான பவாணி, 18 வயதான சிந்து மற்றும் 20 வயதான சிரியா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

  10. காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள்

    மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே பற்றி விலகாத மர்மங்கள் குறித்து விளக்குகிறது இந்த காணொளி.

  11. 'நண்பர்களாகத் தொடர்வோம்' - ப. சிதம்பரம்

    கோவா மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கவில்லை என்றாலும் கட்சிகளுடன் நண்பர்களாகத் தொடர்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

    தேர்தலுக்கு பின் அக்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முயல்வோம் என்று அவர் கூறியுள்ளார். இந்த மூன்று கட்சிகளும் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    கோவா மாநிலத்திற்கு காங்கிரஸின் மூத்த தேர்தல் பார்வையாளராக இருக்கும் சிதம்பரம் திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தங்கள் கட்சி முயற்சி செய்தாலும் காங்கிரஸில் இருப்பவர்களை தங்கள் கட்சிக்கு கொண்டுவரவே திரிணாமுல் முயன்றது என்று அவர் கூறுகிறார்.

  12. தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்குகொரோனா தொற்று

    தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி. கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வேட்புமனு தாக்கல் செய்த கட்சியினரிடம் நேர்காணலும் நடத்தி வந்தார்.

    இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் முத்துசாமிக்கு லேசான காய்ச்சலும், உடல் சோர்வும் இருந்தது.

    இதை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

  13. தஞ்சாவூர் மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம்: பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

    தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க போராடும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டம் தனியார் பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் மாணவியின் படத்திற்கு மலர்தூவி, அஞ்சலி செலுத்தினர். மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்துரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், '' சிபிஐ விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக குரல் கொடுத்து வருகிறது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாஜக போராடுகிறது'' என்றார்.

    மேலும் அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இறந்த மாணவியின் அடையாளத்தை வெளியிட்டது சட்டப்படி சரி தான். அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால்தான் அவரின் அடையாளத்தை வெளியிட்டோம். பா.ஜ.க செய்யும் போராட்டம் எந்த மதத்துக்கும் எதிரான போராட்டமல்ல. மத அரசியலுக்கு பா.ஜ.க வில் இடமில்லை. மாணவி மரணத்தை பல கட்சிகள் அரசியலாக்கிவிட்டன.'' என்றார்.

  14. கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: வாக்குவாதம், மோகன்

    கோயம்புத்தூரில் கோட்சேவைப் பற்றி கோஷம் எழுப்ப கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சிக்கு காவல்துறை எதிர்ப்பால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி கோவை மாவட்டம் பவர் ஹவுஸ் அருகே மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ், கோட்சே பற்றி பேசக்கூடாது எனக் கூறி ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒலிபெருக்கி, வாகனம் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    இது தொடர்பாக பிபிசி தமிழிடம் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பத்மநாபன், கூறுகையில், "முறைப்படி காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்திருந்தோம். ஆனால் காவல்துறையிடமிருந்து மறுப்பு தெரிவித்து எந்த பதிலும் வரவில்லை. கடைசி நேரத்தில் வந்து அனுமதியில்லை என்கின்றனர். மேலும் கோட்சே, ஆர்.எஸ்.எஸ் பற்றியும் பேசக்கூடாது என்றும் காவல்துறையினர் தெரிவித்து, ஒலி பெருக்கி உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றுவிட்டனர்" என்றார்.

    ரத்தினபுரி காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன்பிபிசி தமிழிடம் கூறுகையில், 'நிகழ்வுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் நேற்று தான் அனுமதி கோரி கடிதம் கொடுத்தனர். உரிய அனுமதி கிடைத்த பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று தான் தெரிவித்தோம். ஆனால் நடத்தியே ஆக வேண்டும் என அவசரப்பட்டதால், பறிமுதல் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. மேலும் கோஷம் எழுப்புகின்ற போது யார் மனமும் புண்படாதவாறு, எந்தவொரு நபரையும் அமைப்பையும் குறிப்பிட்டு இருக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது'' என்றார்.

  15. மகாத்மா காந்தியின் அஸ்தி அமெரிக்க ஆன்மிக மையத்தில் இருக்கிறதா?

    இந்தியாவின் தேசத்தந்தையாக கொண்டாடப்படும் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றோடு 74 ஆண்டுகள் ஆகின்றன. அவரது உடலை எரித்த சாம்பல் தங்களிடம் இருப்பதாக கூறும் ஓர் அமெரிக்க ஆன்மிக மையத்தில் இருந்து அது குறித்து செய்தி எழுதுகிறார், சவிதா பட்டேல்.

    அமெரிக்காவில் ஹாலிவுட்டில் இருந்து சில நிமிடங்களில் அடைகிற தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற சன்செட் பொலிவார்டில் உள்ள ஏரி ஆலயத்தில் அமைந்திருக்கிறது காந்தி உலக அமைதி நினைவகம். இந்த ஆலயத்தின் நிறுவனர் பரமஹன்ச யோகானந்தா என்பவரால் இது 1950ல் கட்டப்பட்டது. பசுமையான தோட்டங்கள், அருவி மத்தியில் கடலைப் பார்த்தபடி இது அமைந்துள்ளது.

    இந்த இடத்தில் சீனாவில் இருந்து வந்த பழமையான கல் பெட்டியில் ஒரு வெள்ளிப் பேழையும், ஒரு வெண்கலப் பேழையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேழைகளில்தான் காந்தியின் உடலை எரித்த சாம்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான செய்திக்கு...

  16. சென்னையில் கடற்கரைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

    சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 முதல் கூட்டம் கூடக் கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும் ஆகிய கட்டுப்பாடுகளோடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    இதை தமிழ்நாடு அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதையடுத்து பொது மக்கள் உற்சாகமாக மெரினா கடற்கரைக்கு இன்று சென்றனர்..

  17. வட கொரியாவில் மிகபெரிய ஏவுகணை சோதனை : பாதுகாப்பில் உறுதி - கிம் ஜாங் உன்

    வடகொரியா 2017ஆம் ஆண்டுக்குப் பிறகான மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இந்த மாதத்தில் இது 7வது சோதனையாகும். வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7.52 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இந்த சோதனைக்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த மாதத்தில் இது 7வது சோதனையாகும்.

    வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை சோதனை செய்வதை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை கடுமையான தடைகளை விதித்துள்ளது. ஆனாலும் அந்நாடு தொடர்ந்து தடைகளை மீறி வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

  18. காந்தியின் 75வது நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

    மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    காந்தியடிகளின் உன்னத லட்சியங்கள், கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.

  19. கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரையில், மகாத்மா காந்தியடிகள் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், சர்வோதயா சங்கத்தின் நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கூறுகையில், ''மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று,கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

  20. இலங்கையில் 13வது திருத்தம் : எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், ரஞ்சன் அருண்பிரசாத்

    இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, 7 தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் விடுத்த கோரிக்கைக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

    இலங்கையில், ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது. ''கடந்த 70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக'' தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.''இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக'' அவர் குறிப்பிடுகிறார். ''அரசியலமைப்பின் 13வது திருத்தமானது, இனப் பிரச்சினைக்கான தீர்வு இல்லை'' என கோரியே இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மோடிக்கு கடிதம் எழுதிய தரப்பின் பதில் 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வட மாகாண சபையை மீண்டும் கொண்டு வரவே தாம் முயற்சித்து வருவதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கிறார். 13வது திருத்தச் சட்டமானது, தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பதனை தாமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகின்றார். அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.