You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் 'பயங்கரமாக' இருக்கும் - அமெரிக்க படைகளின் தலைமை தளபதி

யுக்ரேன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படையினரைக் குவித்துள்ளது, பனிப் போர் காலத்துக்கு பின் அதிக அளவில் படைகள் குவிக்கப்படும் செயல் என்றும் மார்க் மில்லி கூறுகிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு தேசத் துரோகம் - ராகுல் காந்தி

    பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டது தேசத் துரோகம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாட்டின் ஜனநாயக அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸை வாங்கியது.

    அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாதுகாப்பு,நீதித்துறை என அனைவரும் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்டால் குறிவைக்கப்பட்டனர். இது தேசத்துரோகம். மோடி அரசு துரோகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  2. அதிமுக அலுவலகத்தில் பா.ஜ.க பேச்சுவார்த்தை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக – பா.ஜ.க தலைவர்களிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

    அங்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், முனுசாமி உள்ளிட்டோருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தங்களுக்குத் தேவையான மேயர், நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் இடங்கள் குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  3. தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர்: எல்லை மீறி செயல்படுகிறார்- முரசொலி விமர்சனம்

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது என்று திமுக விமர்சனம் செய்துள்ளது.

    திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் இன்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், ''தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகார எல்லையை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது. குடியரசு தின விழாவை முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தி, பொறுப்பை உணராமல், தமிழக மக்களின் தன்மானத்தை உரசிப் பார்ப்பதாக தோன்றுகிறது.

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி சில மாதங்களாகியும் கிடப்பில் உள்ளது. அதன் நிலை என்னவென்று தெரியாத நிலையில், 'நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது.' என்று கூறியுள்ளார். நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில் இப்படி கூறுவது எந்தவகையில் நியாயம்.

    மக்களின் எதிர்பார்ப்பை, தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைக்கும் போது, அதை ஆளுநர் அலட்சியப்படுத்துவது, 7 கோடி மக்களை அவமதிப்பதாகும். ஆளுநர் ஒன்றிய அரசின் பிரதிநிதான். தன் மாநில மக்களின் கருத்தை ஒன்றிய அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஒன்றிய அரசின் முடிவுகளைத் மக்கள் திணிப்பது அல்ல. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை, நீட் எதிர்ப்பில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கும்'' இவ்வாறு முரசொலியில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

  4. பாலிவுட் மீது அவதூறுகள் மூலம் வெறுப்பு: பிபிசி ஆய்வு செய்தி

    இந்தியாவின் ஹிந்தித் திரைப்படத் துறையான பாலிவுட், வெற்றி- தோல்வி, மகிழ்ச்சி-துக்கம், புகழ்ச்சி-இகழ்ச்சி, அலட்சியம் என்ற அனைத்தையும் பார்த்துள்ளது. அதற்குப் பழக்கமில்லாத சில விஷயங்களும் உள்ளன.

    அவற்றில் ஒன்று, ஆன்லைனில் லட்சக்கணக்கான பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ள சில செல்வாக்கு மிக்கவர்கள் பரப்பும் அவதூறுகள், பொய்கள் கலந்த விஷமப் பிரச்சாரமாகும்.

    மேலும் இவர்கள் இத்தகைய பொய்களைப் பரப்பி அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.

    இதைப் புரிந்து கொள்ள, கூகுளுக்குச் சொந்தமான வீடியோ பகிர்வு தளமான யூ-ட்யூபைப் பார்க்கலாம். தவறான தகவல்களைப் பரப்பும் தளங்களுக்குத் தாயகமாக இது விளங்குகிறது. இது குறித்து யூ-ட்யூபின் எதிர்வினை உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்...

  5. இந்தியாவின் முதல் செய்தித் தாள் வெளியான தினம்

    இந்தியாவின் முதல் ஆங்கில செய்தித்தாள் 'பெங்கால் கெசட்' ஜனவரி 29, 1780 அன்று கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் இதைத் தொடங்கினார்.

    இவரை இந்திய இதழியலின் தந்தை என்றும் அழைக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகைகள் முக்கிய பங்குவகித்தன. இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இதை நினைவு கூர்ந்துள்ளது.

  6. விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆலோசனை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

    நடிகர் விஜய மக்கள் இயக்கத்தினர் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் , மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் நடைபெறும் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் முதல்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  7. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2.35 லட்சம்

    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2,35, 532 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் நாடு முழுவதும் 871 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சையில் இருந்த 3, 35, 939 பேர் நலம் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 20, 04, 333 பேர் சிகிச்சையில் உள்ளனர். பரிசோதனை செய்துகொண்டோரில் 13.39 சதவீதம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தற்போது வரை மொத்தம் 1, 65,04,87, 260 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  8. எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு: பதற்றத்தை உருவாக்க வேண்டாம் - யுக்ரேன் அதிபர்

    தங்கள் நாட்டு எல்லையில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என யுக்ரேன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கி மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ரஷ்யா, யுக்ரேன் மீது உடனடியாக போர் தொடுக்கலாம் என எச்சரிப்பது யுக்ரேன் பொருளாதாரத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது என பத்திரிகையாளர்களிடம் கூறினார் அதிபர் செலென்ஸ்கி.

    அடுத்த மாதம், ரஷ்யா, யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தலாம் என தான் நம்புவதாக கடந்த வியாழக்கிழமை கூறினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

    தற்போது யுக்ரேன் எல்லையில் கிட்டத்தட்ட 1,00,000 ரஷ்யப் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்...

  9. ஆசிய மகளிர் ஹாக்கி: ஜப்பான் தங்கம், இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம்

    ஆசிய மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஜப்பான் அணி தங்கப் பதக்கம் பெற்றது.

    ஆசிய மகளிர் கோப்பை 2022 போட்டிகள் மஸ்கட்டில் நடைபெற்றன. இந்தியா, ஜப்பான்,கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்கேற்றன.

    இறுதிப் போட்டியில், ஜப்பான் அணி வட கொரிய அணியை 4:2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ​​இந்திய அணி சீனாவை 2:0 கோல் கணக்கில் வீழ்த்தி 3வது இடத்தைப் பிடித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றது.

    ஜப்பான், கொரியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மஸ்கட் 2022 மகளிர் ஆசியக் கோப்பையின் அரையிறுதியில் பங்கேற்றதன் மூலம், FIH மகளிர் உலகக் கோப்பை 2022க்கு தகுதி பெற்றுள்ளன.

    ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியை மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ உள்ளிட்டோர் வாழ்த்தியுள்ளனர்.

  10. நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம்

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்திற்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகளைத் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.