பாம்பனில் நகை பாலிஷ் செய்வதாக கூறி ரசாயன தண்ணீரை பயன்படுத்தி நகையை திருடி தப்ப முயன்ற வட மாநில இளைஞர்களில் ஒருவரை நேற்று அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் தப்பியோடிய மற்றொருவர் அவரது கூட்டாளியுடன் புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த போது ராமேஸ்வரம் தனிப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
இருவரையும் விசாரனைக்காக தனிப்பிரிவு போலீசார் பாம்பன் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பாரதியார் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சங்கரி என்ற பெண்ணிடம் நேற்று மாலை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நகை பாலிஷ் செய்வதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சங்கரி தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பாலீஷ் போட கொடுத்துள்ளார்.
தாலி சங்கிலியை வாங்கிய வடமாநில இளைஞர்கள் ரசாயன தண்ணீரில் பாலீஷ் செய்த போது, செயின் பல துண்டுகளாக உடைந்திருந்தது. எடையின் அளவு பாதியாக குறைந்து 13 கிராம் மட்டுமே இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த சங்கரி கூச்சலிட்டுள்ளார்.
அப்போது ரசாயனத்தை பயன்படுத்தி நகையின் ஒரு பகுதியை திருடி தப்ப முயன்று வட மாநில இளைஞர்களில் ஒருவர் அப்பகுதி பொது மக்களிடம் மாட்டிகொண்டார்.
மற்றொரு நபர் தப்பி விட்டார். இதற்கிடையே, பிடிபட்ட நபரை பாம்பன் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இருவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார், குண்டன் குமார் ராம் என்பது தெரிய வந்ததது.
இருவரும் பிகார் மாநிலாத்தில் இருந்து கடந்த வாரம் ராமேஸ்வரம் வந்ததும் தெரிய வந்தது. இவர்கள் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் போர்வை வியாபாரம் செய்ய வந்திருப்பதாக கூறி தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஸ்கோடி உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளுக்கு வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பாம்பன் பாரதியார் நகரில் வீட்டில் தனியாக இருந்த சங்கரி என்ற பெண்ணிடம் நகையை பாலீஷ் செய்வதாக கூறி ரசாயன தண்ணீரை பயன்படுத்தி நகையின் ஒரு பகுதியை திருடி தப்பி செல்ல முயன்ற போது குண்டன் குமார் ராம் பிடிப்பட்டதும், பிபின் குமார் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து பிபின் குமார் செல்போன் சிக்னல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்ததால் அவரை தனிப்பிரிவு காவல்துறையினர் அங்கு சென்று பிடித்தனர். அப்போது தனது மற்றொரு கூட்டாளி பப்பு குமாருடன் இருந்த குண்டன் ராம் குமாரை அதிகாரிகள் கைது செய்து இன்று ராமேஸ்வரம் அழைத்து வந்துள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு திருச்சியில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் தங்க நகையை பாலீஷ் போடுவதாக கூறி நகை திருட்டில் பிபின் குமார் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் யாரேனும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கி உள்ளனரா என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.