குடியரசு தின அணிவகுப்பில் 12 மாநிலங்கள், 9 அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தங்களுடைய மாநில அலங்கார ஊர்திகளுக்கான மாதிரியை ஏற்க பாதுகாப்புத்துறை மறுத்த நடவடிக்கை குறித்து கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சந்தேகம் எழுப்பியிருந்தன. இந்த நிலையில், 21 அலங்கார ஊர்திகள் மட்டுமே இந்த ஆண்டு பங்கேற்கும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள - பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்டு, இறுதி மரியாதை செய்ய பெற்றோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

    உயிரிழந்த மாணவியின் தந்தை முருகானந்தம் இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் முறையிட்டார்.

    இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்...

  2. ஏமனில் விமான தாக்குதல் - 70 பேர் உயிரிழப்பு

    ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதனை ஐ.நா. கண்டித்துள்ளது.

    இந்த தடுத்துவைப்பு மையம் (அல்லது சிறைக்கூடம்), ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளது.

  3. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 10 ஆயிரத்தைக் கடந்தது

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனாவினால் ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர்

    இந்தியாவில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. அதேநேரத்தில் ஒமிக்ரான் தொற்று 10, 050 ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் நேற்று 24 மணி நேரத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3, 37,704 ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய தினத்தை விட 9, 550 குறைவாகும். ஒரு நாளில் மட்டும் 488 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதேநேரத்தில் ஒரு நாளில் மொதம் 2, 42, 676 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தம் 21, 13, 365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று விகிதம் 17.22 விழுக்காடாக உள்ளது.

    இந்தியா முழுவதும் மொத்த ஒமிக்ரான் தொற்றினால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10, 050 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் தொற்று 3.69 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  4. கும்பகோணம் அணைக்கரை பாலத்தில் விபத்து, முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    பாலம் விபத்து

    கும்பகோணம் அணைக்கரை பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது.

    தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அணைக்கரைப் பகுதியில் தஞ்சாவூர் - அரியலூரை இணைக்கும்வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

    இதில் தென்பகுதி கரையிலிருந்து ஐந்தாவது தூணையும் ஆறாவது தூணையும் இணைக்கும் வகையில் நேற்று கான்க்ரீட் போடப்பட்டது.இந்த கான்க்ரீட் பகுதிகள் நேற்று இரவு சரிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  5. தமிழ்நாட்டில் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

    தடுப்பூசி

    பட மூலாதாரம், Ma Subramanian

    தமிழ்நாட்டில் 19வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50, 000 இடங்களில் இன்று நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் 19வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுக்க மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1600 இடங்களில் நடைபெறும் முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவ துறை அறிவித்துள்ளது.

    சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ''சென்னையில் மொத்தம் 94.10 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 21 மாநகராட்சிகளிலும் 2, 580 கிராம ஊராட்சிகளிலும் 100 விழுக்காடு தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே மூன்றாவது அலையில் உயிரிழக்கும் நிலை உள்ளது'' என்றார்.

  6. கோவைவில் பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதியில் விடப்பட்டது

    கோவை சிறுத்தை

    பட மூலாதாரம், TN Forest dept

    படக்குறிப்பு, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குள் சிறுத்தை விடப்பட்டது

    கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் இருந்த சிறுத்தையை இன்று அதிகாலை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

    கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறிய மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை, குனியமுத்தூர் பகுதியில்உள்ள குடோனில் புகுந்து கொண்டது.

    சிறுத்தையை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் குடோனை சுற்றி வலை விரித்து, இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்தும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்.

    சிசிடிவி கேமராக்கள் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. ஆறாவது நாளான இன்று அதிகாலை, சிறுத்தை வெளியில் வந்தபோது வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

    மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குள் சிறுத்தை விடப்பட்டது

    ''சிறுத்தையைப் பிடிக்க காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது'' என்று ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் ராம சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    சிறுத்தை பிடிபட்டது
    படக்குறிப்பு, சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட திட்டமிட்டுள்ளனர்.
  7. மும்பையில் 20 மாடி கட்டடத்தில் தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு

    மும்பை தீ
    படக்குறிப்பு, 13 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன

    மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் உள்ள 20 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

    மும்பை பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் உள்ள டார்டியோவில் 20 மாடிகள் கொண்ட கமலா கட்டிடத்தில் 3வது அடுக்கில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

    தீயணைப்புத் துறையின் 13 வாகனங்கள் உதவியோடு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதினைந்து பேர் தீக்காயமடைந்துள்ளனர்.

  8. தஞ்சாவூர் திருவையாற்றில் இன்று 175வது தியாகராஜ ஆராதனை விழா ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது.

    தியாகராஜர் ஆராதனை

    பட மூலாதாரம், Aru

    படக்குறிப்பு, தியாகராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடப்பட்டது

    திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை விழா கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால், இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சன்னதியில் ஆண்டுதோறும் ஆராதனை விழா 5 நாட்களுக்கு நடைபெறும். இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் இசைக் கலைஞர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒரு நாள் மட்டும் ஆராதனை விழா நடைபெறுகிறது.

    இதன்படி, தியாகராஜர் முக்தியடைந்த திருவையாறு காவிரிக் கரையில் 175வது ஆராதனை விழா இன்று காலை விழா தொடங்கியது. விழா பந்தலில் 100 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

    இதையடுத்து, முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனையில் குறைந்த எண்ணிக்கையில் இசைக் கலைஞர்கள் பங்கேற்று, இசையஞ்சலி செலுத்தினர்.

  9. வணக்கம் நேயர்களே! பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன். எங்களோடு இணைந்திருங்கள்.