You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு - பரஸ்பரம் பிரிவதாக அறிக்கை

18 வருடங்களாக நட்பாக, ஜோடியாக இருந்து பெற்றோராக இருந்தோம். இப்போது பிரிகிறோம் என்று தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் தனித்தனியாக அவரவர் சமூக ஊடக பக்கங்களில் அறிக்கையை வெளியிட்டு பிரிந்து வாழும் முடிவை வெளியிட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம். மணிகண்டன் and ஜோ மகேஸ்வரன்

  1. ஜனவரி 17ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்து வாழப்போவதாக அறிவிப்பு

    நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் தங்களுடைய மண வாழ்வில் இருந்து பரஸ்பரம் பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளனர்.

    18 வருடங்களாக நட்புடனும், தம்பதியாகவும், பெற்றோராகவும் வாழ்ந்தோம். இப்போது பிரிகிறோம் எனறு இருவரும் தனித்தனியாக அவரவர் சமூக ஊடக பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  3. சென்னை, திருவள்ளூர் உள்பட 12 நகர மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

    சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் சமூக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆவடி, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் இன்று வெளியிட்டுள்ளது.

  4. குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்தி விவகாரம்: கேரளா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம்

    குடியரசு தின அணிவகுப்பில் தங்கள் மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியைத் தெபார்த்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "இந்த விவகாரம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்தப் பிரச்னை தமிழக அரசுக்கும் அதன் மக்களுக்கும் மிகவும் கவலை தரும் விஷயம். குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் காண்பிக்கப்படும் தமிழ்நாட்டை சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

  5. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளைப் பிடித்து கார் பரிசு பெற்ற கார்த்திக்

    மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 பேர் அனுமதிக்கப்பட்டு, மொத்தம் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    இதில், கருப்பாயூரணி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர்‌ 21 காளைகளை பிடித்து முதல் இடத்தை பெற்றார். அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார் 19 காளைகளை பிடித்து இரண்டாம் இடத்தையும் சித்தலங்குடி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 13 காளைகளை பிடித்து மூன்றாவது இடத்தையும் பெற்றனர். முதலிடம் பெற்ற கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    மொத்தம் 1, 020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரலாற்றில் அதிக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது இதுவே முதல் முறை என்று ஜல்லிக்கட்டு குழுவினர் அறிவித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனின் காளை, சிறந்த காளைக்கான முதல் பரிசை பெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

  6. நீட் விலக்கு; இந்திய உள்துறை அமைச்சரை சந்தித்த அனைத்து கட்சிக் குழு

    தமிழ்நாடு நீட் விலக்கு மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இன்று வலியுறுத்தினர்.

    திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில்,காங்கிரஸ் எம்.பி ஜெயகுமார், அதிமுக நவநீதகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக எம்.பி ரவிக்குமார், பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பி.ஆர். நடராஜன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ டி.ராமசந்திரன் ஆகியோர் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று மாலை சந்தித்தனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு விரைந்து ஒப்புதல் தர வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதையடுத்து, அனைத்து கட்சி குழுவினருடன் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’நீட் விலக்கு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் ஆலோசித்து விரைவில் முடிவை சொல்வதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். நீட் விலக்கு என்பது ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இப்போதும் செய்யலாம், இதை எடுத்துக் கூறியுள்ளோம்.

    மேலும் வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை உடனே விடுவிக்க கோரிக்கை விடுத்தோம். வரும் 31ம் தேதிக்கும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுத்தி அளித்தார். என்றார்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், குடியரசு தின அணி வகுப்பில் வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் உருவங்களைக் கொண்ட அலங்கார ஊர்தி இடம் பெறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து கூறினோம். இது குறித்து விசாரிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார் என்றார்.

  7. பெரம்பலூரில் ஆற்றில் முழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு

    பெரம்பலூர் மாவட்டம் இனாம் அகரம் பகுதியில் உள்ள கல்லாறு தடுப்பணையில் 3 பெண்கள் முழ்கி உயிரிழந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் இனாம் அகரம் பகுதியைச் சேர்ந்த பத்மா(40), ரேணுகா(20), சவுந்தர்யா(18) மற்றும் ராதிகா(25) ஆகிய 4 பேரும் கல்லாறு தடுப்பணைக்கு இன்று குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாததால், பத்மா, ரேணுகா, செளந்தர்யா மூவரும் ஆற்றில் முழ்கி ஆற்றில் இறந்தனர்.

    அவர்களோடு சென்ற ராதிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வி.களத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, அபு தாபி விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபு தாபி விமான நிலையத்தில் ட்ரோன் வெடி குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் ட்ரோன் மூலம் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதில், 3 எரிபொருள் டாங்குகள் சேதமடைந்துள்ளன.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் இந்தியர்கள் 2 பேர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு, யேமன் நாட்டின் ஹுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

  9. பிபிசி ISWOTY விருது: பிப்ரவரி 8ம் தேதி தகுதியானவர்கள் பட்டியல்

    பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 3ஆவது பதிப்பின் தகுதியானர்கள் பெயர் பட்டியல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகிறது.

    விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகள், பங்களிப்பை நினைவு கூறும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

    இதற்கான வாக்களிப்பு ஆன் லைனில் நடைபெறுகிறது. மார்ச் 7ஆம் தேதி விருதுக்கு தேர்வானவர்கள் விவரம் வெளியாகிறது. விருது மற்றும் வாக்களிப்பு முறை குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

  10. சென்னை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர் ஆய்வு

    சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.

    அப்போது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வுசார்ந்த பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற விழாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி செம்மொழித் தமிழாய்வு நிறுவன புதிய கட்டடத்தை காணொளியில் தொடங்கி வைத்தார்.

  11. பேச வேண்டியதை பேசி விட்டேன்; இப்போது அமைதியாக இருக்கிறேன் - அன்வர் ராஜா பேட்டி

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா இல்லத்தில் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    என்ன பேச வேண்டும், எங்கு பேசவேண்டும், எதைப் பேசவேண்டும், எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. நான் பேச வேண்டியதை பேசி விட்டேன். இப்போது அமைதியாக இருக்கவேண்டிய நேரம். அதனால் அமைதியாக இருக்கிறேன். என்றார்.

    மேலும் அவர் கூறுகையில்,'' நான் அஇஅதிமுகவில் இருக்கிறேன் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு உள்ளேன். அதனால் அமைதியாக இருக்கிறேன். எனக்கென்று தனியாக ஆதரவாளர்கள் கிடையாது, அதிமுகவினர் தான் என்னுடைய ஆதரவாளர்கள்.' என்றார்.

    கட்சியில் மீண்டும் சேர்வதற்கு முயற்சி ஏதும் எடுக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, நான் தற்போது அமைதியாக இருக்கிறேன் என்றார்,

    ''கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் முடிவுக்கு மாறான கருத்துக்களை தெரிவித்து, கட்சிக்கு களங்கம், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக'' அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அறிவித்தனர்.

  12. சேலம் கைதான மாற்றுத்திறனாளி இறப்பு - சிபிசிஐடிக்கு விசாரணை

    போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் சந்தேக மரணம் தொடர்பான விசாரணையை மாநில குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியிருக்கிறது.

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரனை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சேந்தமங்கலம் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி பிரபாகரன், உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேற் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரபாகரன், கடந்த 12ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.

    இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர், தலைமைக் காவலர் ஒருவர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுள்ளார்.

  13. குடியரசு தின அணி வகுப்பு: தமிழ்நாடு ஊர்தி மறுப்பிற்கு உண்மையான காரணம் தெரியவில்லை – அண்ணாமலை

    டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறாமல் போனதற்கு உண்மையான காரணம் தெரியவில்லை என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    தமிழ்நாடு பா,ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவது சரியில்லை. ஆனால் திருவள்ளுவர் இந்து வாழ்வியல் முறைப்படி வாழ்க்கையை நடத்தியவர். 1967-க்கு முன்பாக திருவள்ளூவர் எப்படி இருந்தார் என்பதை மக்கள் இப்போது பார்க்கத் தொடங்கிவிட்டனர்.” என்றார்.

    குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ‘வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரம், பாரதியார் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட தலைவர்கள். குடியரசு தின அணிவகுப்பை பாதுகாப்பு துறை தான் முடிவு செய்யும். ஆறு மாதங்களுக்கு முன்பே அதற்காக குழு அமைக்கப்பட்டு, பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகே முடிவு செய்யப்படும்.

    ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு தீம் வழங்கப்படும். வேலு நாச்சியார் பற்றி இந்திய பிரதமரே ட்வீட் செய்துள்ளார். அவர்களை அவமதிக்கும் எண்ணம் கிடையாது. தமிழக அரசின் அணிவகுப்பு மறுக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் தற்போது தெரியவில்லை. அதை விசாரித்துவிட்டு ஊடகங்களுக்கு பதிலளிக்கிறேன்.

    கேரளா, மேற்கு வங்கம் போன்ற சில மாநில அரசுகள் இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்’'என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், ''கருத்து சுதந்திரம் பத்திரிகை துறையின் அடித்தளம். அதை பாஜக எப்போதும் மதிக்கிறது. ஆனால் அந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியது கருத்து சுதந்திரம் கிடையாது. அரசியல் கருத்துக்களை குழந்தை மூலம் திணிக்கக்கூடாது என்பது விதி. அதை மீறியுள்ளார்கள். அந்த நிகழ்ச்சியில் கருத்து இல்லை. ஆபாசமான, வஞ்சகமான விஷயங்களை, குழந்தைகளை பேச வைத்துள்ளனர். குழந்தைகளை பேச தூண்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டம், தர்மத்துக்கு உட்பட்டு இதன்மீது நடவடிக்கை எடுப்போம்’' என்று கூறினார்.

  14. திருப்பூரில் வேலை நிறுத்தம் – நூல் விலை உயர்வைக் கண்டித்து

    திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கினர்,

    தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஜனவரி 17, 18 தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து பிபிசி தமிழிடம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் செந்தில் கூறுகையில், “ஜவுளித்துறையில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் நேரடியாவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். வரலாறு காணாத நூல் விலை உயர்வு ஜவுளித்துறையை கடுமையாக பாதித்துள்ளது. நூல் விலை கிலோ ஒன்றுக்கு 90% வரை உயர்ந்துள்ளது.

    உடனடியாக நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீது உள்ள 11% வரியை ரத்து செய்ய வேண்டும். உள்நாட்டு தேவைகளுக்குப் பிறகே நூல், பருத்தி உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும்.'' என்றார்.

    இதனால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  15. இந்திய குடியரசு தின ஊர்தி அணி வகுப்பு - தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுப்பு

    இந்திய குடியரசு தின விழாவின் போது பல்வேறு மாநிலங்களின் கலை, பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு தமிழ்நாடு சார்பில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார், சுதேசி கப்பல் இயக்கிய வ.உ.சிதம்பரனார் ஆகியோரது உருவ படங்களுடன் ஊர்தி வடிவமைக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரபலம் இல்லாத இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்று நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மதுரை எம்.பியும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ உ சி யும் , மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்,

    மேலும், கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநில அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடக மாநில ஊர்தி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  16. சேலத்தில் கைதான மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - 3 போலீசார் பணியிடை நீக்கம்

    சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன். இவரது மனைவி ஹம்சலா. இருவரையும் கடந்த 8ம் தேதி திருட்டு வழக்கு விசாரணைக்காக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவரையும் கைது செய்து, பிரபாகரனை நாமக்கல் கிளை சிறையிலும் ஹம்சலாவை சேலம் மத்திய பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

    கடந்த 12 ம் தேதி காலை திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரபாகரன், கடந்த 12ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.

    பிரபாகரனின் மனைவி ஹம்சலா கூறுகையில், ''என்னையும் என் கணவரையும் போலீஸ்காரங்க கூட்டிகிட்டு போயி, அடிச்சு சித்ரவதை பண்ணி ஆபாசமா திட்டினாங்க .கடைசியில கொன்னுட்டாங்க. என் பிள்ளைகள் இரண்டும் அனாதையாக நிற்கிறார்கள். என் கணவன் உயிரோட வேண்டும். இல்லன்னா கொன்னவங்களுக்கு தண்டனை கிடைக்கனும்.'' என்றார்.

    இந்தநிலையில், சேந்தமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி , தலைமை காவலர் குழந்தைவேலு ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் சரக பொறுப்பு டிஐஜி நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.

  17. சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் மாற்றம்

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    செந்தாமரைக்கண்ணன் இதற்கு முன்னர், கால நிலை மாற்ற ஆய்வு மைய இயக்குநராக பணியாற்றினார். அந்த பதவிக்கு புவியரசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

    அண்மையில் சென்னையில் பெய்த திடீர் கன மழையின் போது, ''வானிலை நிலவரங்களை துல்லியமாக கணித்து சொல்லும் அளவிற்கு கருவிகள் இல்லை'' என்று புவியரசன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    இந்த நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, நீட் விலக்கு; இந்திய உள்துறை அமைச்சரை சந்திக்கும் தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் குழு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி கோரி தமிழ்நாடு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று மாலை சந்திக்க உள்ளனர்.

    திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், அதிமுக நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் ஜெயக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வராஜ், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசன், விசிக திருமாவளவன், ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நவாஸ்கனி ஆகியோர் டில்லியில் தங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க 3 முறை முயற்சித்தனர். ஆனால், சந்திக்கவில்லை. கோரிக்கை மனுவை அலுவலகத்தில் கொடுத்தனர்.

    இதையடுத்து, ''அரசியல் காரணங்களுக்காக உள்துறை அமைச்சர் சந்திக்க மறுக்கிறார். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை அனுமதிக்காமல் இருப்பது ஜனநாயக விரோதம்'' என்று அனைத்துக் கட்சி குழு தெரிவித்தது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 8ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க தமிழ்நாட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று மாலை சந்திக்க உள்ளனர்.

    இந்த குழுவில், திமுக டி.ஆர்.பாலு, காங்கிரஸ் ஜெயகுமார், அதிமுக நவநீதகிருஷ்ணன், மதிமுக வைகோ, விசிக ரவிகுமார், பா.ம.க ஜி.கே. மணி எம்.எல்.ஏ, சி.பி.எம் பி.ஆர். நடராஜன் எம்.பி, சி.பி.ஐ - டி.ராமசந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19. உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி – பா.ஜ.கவில் இருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் கூறுகையில், ''உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவேன்'' என்று ஹரக் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

    ''ஹரக் சிங் ராவத் தனது உறவினர் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்பது கட்சியின் நடைமுறை''என்று உத்ரகாண்ட் முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

  20. மும்பை ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை

    மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐ.ஐ.டி) முதுநிலைப் பட்ட மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள அவர், ''மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். எனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல'' என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.