தைப் பொங்கலில் தமிழர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று பிரிட்டன் மற்றும் கனடா. இந்த நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் கொண்டாடும் தைப் பொங்கலையொட்டி வாழ்த்துகளை பகிரும் காணொளியை அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிருவர். அந்த வகையில் இந்த ஆண்டு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது பொங்கல் தின வாழ்த்துக் காணொளியை வெளியிட்டுள்ளார்.
1.38 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியில் 'வணக்கம்' என்று தொடங்கிய தமது உரையை நிறைவு செய்யும் முன்பு 'நன்றி' என தமிழ் வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். ஆங்கிலத்தில் அவர் வழங்கிய வாழ்த்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ.
"வணக்கம் மற்றும் பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் தைப் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இது ஒரு திருவிழா, இதில் 'சமூக உணர்வு' எப்போதும் மிகவும் முக்கியமானது."
"குடும்பம், நண்பர்களை சந்திப்பது மற்றும் உங்கள் அண்டை வீட்டாருடன் மீண்டும் இணைவது, நீண்ட காலமாக பார்க்காதவர்களுடன் கூடுவது இதன் சிறப்பு."
"2021ஆம் ஆண்டில் நிலவிய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குறிப்பாக இதயபூர்வமானதாக இருக்கும் என எனக்குத் தெரியும்.
மேலும் குறிப்பாக, இந்த பொங்கல் இனிப்பாக இருக்கும்.
அதே சமயம், நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்."
"நிச்சயமாக, உங்களுக்கு நெருங்கிய மற்றும் அன்பானவர்களைச் சந்திப்பதற்கு முன் ஒரு விரைவான சுய பரிசோதனையை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை என்றால், உடனே அதற்கு முன்பதிவு செய்வதன் மூலம் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்."
"இந்த வார இறுதியில் நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்திக்கும்போது, அவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளவில்லை என்றால் அவர்களிடம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி சொல்லுங்கள்."
"பிரிட்டன் சுகாதார சேவையின் இணையதளத்தில் தடுப்பூசி டோஸ் செலுத்திக் கொள்ள அறிவுறுத்துங்கள். அதை எப்படி பெறுவது என்பதை அந்த தளத்தில் கண்டறியலாம்."
"எனது அருமையான தமிழ் சமூகம் தைப் பொங்கலைக் கொண்டாடும் போது, மற்றவர்கள் நமது அருமையான தமிழ் சமூகத்துடன் அதை கொண்டாடும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்."
"இந்த சமூகம் அளவில் சிறியதாக இருந்தாலும், நீண்ட காலமாக பிரிட்டிஷ் வாழ்வின் அங்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இல்லாமல் நம் நாடு ஒதேவொன்று குறைவானதாகவே இருந்திருக்கும்."
"எனவே தைப் பொங்கல் மற்றும் தமிழ் பாரம்பரிய மாதத்தின் மத்தியில் உற்சாகம் குறையாமல் தமிழர்கள் அனைவரும் ஒரு பெரிய நன்றியைச் சொல்ல சிறிது நேரம் எடுத்துக்கொள்வோம்."
"நமது தமிழ் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கும். பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் அந்த நன்றியை உரித்தாக்குவோம்.
உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தைப் பொங்கல், வளமான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக இது இருக்கும் என்று நம்புகிறேன்," என தமது வாழ்த்துச் செய்தியில் பேசியிருக்கிறார் போரிஸ் ஜான்சன்.