கொரோனா பரவல்: பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சீனாவிடம் விலகி இந்தியாவுடன் நெருங்கும் இலங்கை

    இலங்கையிலுள்ள சீன தூதரகம்

    பட மூலாதாரம், CHINESE EMBASSY IN SRI LANKA

    இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சில உரசல்கள் தொடர்ந்த பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு நேற்று (ஜன. 08) அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

    இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ விஜயமாகவே, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவிக்கின்றது.

    இலங்கைக்கு உரம் ஏற்றிய கப்பலொன்று கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நாட்டை வந்தடைந்த நிலையில், குறித்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பக்றீரியாக்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்து இலங்கை விவசாய ஆய்வாளர்கள் அந்த உரத்தை நிராகரித்திருந்தனர்.

    சுமார் 20,000 மெற்றிக் தொன் உரத்தையே, இலங்கை இவ்வாறு நிராகரித்திருந்தது.

  2. தமிழ்நாட்டில் அமலானது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

    சென்னையில் முழு ஊரடங்கு

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, சென்னையில் முழு ஊரடங்கு

    தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டது.

    அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள், ஜவுளி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிடடவை இன்று திறக்கப்படாது.

    பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளும் இயங்காது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ரயில் மற்றும் விமான பயணிகள், சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. மாநிலம் முழுவதும் காவல் துறையினர் ஊரடங்கை முன்னிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  3. சௌதி அரேபிய இளவரசி பாஸ்மா 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

    சௌதி

    பட மூலாதாரம், Getty Images

    மூன்று ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சௌதி அரேபிய இளவரசி பாஸ்மாவும் அவரது மகளும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விடுதலைக்காகப் போராடியவர்கள் இந்தத் தகவலை உறுதி செய்திருக்கிறார்கள்.

    2019-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்கு செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

    அரசியல் சட்ட சீர்திருத்தம் மற்றும் மனிதநேய விவகாரங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என பலரும் கருதினர்.

    சௌதி அரேபியாவை 1953 முதல் 1964 வரை ஆட்சி செய்த முன்னாள் மன்னர் சௌவுத்தின் மகள் பாஸ்மா.

  4. இந்தியாவில் ஒரேநாளில் 1.59 லட்சம் பேருக்கு கொரோனா

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 327 பேர் உயிரிழந்துள்ளனர். 40,863 பேர் குணமடைந்துள்ளனர்.

    பரிசோதனை செய்தவர்களில் 10.21 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த எண்ணிக்கையுடன் மொத்தம் 5,90,611 பேர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாடு முழுவதும் இதுவரை 3,623 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  5. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குவோர் நந்தினி வெள்ளைச்சாமி.