பிரதமர் நரேந்திர மோதியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
'லாயர்ஸ் வாய்ஸ்' என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக, பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனவும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதி வருகையின் போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்திட வேண்டும் என, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற பதிவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க பஞ்சாப் மற்றும் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவை வாய்மொழி உத்தரவாக நீதிபதிகள் பிறப்பித்தனர். இது தொடர்பாக, எழுத்துப்பூர்வ உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
ஜனவரி 5 ஆம் தேதி ஃபெரோஸ்பூரில் உள்ள PGI செயற்கைக்கோள் மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோதி சென்று கொண்டிருந்தார், ஆனால், லூதியானா-ஃபெரோஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பியாரேனா கிராமத்திற்கு அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவரது கான்வாய் திரும்பச் சென்றது. இதனால், பிரதமர் நரேந்திர மோதியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.