சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை பயணம் - பேச்சுவார்த்தையில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கிலான பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதுடன், சில திட்டங்களையும் திறந்து வைத்தார்.
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு தொடங்கி, 65 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், சீன வெளிவிவகார அமைச்சர், நேற்றிரவு இலங்கை வந்தடைந்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சரை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.
இவ்வாறான நிலையில், இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கொழும்பு துறைமுக நகரில் சில திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.
பாகிஸ்தான்: பனியில் புதைந்த வாகனங்கள்; சாலையில் தவித்து நிற்கும் மக்கள் - தற்போதைய நிலவரம் என்ன?
பாகிஸ்தானின்பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. வாகனங்களின் கண்ணாடிகளைத் தட்டி மக்களின் நிலையை அறிய முயல்கின்றனர். பதில் கிடைக்கவில்லையென்றால், வாகனத்தை உடைத்துத் திறந்து உள்ளே இருப்பவர்களுக்கு உதவும் முயற்சி நடந்துவருகிறது.
இறந்தவர்களில் 10 ஆண்கள், இரண்டுபெண்கள் மற்றும் 10 குழந்தைகள் அடங்குவர் என்று'அவசரகால சேவை' 1122 வெளியிட்டபட்டியல் தெரிவிக்கிறது. முர்ரியின் உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் சிக்கிய பயணிகள் மற்றும் மயக்கமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பஞ்சாப் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
பட மூலாதாரம், ANI
பிரதமர் நரேந்திர மோதியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
'லாயர்ஸ் வாய்ஸ்' என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ள இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக, பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் எனவும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதி வருகையின் போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்திட வேண்டும் என, பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற பதிவாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க பஞ்சாப் மற்றும் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவை வாய்மொழி உத்தரவாக நீதிபதிகள் பிறப்பித்தனர். இது தொடர்பாக, எழுத்துப்பூர்வ உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
ஜனவரி 5 ஆம் தேதி ஃபெரோஸ்பூரில் உள்ள PGI செயற்கைக்கோள் மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோதி சென்று கொண்டிருந்தார், ஆனால், லூதியானா-ஃபெரோஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பியாரேனா கிராமத்திற்கு அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவரது கான்வாய் திரும்பச் சென்றது. இதனால், பிரதமர் நரேந்திர மோதியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா பரவல்: பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை
பட மூலாதாரம், ANI
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது குறித்தும், புதிய ஒமிக்ரான் கொரோனா திரிபு பரவல் குறித்தும் இன்று (ஜன. 09) மாலை பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவக் கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நடத்தி வரும் இந்த ஆலோசனை முக்கியமானதாகக் கருத்தப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்களுக்கு அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு: மத்திய அரசு
பட மூலாதாரம், Getty Images
கொரோனா அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
ஜன. 31 வரை மத்திய அரசின் மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் பணிநேரத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
துணைச் செயலாளர் நிலைக்குக் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊரடங்கை கொண்டு வரும் எண்ணம் தற்போது இல்லை: அரவிந்த் கேஜ்ரிவால்
பட மூலாதாரம், GETTY IMAGES
ஜன. 4 ஆம் தேதி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இதன்பின், பாதிப்பிலிருந்து மீண்ட அவர், மீண்டும் இன்று (ஜன. 09) பணிக்குத் திரும்பினார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊரடங்கை கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை, நீங்கள் (மக்கள்) முகக்கவசம் அணிந்தால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். தற்போதைக்கு ஊரடங்கை அமல்படுத்தும் எண்ணம் கிடையாது.
கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இன்றைக்கு டெல்லியில் சுமார் 22,000 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
டெல்லியில் மிக வேகமாக கொரோனா பரவி வந்தாலும் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. கடந்த கொரோனா அலையின் தரவுகளை ஆய்வு செய்தபின் இதனை நான் கூறுகின்றேன்.
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் நாளை (ஜன. 10) கொரோனா தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெறும்" என்றார்.
கொரோனா பரவல்: புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜன. 09) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் நாளை திங்கட்கிழமை (ஜனவரி 10) முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும். இதன் காரணமாக மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி மூலம் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
பட மூலாதாரம், MA. SUBRAMANIAN/ TWITTER
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, நாளையோ அல்லது நாளை மறுநாளோ ஊரடங்கு குறித்து முதலமைச்சர் இன்னொரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவார். மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்.
ஊரடங்கை மக்கள் மீது திணித்து பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடாது என்பதில் 100% முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இம்மாதிரியான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது" என்றார்.
யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, மாயாவதி தேர்தலில் போட்டியிடுவார்களா?
பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேச தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்களுக்கும் ஒரு சுவாரசியமான சவால் உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தங்கள் பிரபலத்தை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, உத்தர பிரதேசத்தில் முதல்வராகப் பதவியேற்ற தலைவர்கள் அனைவருமே தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு வராமல், சட்ட மேலவை உறுப்பினர்களாக அதாவது எம்.எல்.சி.யாக இருந்துவந்தனர்.
இதன்காரணமாக 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
திரைத்துறை கலைஞர்களுக்கு வருடந்தோறும் உலகிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள் 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் முன்பு நடிகர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அந்த வரிசையில் தற்போது நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் இந்த மாதம் 11-ம் தேதி வழங்க இருப்பதாக நேற்று (ஜன. 08) அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் 'டாக்டர் சிலம்பரசன்' என அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த செய்தியை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த வருடம் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, 'வெந்து தணிந்தது காடு', 'பத்துதல', 'மஹா', 'கொரோனா குமார்' உள்ளிட்ட படங்களை நடிகர் சிம்பு கைவசம் வைத்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: சிலர் விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்புகின்றனர் - ஸ்டாலின்
பட மூலாதாரம், @MKSTALIN TWITTER PAGE
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் குறித்து சிலர் தவறான விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜன. 09) வெளியிட்ட அறிக்கையில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் குறித்து சிலர் தவறான விஷமத்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
எனவே, இந்தப் பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்விதப் புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு, நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு
மதுரை கல்மேடு பகுதி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ஜோதிகா. இவர் தனது தாய் மற்றும் தம்பிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படதாக தெரிகிறது.
இதனால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா தன் தாய் மற்றும் தம்பிகளுடன் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், ஜோதிகா மற்றும் அவரது தம்பி ரித்தீஸ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும், இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
பட மூலாதாரம், Getty Images
இன்று தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "இன்று மற்றும் நாளை (ஜன. 10) தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
09.01.2022 முதல் 11.01.2022: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்தியரேகை பகுதிகளில் (1.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இடி மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாத்திமா ஷேக்: பெண் கல்விக்காக பாடுபட்ட வரலாற்றில் பெரிதும் அறியப்படாத பெண்
ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரி பாய் பூலே பற்றி நமக்குத் தெரியும். ஜோதிராவ் பூலே சமூகப் புரட்சியின் தலைவராக இருந்தார், மேலும் ஏழைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக வேலை செய்தார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரி பாயை நினைவில் கொள்கிறோம். தான் இல்லாவிட்டாலும் எல்லா வேலைகளையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கையாள்வார் என்று வெளிப்படையாக சாவித்ரி பூலே சொல்லியிருக்கிறார் என்றால், அந்த பெண் நிச்சயமாக முக்கியத்துவம் உள்ள பெண்ணாகத்தான் இருப்பார்.
அந்த பெண்தான் ஃபாத்திமா ஷேக். சாவித்ரி பாயின் பணியின் இணைந்து பங்காற்றியவர்.
சாவித்ரி பாயுடன் இணைந்து பணியாற்றிய ஃபாத்திமா ஷேக் பற்றி நமக்கு கிட்டத்தட்ட தெரியாது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள திராவிடர் கழக கிளை முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு நேற்று (ஜன. 08) இரவு மர்ம நபர்களால் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படிவங்கள் இனி தமிழில் வழங்கப்படும்: எஸ்பிஐ வங்கி அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் வரவேற்பு
பட மூலாதாரம், FACEBOOK / SU VENKATESAN
வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளதை மக்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜன. 09) தன் ட்விட்டர் பக்கத்தில், "வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும். பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் உறுதி. இதுவே சிறந்த பொங்கல் பரிசு.
கடந்த ஆண்டு அஞ்சலகத்தில் பெற்ற வெற்றியை இந்த ஆண்டு வங்கிகளில் உறுதி செய்வோம்" என பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
'சுல்லி டீல்ஸ்' செயலியை உருவாக்கியதாக ஒருவர் கைது
பட மூலாதாரம், ANI/Twitter
படக்குறிப்பு, ஓம்காரேஷ்வர் தாகூர்
பல முஸ்லிம் பெண்களின் சமூக ஊடக படங்களுடன் 'சுல்லி டீல்ஸ்' என்ற பெயரில், சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு, ஓப்பன் சோர்ஸ் செயலி உருவாக்கப்பட்டு சர்சசையானது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், இந்த செயலியை உருவாக்கியதாகவும், அதற்கு மூளையாக செயல்பட்டதாகவும், மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் ஓம்காரேஷ்வர் தாகூர் என்பவரை டெல்லி சிறப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, கடந்த வாரம் இதே போன்று சர்ச்சைக்குரிய 'புல்லி பாய்' செயலி வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி
பட மூலாதாரம், GETTY IMAGES
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு மேல்
கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 1,409 ஊழியர்களில் 402 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களுக்கு ஒமிக்ரான் திரிபு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, மரபணு வரிசை பரிசோதனைக்கு அவர்களுடைய ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து, நாடாளுமன்ற ஊழியர்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா அதிகரிப்பு: பிரதமர் இன்று மாலை ஆலோசனை
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் திரிபு பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொரோனா பாதிப்பைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது