புதுச்சேரியில் ஜனவரி 31வரை கொரோனா கட்டுப்பாடுகள் தீவிர அமல்

நாடு முழுவதும் ஒமிக்ரான் திரிபு மற்றும் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தீவிரமாகி வருவதால் புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி நள்ளிரவு வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஒமிக்ரான் தொற்று: இந்தியாவில் முதல் உயிரிழப்பு

    ஒமிக்ரான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இந்தியாவில் மொத்தம் 2, 630 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது

    ராஜஸ்தானில் 74 வயதானவர் ஓமிக்ரான் திரிபு தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்ற நிலையில் இறந்துள்ளார். இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பால் ஏற்பட்ட முதல் இறப்பு என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் இதுவரை 2,630 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், சுமார் 6 மடங்கு ஓமிக்ரான் திரிபு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    24 மணிநேரத்தில் 325 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், அதில் ஒருவர் மட்டுமே ஓமிக்ரான் திரிபோடு தொடர்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட நபர் "நீரிழிவு மற்றும் மற்ற துணைக் கோளாறுகள் உடைய உடல் நிலையைக் கொண்டிருந்த முதியவர். அடிப்படையில் இது ஓமிக்ரான் தொடர்பான இறப்பு" என்று சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

  2. ஊரடங்கு நாளில் போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

    மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இதன்படி, ஐனவரி 7, 8, 9 மற்றும் 15, 16 தேதிகளில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு உள்ள நாளில், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இதற்காக போக்குவரத்து வசதியும் செய்யப்படும். போட்டி மற்றும் தேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் தங்களது அனுமதிச் சீட்டு, அழைப்புக் கடிதத்தை காவல்துறையின் சோதனையின் போது காட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  3. நீட் விலக்கு: ஜனவரி 8ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், M.K.STALIN

    படக்குறிப்பு, நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டில் நீட் விலக்கு தொடர்பாக நாளை மறுநாள் (8ம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "எந்தவொரு நுழைவுத் தேர்வாக இருந்தாலும் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால்தான் நுழைவுத் தேர்வு இல்லாமல், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், கல்லூரி சேர்க்கை நடத்துவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.

    நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும். நீட் விலக்கு மசோதா குறித்து தமிழ்நாட்டு எம்.பிக்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை நீட் தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடைபெறும்." என்றார்.

  4. ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு, பிரபுராவ் ஆனந்தன்

    ஏழு மணி நேர விசாரணைக்கு பின்னர் சிறைக்கு சென்ற ராஜேந்திர பாலாஜி
    படக்குறிப்பு, ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக மூவர் கைது செய்யப்பட்டனர்

    மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, அவருக்கு உதவி 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்ததாக விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை, கர்நாடக மாநிலம் ஹாசனில், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    ராஜேந்திரபாலாஜி மற்றும் அவருக்கு உதவியதாக பா.ஜ.க பிரமுகர் ராமகிருஷ்ணன், நாகேஷன், அதிமுக நிர்வாகி பண்டியராஜன் ஆகிய 4 பேரை போலீசார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணை அதிகாரி கணேஷ் தாஸ் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மதுரை சரக டிஐஜி காமினி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோரும் விசாரணை நடத்தினர்.

    சுமார் 7 மணி நேர தொடர் விசாரணைக்கு பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ராஜேந்திர பாலாஜியை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்தது. இதயைடுத்து திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  5. கிராமி விருதுகள் ஒத்தி வைப்பு - ஒமிக்ரான் பரவல் காரணமாக

    கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் பரவல் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து திட்டமிட்ட பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டோ அல்லது ஒத்தி வைக்கப்பட்டோ வருகின்றன.

    இந்நிலையில், இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற கிராமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இசைக்கலைஞர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் கருத இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிராமி விருதுக் குழு தெரிவித்துள்ளது.

    ஜனவரி 31ம் தேதி 64வது கிராமி விருது வழங்கும் விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வந்தன.

  6. தொடர்ந்து இணைந்திருங்கள் - இனி நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுளை இன்றைய நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    தொகுத்து வழங்குவது ஜோ மகேஸ்வரன்.

  7. டெல்லி மார்க்கெட்டில் தீ விபத்து

    டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சாந்தினி செளக் மார்க்கெட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. டென்னிஸ் பிரபலம் ஜேகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலியா

    டென்னிஸ் பிரபலம் ஜேகோவிச்சிற்கு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய வழங்கப்பட்டிருந்த விசா திடீரென ரத்து செய்யப்பட்டது.

    ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கான போதிய விதிமுறைகளை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்து கொள்ள ஜேகோவிச் ஆஸ்திரேலிய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் ஜனவரி 17ஆம் தேதி மெல்பர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கவுள்ளன.

    இந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இதுவரை ஒன்பது முறை வென்றுள்ளார் ஜேகோவிச்

  9. புத்தாண்டில் ஏவுகணை சோதனை; அண்டை நாடுகளை மீண்டும் கோபமூட்டிய வட கொரியா

    வடகொரியா அதன் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.

    இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையை தென் கொரியாவும், ஜப்பானும் கண்டித்துள்ளன.

    வட கொரியா அணு ஆயுத சோதனைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளைச் மேற்கொள்ள ஐ.நா தடை விதித்துள்ளது.

    தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில் கடந்த ஆண்டு பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா.

  10. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழகம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்தியை தொகுத்து வழங்குபவர் விஷ்ணுப்ரியா ராஜசேகர்.