சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட கோரி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று சனிக்கிழமை எழுதிய கடிதத்தின் சுருக்கம்:
"பெருமழை குறித்த அறிவிப்புகள் உரியநேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வழங்க இயலாதநிலை உள்ளதை காண்கிறோம். உதாரணமாக
30-12-2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆய்வறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய மிதமான மழை காலையில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குறிப்பாக விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து, அதே சமயம் இடியுடன் கூடிய இலேசான மற்றும் மிதமான மழை சென்னையில் சில இடங்களில் பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
பின்னர் மாலை 3.40 மணிக்கு இந்த மையம் அளித்த எச்சரிக்கை அறிக்கையில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் பெய்யும் என குறிப்பிட்டிருந்தது.
ஆனால், மிகக் கடுமையான மழை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வியாழக்கிழமை மதியம் முதல் இரவு வரை பெய்தது. மாலை 4.15 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” வெளியிட்டது. அதற்குள் மிக அதிக கன மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து பலபகுதிகள் மூழ்கி அதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் சென்னையில் ஏற்பட்டது.
இது, சென்னை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை அறிக்கை தயாரிக்கும் அமைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதன் தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதில் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பெருமழை புயல் போன்ற “ரெட் அலர்ட்” சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.