விழுப்புரத்தில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்த போலி சாமியார் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி அவரது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்பவில்லை.
இது குறித்து 15 ஆம் தேதி சிறுமியின் தந்தை திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்துார் பகுதியில் இருப்பது தெரியவந்தது. காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையிலான போலீசார், ஆத்துார் பகுதியில் இருந்து சிறுமியை நேற்று மீட்டனர்.
சிறுமியை கடத்திய எடையாத்துாரைச் சேர்ந்த எல்லப்பன் (வயது 39), ஆட்டோ ஓட்டுநர் பிரபு ( 35), சின்ன பையன் (50) மூவர் மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். எல்லப்பன் எடையாத்துார் திண்டிவனம் அருகே உள்ள வேதநாராயணபுரத்தில் போலி சாமியாராக இருந்து அருள்வாக்கு சொல்லி வருபவர் என்று கூறப்படுகிறது.
திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, "இவர்கள் மூவரும் சிறுமியை அடைத்து வைத்து, கடுமையாக தாக்கியுள்ளனர். வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி இப்போது நலமாக உள்ளார்." என்றனர்.