You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"எனக்கு அமைச்சர் பதவியில் ஆசை இல்லை" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

காங்கோ ஜனநாயக குடியரசில் கிறிஸ்துமஸ் நேரத்தில் கூட்டமாக இருந்த உணவகம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. விருதுநகரில் சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. தற்கொலை, பிரபுராவ் ஆனந்தன்

    விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI) சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டார்.

    விருதுநகரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு சார்பு ஆய்வாளராக இருந்தவர், ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி பானுமதி சிவகாசியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற ராதாகிருஷ்ணன் இரவு வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் டிரைவர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

    சம்பவம் நடந்த இடம் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி. அதனால், இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்குத் தற்கொலை செய்து கொண்டது விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

  2. தில்லியில் 2 வாரங்களாக மீண்டும் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று

    பல மாதங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்ட இந்தியத் தலைநகர் தில்லியில் மீண்டும் இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக உயரத் தொடங்கிவிட்டது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவியபோது அதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது தில்லி. ஆனால், அதில் இருந்து மீண்ட இந்நகரம், தடுப்பூசி செலுத்துவதில் முன்னோடியாக செயல்பட்டது. தொற்று எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தது.

    கொரோனா எதிர்ப்பான்கள் மக்கள் உடலில் எந்த அளவு உள்ளன என்பதை ஆராய்வதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட சீரோ சர்வேயில் தில்லியில் 90 சதவீதம் பேர் உடலில் கொரோனா எதிர்ப்பான்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பல மாதங்களாக கொரோனா தொடர்பான மரணங்களும் பதிவாகாமல் இருந்து வந்தன.

    கடந்த டிசம்பர் 13ம் தேதி ஒரு நாளில் தில்லியில் 30 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகப் பதிவானது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது. ஆனால், இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு பரவத் தொடங்கிய நிலையில் தில்லியிலும் மெல்ல மெல்ல தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து டிசம்பர் 25 சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 0.43 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பதாகவும் தில்லி முதல்வர் அலுவலகத்தின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. சுனாமி தினம்: தூத்துக்குடி மீனவர்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி, பிரபுராவ் ஆனந்தன்

    சுனாமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாமல் இறந்த தம் சொந்தங்களை நினைத்து கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த 2004 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. அதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலை அழித்துச் சென்றது. இதில் தமிழகத்தில் ஏராளமான உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது. அந்தத் தீரா வடுக்களை நினைவு கூறும் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. திரேஸ்புரம் கடற்கரையில் ஆழிப் பேரலையில் இறந்தவர்களுக்கு மீனவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

  4. கொரோனா: "141.37 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது" - சுகாதாரத் துறை அறிவிப்பு

    தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், இந்திய அரசு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 148.37 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.

    இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம், இதுவரை 148.37 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்களை இலவசமாக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.

    மேலும், இன்னும் 17.90 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் பாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று காலை வரையிலான கணக்குப்படி 141.37 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தபட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி கூறுகிறது.

    மேலும், இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 32,90,766 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.

  5. சூடானில் ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடியோர் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

    ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயகம் வேண்டும் என்ற கோரிக்கையோடும் நடத்தப்பட்ட போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    தலைநகர் கார்டூமில் இந்த சம்பவம் நடந்தது.

    கடந்த ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை அருகே குவிந்தனர். அங்கே பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

    முன்னதாக போராட்டக்காரர்கள் திரளத் தொடங்கியதால் நகரில் தொலைபேசி, இணைய சேவைகளை கட்டுப்படுத்தத் தொடங்கியது ராணுவ அரசாங்கம்.

    போர்ட் சூடான் போன்ற பிற நகரங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

    அக்டோபர் 25ம் தேதி நாட்டில் ராணுவக் கிளர்ச்சி நடந்த பிறகு இது போன்ற போராட்டங்கள் அந்த நாட்டில் நடந்து வருகின்றன. கடந்த வாரம், மீண்டும் ஜனநாயக அரசாங்கத்தை நிறுவ வலியுறுத்தி லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் கார்டூமில் பேரணியாகச் சென்றனர்.

    அப்போது போலீசோடு நடந்த மோதல்களில் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.

    டஜனுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

  6. காங்கோவில் கூட்டமான உணவகம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் - 6 பேர் பலி

    ஆப்பிரிக்கவின் காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் கிறிஸ்துமஸ் நேரத்தில் கூட்டமாக இருந்த உணவகம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்கிறார்கள் அந்நாட்டு அதிகாரிகள்.

    நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பெனி நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    உணவகத்தின் நுழைவாயிலில் தற்கொலை குண்டுதாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர் என்றும், அப்போது அவர் குண்டின் விசையை இயக்கி வெடிக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் 6 பேர் இறந்தனர் என்றும், 13 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதலை அலைட் டெமாக்ரடிக் ஃபோர்சஸ் என்ற அமைப்பு நடத்தியதாக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த அமைப்பு 'இஸ்லாமிய அரசு' என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவோடு தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

  7. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது அ.தா.பாலசுப்ரமணியன்.

    எங்களோடு இணைந்திருங்கள்.

    இந்த நாள் இனியதாகட்டும்.