அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்திய குடியுரிமை கேட்டு 10,635 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 14ம் தேதி வரை பாகிஸ்தானில் இருந்து 7,306 பேர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து 1, 152 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து 223, இலங்கையில் இருந்து 223, நேபாளத்தில் இருந்து 189, வங்கதேசத்தில் இருந்து 161 பேரும், சீனாவில் இருந்து 10 பேரும் விண்ணப்பித்துள்ளனர். நாடற்றவர்கள் என்று 428 பேர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய குடியுரிமை விண்ணப்பங்கள் நிலை குறித்து, எம்.பி அப்துல் வகாத் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளிக்கையில் இந்த விபரங்களை தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து, பரிசீலனை செய்து இந்திய உள்துறை அமைச்சகம் குடியுரிமை வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.