சினிமாவில் சாதிய பாகுபாடுகள் இருக்கின்றன: கமல் கருத்துக்கு பா.ரஞ்சித் எதிர்வினை

சினிமாவில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. 'டு ஆர் டை அல்ல டு ஆண்ட் டை' - - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    Stalin

    `அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம். அவர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை. செய்து முடித்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்ற உணர்வோடு நான் கடமையை செய்து வருகிறேன்' என அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    சென்னை, மாதவரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நான் மக்கள் ஊழியன். நீங்கள் அரசு ஊழியர்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.நான் அதிகம் பேசாமல் செயலில் காட்டுவேன். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன், அவ்வளவுதான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்.

    நான் அதிகம் பேசமாட்டேன், செயலில் காட்டுவேன். ஆங்கிலத்தில் டு ஆர் டை (do or die) என்பார்கள். அந்த வார்த்தையை திருத்தம் செய்து சொல்ல வேண்டும் என்றால் டு அண்ட் டை (do and die). அதாவது, செய்து முடித்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்ற உணர்வோடு நான் கடமையை செய்துவருகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், `` தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம். அவர்கள் இல்லையென்றால் அரசாங்கமே இல்லை. அதனை சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்.தி.மு.க ஆட்சி என்பது அரசு ஊழியர்களின் பொற்காலமாக எப்போதுமே இருந்துள்ளது என இங்குள்ளவர்கள் குறிப்பிட்டனர். இப்போதும் அப்படித்தான் அமையும். எப்போதுமே அமையும். தி.மு.க ஆட்சி அமைந்தபோதெல்லாம் அரசு ஊழியர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தது உங்களுக்குத்தெரியும்" எனக் குறிப்பிட்டவர், கருணாநிதி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

    "நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை மூன்று லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளோம். அரசுப் பணியாளர்கள் தங்களின் பணிக்காலத்தில் பெறும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்ரத்து செய்யப்பட்டது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விகிதத்தின்படி விரைவில் அறிவிக்கப்படும்.

    ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ததும் தி.மு.க அரசுதான். கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினீர்கள். இதனைப் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தீர்கள். இதனை முறைப்படுத்தியதும் இந்த அரசுதான்" என மு.க.ஸ்டாலின்குறிப்பிட்டார்.

  3. பாலியல் தொல்லையால் பிளஸ் 1 மாணவி மரணமா? - கைப்பற்றப்பட்ட இரண்டு கடிதங்கள்

    பெண் - சித்தரிப்புப் படம்

    பட மூலாதாரம், Getty images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    சென்னையில் பிளஸ் 1 மாணவி ஒருவர், பாலியல் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொள்வதாக எழுதியுள்ள கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. ` மாணவி மரணம் தொடர்பாக பள்ளி மாணவர்கள் உள்பட நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது' என்கின்றனர் மாங்காடு போலீஸார்.

    சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில் வசித்து வரும் வங்கி ஊழியரின் மகள், பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த சனிக்கிழமையன்று காலையில் வங்கிப் பணிக்குத் தந்தை சென்றுவிடவே, தாயும் மகளும் மட்டும் வீட்டில் இருந்தனர்.வீட்டு சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக மாணவியின் தாய் வெளியில் சென்றுள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அறைக்குள் சென்ற மாணவி, நீண்டநேரமாக வெளியில் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

    கடையில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவியின் தாய், கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள், வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தபோது மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்துசம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு போலீஸார், மாணவியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாள்களாக கடும் மனஉளைச்சலில் மாணவி இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மாணவி எழுதி வைத்திருந்தஇரண்டு கடிதங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒரு கடிதம் கிழிக்கப்பட்டுள்ளது.

    அந்தக் கடிதத்தில், `எனக்கு அந்தக் கனவு வந்து போகிறது. பள்ளிக்கூடம் பாதுகாப்பான இடம் கிடையாது. உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. இந்த உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானது கல்லறையும் தாயின் கருவறையும்தான். பாலியல் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், `பெண்களை மதிப்பதை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்.இது மோசமான சமூகம், கடவுள் ஏன் இப்படி படைத்திருக்கிறார். என்னைப் பார்த்தாலே வெறுப்பாகிறது. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை. என்னைத்தான் தப்பா பார்க்கறாங்க. யாரையும் நம்பாதீங்க. உன்னை நான் சும்மாவிட மாட்டேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அந்தக் கடிதத்தில் மாணவி குறிப்பிடுகின்ற நபர், ஓர் ஆசிரியரின் மகன் என்பதால் மாணவி படிக்கும் பள்ளி, முன்பு படித்த பள்ளி ஆகியவற்றில் உள்ள ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் செல்போன், கடிதம், சந்தேகவளையத்தில் உள்ள 17 வயது சிறுவன் உள்பட சிலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ` பள்ளி மாணவிகள் தற்கொலை சம்பவம் தொடர்வது வேதனையளிக்கிறது. மாணவிகளுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கிறோம். மேலும், உளவியல் ஆலோசனை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.பிரச்னை எதுவாக இருந்தாலும் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்' என்றார்.

    இதுதொடர்பாக, மாங்காடு காவல்நிலைய போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, ``ஒன்பதாம் வகுப்பு வரையில் வேறொரு பள்ளியில் மாணவி படித்து வந்துள்ளார். அப்போது யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவி முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர், தற்போது படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் சிலர் என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது வரையில் யாரையும் கைது செய்யவில்லை. மூன்று மாணவர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடக்கிறது" என்கின்றனர்.

  4. டெல்லியில் 107 பேருக்கு புதியதாக கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

    டெல்லியில் புதியதாக 107 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். பல நாட்களுக்கு பிறகு டெல்லியில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  5. தவறான தகவல் பரப்பியதாக சேலம் வளர்மதி கைது, விஜயானந்த், பிபிசி தமிழுக்காக

    ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலை போராட்ட விவகாரத்தில் தவறான தகவல் பரப்பியதாகக் கூறி சமூக செயற்பாட்டாளர் சேலம் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, பணியாளர்களுக்குத் தரமற்ற உணவைத் தயாரித்த வகையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் தங்கும் விடுதிகளைஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில், பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் உணவை சாப்பிட்ட பெண்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சுமார் 200 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    அப்பெண்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் சிலர் காணாமல் போய்விட்டதாகவும் தரமற்ற உணவால் இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது. இதனால் கோபமடைந்த ஃபாக்ஸ்கான் ஊழியர்கள், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம், வட்டம்பாக்கம் ஆகிய இடங்களில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 16 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டத்தைக் கைவிட்டனர். அதிலும், இறந்து போனதாக சொல்லப்பட்ட பெண் ஊழியர்களை வீடியோ காலில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பேச வைத்ததால், பிரச்னை முடிவுக்கு வந்ததாகக்கூறப்பட்டது.

    இந்த சூழலில், ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் பெண் ஊழியர்கள் இறந்துபோனதாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறி சமூக செயற்பாட்டாளர் சேலம் வளர்மதி மீது எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வளர்மதியை, டிசம்பர் 30 ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையில், பெண் தொழிலாளர்களுக்கு தனியார் விடுதியில் தரமற்ற உணவை வழங்கியதாகக் கூறி விடுதியின் மேற்பார்வையாளர்கள் கவியரசன், பிபின் ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதேநேரம், தொழிலாளர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்த சி.ஐ.டி.யு தலைவர்முத்துக்குமார் உள்பட 22 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவத்துக்கு சி.பி.எம் கட்சியின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, மத்திய சென்னை சி.பி.எம் கட்சியின் மாவட்டத் தலைவர் செல்வா வெளியிட்டுள்ள தகவலில், "சி.ஐ.டி.யூ தலைவர் முத்துக்குமார் முன்னிலையில்தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, மாவட்ட போலீஸ் எஸ்.பி தடியைக் கொண்டு தொழிலாளர்களை தாக்கினார். முத்துக்குமார்உள்பட தொழிலாளர்களைவலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். இதில், 22 பேரை சிறையில் அடைத்துள்ளனர்.

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 67 பெண் தொழிலாளர்களை கைது செய்து டிசம்பர் 18 ஆம் தேதி ஐந்து மணியிலிருந்து தற்போது வரை வல்லக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பெண்களிடமிருந்து செல்போன்களை காவல்துறைபறித்துள்ளது. மண்டபத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியவில்லை. ஒரு தொழிற்சாலையில் உணவு சரியில்லை, தரமான உணவு தேவை என தொழிலாளர்கள் போராடினால் என்ன தவறு?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

  6. அமேசான் இந்தியாவில் சந்தித்த பின்னடைவு: ரூ.200 கோடி அபராதம் செலுத்த உத்தரவு

    இந்தியாவின் பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில், அதன் உண்மையான நோக்கம் மற்றும் விவரங்களை மறைத்ததால், அமேசான் நிறுவனத்துக்கு காம்படிஷன் கமிஷன் ஆ 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    இது அமேசான் நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

  7. நிசாம்பூரில் நடந்த கொலை - பஞ்சாப்பில் மீண்டும் பதற்றம்

    Kapurthala

    பட மூலாதாரம், Pradeep/BBC

    கபுர்தலா மாவட்டத்தின் நிசாம்பூர் கிராமத்தில் உள்ள குருத்வராவை அவமதிக்கும் படியான செயலில் ஈடுபட்டதாக கூறி ஒருவர் கொல்லப்பட்டார்.

    சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக புஷ்டி சிவில் மருத்துவமனையின் எஸ். எம்.ஒ சந்தீப் தாவன் உறுதிப்படுத்துள்ளார்.

    கபுர்தலாவின் எஸ்.எஸ்.பி ஹர்கவல்ப்ரீத் சிங், நிசாம்பூர் கிராமத்தில் அவமதிக்கும் செயலில் ஈடுபட்டவர் திருடுவதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார்.

    பிபிசிக்காக பிரதீப் பண்டித்துடன் தொலைபேசியில் பேசிய எஸ்.எஸ்.பி, "அவர் கோயிலை அவமதிக்கும் செயலில் ஈடுபடவில்லை; பொற்கோயிலில் நடந்த சம்பவம் காரணமாக இவ்வாறு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது," என்று கூறுயுள்ளார்.

    முன்னதாக, குருத்வாராவை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட ஒருவரை பிடித்து வைத்துள்ளோம் என்று தெரிவித்து குருத்வாராவின் புனித நூல் போதகர் அமர்ஜித் சிங் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். சமூக ஊடகத்தில் வைரலான அந்த வீடியோ பதிவில், தரையில் கிடக்கும் ஒருவரை லத்தியில் சிலர் அடிக்கின்றனர். அருகில் சிலர் நின்று கொண்டிருக்கின்றனர். பொற்கோயிலில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, இப்படியான சிலர் வெளியில் விடப்பட்டதாகவும், அக்கிராமத்தில் ஒருவரை பிடித்து வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நபர் அங்கு திருட வந்திருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

  8. பிலிப்பைன்ஸில் புயலால் 90க்கும் மேற்பட்டோர் பலி

    பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மோசமான புயல் ஒன்றால் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    'ராய்' என்று பெயரிடப்பட்ட அந்த புயல் மணிக்கு 195கிமீட்டர் வேகத்தில் வீசியது இதுநாட்டின் தென் கிழக்கு தீவுகளை சூரையாடியது. இதனால் 3 லட்சம் பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    மீட்புக் குழுவினர், ராய் புயல் பேரழிவை ஏற்படுத்தியதாக விவரித்தனர்.

    இருப்பினும் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிடுவது கடினமாகவுள்ளது.

    இந்த புயலால் சுமார் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அதிகம் பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    ஏபி செய்தி முகமை 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த புயலால்உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.

  9. கேரளா: 12 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்ட இரு கட்சி நிர்வாகிகள்

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் 12 மணி நேரத்திற்குள் கொல்லப்பட்டதாக ஏ.என்.ஐ முகிமை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருவர் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (Social Democratic Party of India) கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான்; மற்றொருவர் பாரதிய ஜனதா கட்சியின் ஒ.பி.சி பிரிவின் மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் என்று ஏ.என்.ஐ முகிமை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பேசிய ஆலப்புழாவின் எஸ்.பி, ஜி.ஜெய்தேவ்," இது குறித்து கூடுதல் விசாரணை தேவைப்படுகிறது. நேற்று இரவு ஒரு கொலை நடந்துள்ளது; மற்றொரு கொலை இன்று காலை 6:30 மணியளவில் நடந்தது. நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறோம். சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இரு கொலைகளுக்கும் இடையே ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்", என கூறியதாக ஏ.என்.ஐ முகிமை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. சினிமாவில் சாதிய பாகுபாடுகள் இருக்கின்றன: கமல் கருத்துக்கு பா.ரஞ்சித் எதிர்வினை

    இயக்குநர் பா.ரஞ்சித்

    பட மூலாதாரம், FACEBOOK

    படக்குறிப்பு, இயக்குநர் பா.ரஞ்சித்: கோப்புப்படம்

    சினிமாவில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசினார்.

    அப்போது பேசிய கமல்ஹாசன், "திறமை இல்லாமல் சினிமாவில் ஜொலிக்கவே முடியாது. இங்கு சாதி கிடையாது, மதம் கிடையாது. அதுதான் உண்மை. அதனை சில பேர் மறுக்கலாம், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. (திரையரங்குகளில்) விளக்கை அணைத்துவிட்டால் இங்கு சாதி இல்லை. ஒரே மதம், ஒரே கதை, ஒரே மொழிதான் இங்கு இருக்கிறது" என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் வேறொரு நிகழ்வில் பேசும்போது, "சினிமாவில் சாதிய பாகுபாடு குறித்த எனது நிலைப்பாடு தெளிவானது. சினிமாவில் சாதிய பாகுபாடுகள் இருக்கின்றன. அதனை நான் உணர்கிறேன்" என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11. இலங்கையில் 43 இந்திய மீனவர்கள் கைது

    மீனவர்கள்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    யாழ்ப்பாணம் − நெடுந்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

    சனிக்கிழமை இரவு இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக 6 படகுகளில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் - மயிலிட்டி மீனவத் துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

    கரைக்கு அழைத்து வரும் மீனவர்கள், சுகாதார நடைமுறைக்கு அமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

    அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

  12. சிமோன் பைல்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

    சிமோன் பைல்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸுக்கு பிபிசி ஸ்போர்ட்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

    24 வயதான சிமோன் பைல்ஸ் ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் சிறந்த வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 4 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களும், 19 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

    தனது மனநலப் பிரச்னை குறித்து வெளிப்படையாகப் பேசியதற்காகப் பாராட்டப்பட்டார்.

    கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மேலும் பல பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கியமான 5 போட்டிகளில் இருந்து விலகினார்.

  13. ஹாங்காங்கில் இன்று சட்டசபைக்கானதேர்தல்

    ஹாங்காங்

    பட மூலாதாரம், Getty Images

    சீனா கொண்டு வந்த அரசியல் சட்ட மாற்றங்களுக்குப் பிறகு ஹாங்காங்கில் இன்று முதலாவது சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

    தேசபக்தர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் தேர்தல் நடைமுறை மாற்றப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது.

    ஆனால் இது நாட்டின் ஜனநாயகக் குரல்களை முடக்கும் செயல் என விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் ஹாங்காங்கு தனி நிர்வாக நடைமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.

    கடந்த மார்ச் மாதம் சீனா இயற்றிய சட்டத்தின் மூலம் இதற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

  14. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம். மணிகண்டன், நந்தினி வெள்ளைச்சாமி