You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பாகிஸ்தான்: கராச்சியில் வெடி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சியில் ஷேர்ஷா என்ற பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இன்றுடன் நிறைவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தூத்துக்குடி அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் ஒருநபர் ஆணைய விசாரணையை முடிக்க தீவிரம்

    தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் போராட்டக்காரகளை நோக்கி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக நடந்த 32 கட்ட விசாரணையில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 33-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    ஒருநபர் ஆணையத்தின் 33வது அமர்வின் முதற்கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.

    இதுதொடர்பாக ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட 18 உயர் அதிகாரிகளில் 15 பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதில் ஒரு ஐ.ஏ.எஸ்., ஒரு போலீஸ் ஐ.ஜி. மற்றும் 8 காவல் கண்காணிப்பாளர்கள் அடங்குவர்‌. 33-வது அமர்வின் இரண்டாம் கட்ட விசாரணை 27-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறும். இதில், சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாதவர்கள் ஆணையத்தின் முன்பு விளக்கமளிப்பார்கள். நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து குறிப்பிட்டு சில விஷயங்களை கூறியதனால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். எனவே, முன்னாள் முதல்வர் முதல் ஏற்கனவே ஆஜராகி விளக்கமளித்தவர்கள் வரை தேவையென்றால் மட்டுமே விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். அரசு கொடுத்த காலக்கெடுவுக்குள் ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கு அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

  3. பட்டுக்கோட்டியில் 6 மாத குழந்தையை பலி கொடுத்த பாட்டி, மணிவண்ணன், திருச்சியிலிருந்து

    பட்டுக்கோட்டையை அடுத்தமல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (32). இவரது 6 மாத பெண் குழந்தை நேற்று முன் தினம் வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் நீர் நிறைந்த பிளாஸ்டிக் தொட்டியில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்தார்.

    பின்னர் குடும்பத்தினர் கலந்துபேசி இறந்தகுழந்தையை மல்லிப்பட்டினத்தில்அடக்கம் செய்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை செய்ததில், குழந்தையின் பாட்டியே பேத்தியை கொன்றது தெரியவந்துள்ளது.

    நசுருதீனின் சின்னம்மா ஷர்மிளாபேகம் (48) இவரது கணவர் அசாருதீன் (50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதிலிருந்து அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினத்தில் குறிசொல்லும் முகமதுசலீம் என்பவரிடம்ஷர்மிளா பேகம் சில நாட்களுக்கு முன்பு குறிபார்த்துள்ளார்.

    கணவரின் உடல்நலம் குணமடைய உயிர்ப்பலி கொடுக்கவேண்டும் என்று குறிபார்ப்பவர்சொன்னதாக தெரிகிறது.

    இதனால் ஷர்மிளாபேகம் தமது வீட்டுக்கு அருகில் உள்ள அக்கா மகன் நசுருதீனின் குழந்தையை நள்ளிரவில் தூக்கிச்சென்று தண்ணீர் உள்ள பிளாஸ்டிக் மீன்தொட்டியில் அமுக்கி பலி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்துபட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்துசேதுபாவாசத்திரம் போலீசார், பாட்டி ஷர்மிளாபேகம், அவரது கணவர் அசாருதீன், குறிசொல்லும் முகமதுசலீம் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துதீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    காவல்துறையினர் விசாரிக்கும்போது குழந்தையின்பாட்டி ஷர்மிளாபேகம் குற்றத்தை ஒப்புகொள்ளவில்லை எனவும் இறுதி விசாரணையில்குற்றத்தை ஒப்புகொண்டார் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    குழந்தையின் தாய் சாலிகா கூறுகையில் குடும்பத்தில் அனைவரும் இரவு சாப்பிட்டபிறகு கடைசியில் தான் சாப்பிட்டதாகவும் தூக்கத்தின் இடையில் அதிகாலை விழித்துபோது குழந்தையை காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

  4. "மாற்றுக் கருத்து கொண்டவர்களை கைது செய்வதில் எனக்கு உடன்பாடில்லை" - ஆழி செந்தில்நாதன்

    வெறுப்புக் கருத்துகளை பரப்புவதற்கான சமூக வலைதளங்கள் மாறுகின்றனவா? மூத்த பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதனுடன் பிபிசியுடன் பகிர்ந்த தகவல்.

  5. பாகிஸ்தானில் வாயு கசிந்து வெடி விபத்து - 14 பேர் பலி

    பாகிஸ்தானின் கராச்சியில் ஷேர்ஷா என்ற பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    கழிவுநீர் அமைப்பின் மீது அந்த வங்கி கிளை கட்டப்பட்டிருந்ததாகவும், கழிவுநீர் அமைப்பில் ஏற்பட்ட வாயு கசிவே வெடிப்புக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

    காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காயமடைந்தவர்களில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    சிந்து மாகாணத்தின் சுகாதாரத் துறை அமைச்சர், இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் இது “மிகப்பெரிய துயரச் சம்பவம்” என அவர் தெரிவித்துள்ளார்.

  6. சாத்தான்குளம் வழக்கை 5 மாதங்களில் முடிக்க உத்தரவு

    சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு குறித்த வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    கால அவகாசம் கோரி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம் செல்வராணி தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றத்தில் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் தந்தை- ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது .இந்த வழக்கு இன்று நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது,மதுரை மாவட்ட வழக்கின் விசாரணை நீதிபதி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி உத்தரவில், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட செல் போன், உள்ளிட்ட பொருட்கள் தடய அறிவியல் பரிசோதனைக்கு குஜராத்திற்கு அனுப்பபட்டு உள்ளது. இதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம், சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறப்பட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து நீதிபதி, சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு குறித்த வழக்கை 5 மாதங்களில் விசாரித்து முடிக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

  7. ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் போலிசார் விசாரணை

    சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் இருவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    வேலை வாங்கித் தருவதாக பல கோடி வரை மோசடி செய்த வழக்கில் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப் படைகள் அமைத்து தேடி வரும் நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவரது சகோதரி மகன்கள் வசந்தகுமார் மற்றும் ரமணன் ஆகியோரை திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் திருத்தங்கல்காவல் நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டதால் பரபரப்பாக காணப்படுகிறது.

  8. உத்தரப் பிரதேசத்தில் இந்திய பிரதமர் மோதி

    உத்தரப் பிரதேசத்தின் ஷாஜாஹான்பூரில் கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை தொடங்கி வைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

    கங்கா எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோதி, இந்த திட்டம் பல புதிய தொழிற்சாலைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

    திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோதி, “அதேபோன்று இந்த எக்ஸ்பிரஸ்வே இளைஞர்களுக்கு எண்ணற்ற பணியிடங்களையும், வேலை வாய்ப்புகளையும் அளிக்கும்”

    “அடுத்த தலைமுறை கட்டமைப்புகளுடன் இந்தியாவின் அதிநவீன மாநிலமாக உபி விரைவில் அடையாளப்படுத்தப்படும்”

    “இங்கு கட்டப்படும் புதிய விமான நிலையங்கள், கட்டமைக்கப்படும் புதிய ரயில் பாதைகள், உபியின் மக்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கும்.”

    “உபியில் தற்போது கொண்டுவரப்படும் நவீன கட்டமைப்புகள், வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை காட்டுகிறது.”

    “இதற்கு முன்னர் பொதுமக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று உபி.,யின் பணம் உ.பி.,யின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

  9. நெல்லை பள்ளி விபத்து: பள்ளி தாளாளர், ஒப்பந்தகாரர் நீதிபதி முன் ஆஜர்

    நெல்லை சாப்டர் பள்ளி தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், ஒப்பந்தகாரர் ஆகிய இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 31ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து தொடர்பாக பள்ளி தாளாளர் சாமுவேல் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்வி, மற்றும் கட்டட ஒப்பந்தகாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடந்துவந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்விக்கு விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் பள்ளி தாளாளர் சாமுவேல் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை நீதிபதிகள் குடியிருப்பிற்கு இன்று அதிகாலை அழைத்துச் சென்று குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 நீதிபதி ஜெய்கணேஷ் முன் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் வரும் 31- ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

    மேலும் நெஞ்சுவலி காரணமாக நெல்லைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதலைமை ஆசிரியை ஞான செல்வியைநேரில் சென்று விசாரணை நடத்திய நீதிபதி வரும் 31ந்தேதிநீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    ஞான செல்வியின் சிகிச்சை முடிவுக்கு பின் கொக்கரக்குளம் கிளை சிறையில்அடைக்க நீதிபதி உத்தவிட்டார்.

  10. ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவு

    ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

    ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், "இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதி ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் புதியம்புதூர், சிப்காட்டை சேர்ந்த சிலர் கொரோனா 3ஆவது அலை ஏற்பட்டால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வலியுறுத்தியும் ஜூலை 27-ஆம் தேதி ஆலை முன்பாக கூடியுள்ளனர். ஆலை முன்பு கூடியவர்கள் மீது சிப்காட் மற்றும் புதியம்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக்கூடாது எனும் நோக்கிலேயே அவர்கள் கூடினர். ஆகவே, இந்த வழக்கை விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கவும், இந்த வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    அதோடு, மதுரைக்கிளையில் வழக்கை ரத்து செய்யுமாறு மனுத்தாக்கல் செய்தவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கு பதியப்பட்ட அனைத்து பணியாளர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

  11. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பெண்கள் சாலைமறியல்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்பட்ட உணவு தரமற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உணவை உண்ட சுமார் 116 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர்களில் பலர் உடனடியாக குணமடைந்து வீடு திரும்பினர். நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை மோசமடைந்ததாக நேற்று வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவின.

    இதையடுத்து, அந்நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 மணி நேரத்திற்கும் மேல் சாலை மறியல் நடைபெற்றதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  12. மதுரை மாவட்டத்தில் 200 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு

    மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த 200 பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 120 வகுப்பறை கட்டிடங்களும் 80 கழிவறை கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அங்கு மாணவர்கள் சொல்லாத வகையில் முன்னதாக கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அவற்றை, முழுமையாக இடிக்க உத்தரவிட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

  13. ஒமிக்ரானால் தீவிரமாக நோய்வாய்ப்படுவதிலிருந்து பூஸ்டர் மூலம் 85% வரை பாதுகாப்பு கிடைக்கலாம்

    கொரோனா பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக சுமார் 85 சதவீதம் வரை தீவிர நோய்வாய்ப்படுவதற்கு எதிராக பாதுகாப்பு வழங்கலாம் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.

    மற்ற கொரோனா திரிபுகளுக்கு எதிராக கிடைத்த பாதுகாப்பை விட ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கிடைக்கும் பாதுகாப்பு குறைவு தான் எனவும் அப்பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பூஸ்டர் டோஸ் பலரை மருத்துவமனை சிகிச்சையிலிருந்து காப்பாற்றும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  14. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்ததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தினர்

    அமெரிக்காவின் படைப்பிரிவில் ஒன்றான மரைன் கார்ப்ஸ் நவம்பர் 28ஆம் தேதிக்குள் பணியிலுள்ள துருப்புகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    100-க்கும் மேற்பட்ட மரைன் துருப்பினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை மரைன் கார்ப்ஸ் படைப்பிரிவிலிருந்து வெளியான அறிக்கையில், இதுவரை 103 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    மரைன் பிரிவில் 95% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 1,007 பேருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் இதுவரை ஆறு உயர் அதிகாரிகள் (அதில் இரு பட்டாலியன் கமாண்டர்களும் அடக்கம்) தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்ததால் பணியிலிருந்து விடுவிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  15. சீன டிரோன் உற்பத்தியாளரான டி.ஜே.ஐ மீது புதிய கட்டுப்பாடுகள் விதித்த அமெரிக்கா

    அமெரிக்கா, டி.ஜே.ஐ டிரோன் நிறுவனம் உட்பட, எட்டு சீன நிறுவனங்கள் மீது சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வியாழக்கிழமை, அமெரிக்காவின் கருவூலத் துறை இந்த நிறுவனங்களின் பங்குகளை அமெரிக்க குடிமக்கள் வாங்க தடை விதித்துள்ளது.

    டி.ஜே.ஐ டிரோன் டெக்னாலஜி நிறுவனத்தின் டிரோன்கள், சீனாவில் உள்ள வீகர் இஸ்லாமியர்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க கருவூலத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

    இது ஓர் அடையாள ரீதியிலான தடையாகவே கருதப்படுகிறது. காரணம் டி.ஜே.ஐ பொதுவெளியில் வர்த்தகமாகும் நிறுவனமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்கள் டி.ஜே.ஐ நிறுவனத்தின் டிரோன்களை வாங்கலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமென்னவெனில், 900-க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் உள்ள பொது பாதுகாப்பு முகமைகள் டி.ஜே.ஐ சாதனங்களை பயன்படுத்தி வருகின்றன.

    இதில் நியூயார்க் நகர காவல்துறையும் அடக்கம். கடந்த ஆண்டு, அமெரிக்காவின் ஒட்டுமொத்த டிரோன் சந்தையில் கிட்டத்தட்ட 80% சந்தையை பிடித்துள்ளது டி.ஜே.ஐ என துறை சார் தரவுகள் கூறுகின்றன.

  16. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி, நந்தினி வெள்ளைச்சாமி.