You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு தடை விதிக்க சம்மதித்த ஜெர்மன் தலைவர்கள்

ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடை விதிக்க ஜெர்மனியின் மாகாண தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இது தேச நலனுக்கானது என ஏங்கலா மெர்க்கல் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இம்ரான் கானுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய தூதரகத்தின் ட்வீட்

    செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று (டிசம்பர் 3) வெளியிடப்பட்ட ஒரு பதிவு காரணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலை உருவானது.

    ஆனால், அந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு வெளியிடப்பட்டது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  2. அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்

    அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்தப் பதவிகளுக்கு விருப்பமனு வாங்க வந்த ஒருவர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து விரட்டப்பட்டார்.

    அ.இ.அ.தி.மு.கவின் ஒருங்கிணப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு உரியவர்கள் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என டிசம்பர் 1ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் ஏழாம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளாக பொன்னைய்யன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

  3. விவசாயிகளுக்கு உதவுவதில் மத்திய அரசிடம் நேர்மை இல்லை - ராகுல் காந்தி

    போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. இது குறித்து வேளாண் அமைச்சகத்தில் எந்தவித தகவலும் இல்லை. எனவே, இது குறித்த கேள்வியும் எழவில்லை என்று அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும், எங்களிடம் 403 பேர் கொண்ட பட்டியல் உள்ளது. இறந்தவர்களுக்கு பஞ்சாப் அரசு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மொத்தம் 152 பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளது. மற்ற மாநிலத்தவர்களின் பட்டியலும் எங்களிடம் உள்ளது. மூன்றாவது பட்டியலும் உள்ளது. இவற்றை, எளிதில் பொது தளத்தில் உறுதிப்படுத்தலாம். ஆனால், அமைச்சக ஆவணத்தில் இல்லை என்று அரசு சொல்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    "இந்த விவகாரத்தில் தவறு செய்து விட்டதாகக் கூறி, நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்தத் தவறினால் 700 பேர் இறந்துள்ளனர். ஆனால், இப்போது பொய் சொல்கிறீர்கள். அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கும் நேர்மை உங்களிடத்தில் ஏன் இல்லை," என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  4. சிங்கப்பூரில் ஓமிக்ரான்: இருவருக்குப் பாதிப்பு உள்ளது உறுதி, சதீஷ் பார்த்திபன்

    சிங்கப்பூரில் கொரோனாவின் வைரசின் புதிய திரிபான ஓமிக்ரான் தொற்றுப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்த விமானப் பயணிகளில் இருவருக்கு முதற்கட்டப் பரிசோதனையிலேயே ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை சிங்கப்பூர் சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டது.

    பாதிக்கப்பட்ட இருவரும் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 1) ஜோஹனஸ்பெர்க் நகரில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தனர். இதையடுத்து அனைவரும் உடனடியாகதனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து சமூக அளவில் வைரஸ் தொற்று பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இரு நோயாளிகளும் தற்போது சிங்கப்பூரின் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், லேசான நோய் அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 41 வயதான சிங்கப்பூரர் என்பதும், மற்றொருவர் 44 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதும் தெரியவந்துள்ளது.

    ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், மரபணு பரிசோதனையின் மூலம் அதை மறு உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இருவரது மாதிரிகளும் தேசிய பொதுச்சுகாதார ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இரு நோயாளிகளுடன் அவர்கள் வந்த விமானத்தில் 19 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முதற்கட்ட பரிசோதனையில் தொற்றுப் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

    எனினும் பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், 19 பேருக்கும்கொவிட் -19 பாதிப்புள்ளதா என்பதைக் கண்டறிய மீண்டும் பரிசோதனை நடத்தப்படும்.

  5. இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை, ரஞ்சன் அருண் பிரசாத்

    இலங்கை முழுவதும் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று (03) மதியம் 12 மணியளவில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது.

    பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன கூறியுள்ளார்.

    இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், கொழும்பின் சில பகுதிகளுக்கு மாத்திரம் மின் விநியோகம் தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மேலும் சில மணிநேரம் எடுக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளமையினால், நாட்டின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

    மேலும், மின்சாரம் தடைப்பட்டுள்ளமையினால், வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ள நிலையில், பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன். ரயில் சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால், ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

  6. இல்லாத வல்லுநர் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு: அமெரிக்காவுக்கு எதிராக சீனாவில் பிரசாரம்

    சீனாவை மையமாகக் கொண்ட, ஒரு தவறான செய்தியை பரப்பும் 500க்கும் மேற்பட்ட கணக்குகளைக் கொண்ட குழுவை ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட கணக்குகள் ஒரு போலியான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'வில்சன் எட்வர்ட்ஸ்' என்கிற உயிரியலாளரை விளம்பரப்படுத்தின.

    உயிரியலாளர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அக்கணக்கு, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. எட்வர்டின் கருத்துகளை சீன அரசு ஊடகங்கள் பரவலாக பிரசுரித்துள்ளன. ஆனால் சுவிட்சர்லாந்தின் தூதரகமோ, அப்படி ஒரு நபர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறியுள்ளது.

    சமூக வலைதளங்களில் அக்குழு மேற்கொண்ட பிரசாரம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என மெடா நிறுவனம் தன் அறிக்கையில் கூறியுள்ளது. அப்பிரசாரம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஆங்கிலம் பேசும் பயனர்கள் மற்றும் சீன மொழி பேசும் தைவான், ஹாங்காங், திபெத் நாட்டைச் சேர்ந்தகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  7. மலேசியாவில் ஊடுருவிய ஓமிக்ரான்: 19 வயது பல்கலை மாணவிக்கு தொற்று உறுதி, சதீஷ் பார்த்திபன்

    உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனாவின் புதிய திரிபான ஓமிக்ரான் மலேசியாவிலும் ஊடுருவி உள்ளது. இத்தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் இன்று தெரிவித்துள்ளார்.

    கடந்த நவம்பர் 19ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த, மலேசியர் அல்லாத பல்கலைக்கழகமாணவி ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    நவம்பர் 11 முதல் 28ஆம் தேதி வரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    மேலதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டபோது 19 வயதான அம்மாணவிக்கு ஓமிக்ரான் திரிபு பாதிப்பு இருப்பது உறுதியானது.

    டிசம்பர் 2ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதாகத் தெரிவித்த மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின், பாதிக்கப்பட்ட மாணவி பேராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும், தென்னாப்பிரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவர் மலேசியா வந்தடைந்ததாகவும் தெரிவித்தார்.

    "கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை முடிந்த பின்னர் அம்மாணவி பேருந்து மூலம் ஈப்போ நகருக்குச் சென்றுள்ளார்.

    அந்தப் பேருந்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள பயணிகள், ஓட்டுநர் உள்ளிட்ட ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் யாருக்கும் தொற்றுப் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

    எனினும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்," என்றார் அமைச்சர் கைரி. முன்னதாக ஒமிக்ரான் பாதிப்பு அபாயமுள்ள 50 நாடுகளை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்த மலேசியா, அவற்றுள் 26 நாடுகளுக்கு பயணத்தடையும் விதித்துள்ளது.

  8. இலங்கையில் முதல் ஒமிக்ரான் தொற்று, ரஞ்சன் அருண்பிரசாத்

    இலங்கையில் முதல் முறையாக ஒமிக்ரான் கோவிட் திரிபு தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் இந்த தகவலை இன்று (03) உறுதிப்படுத்தியது.

    தென் ஆபிரிக்காவிலிருந்து நாட்டிற்கு வருகைத் தந்த ஒருவருக்கே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்றாளர் குறித்து, உடனடியாக அச்சப்பட வேண்டியதில்லை என சுகாதார அமைச்சின் பிரதிப் பணி;பபாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார். ஒமிக்ரான் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

  9. சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்தவருக்கு கொரோனா

    சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    "அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்ட்டுள்ளன. சோதனை முடிவு வந்த பிறகே ஒமிக்ரான் பாதிப்பா என்பது தெரிய வரும்," என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகள் உள்ள பட்டியலில் உள்ள சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் திருச்சிக்கே அதிக பயணிகள் வருகின்றனர்.

  10. 24 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை அவசியம் - அமெரிக்கா புதிய கட்டுப்பாடு

    வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவுக்கு விமானம் ஏறுவதற்கு முன், 24 மணி நேரத்துக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த விதி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் பொருந்தும்.

    விமானங்கள், ரயில்கள், பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து கொள்ளும் விதி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் இந்த புதிய கட்டுப்பாடுகளில் ஊரடங்கோ கடைஅடைப்புகளோ அறிவிக்கப்படவில்லை, குறிப்பாக கட்டாய தடுப்பூசி குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

  11. ஒமிக்ரான்: தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஜெர்மனியில் தீவிர கட்டுப்பாடு

    கொரோனா நான்காவது அலையைத் தடுப்பதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் விலக்கி வைக்க அந்நாட்டு தேசிய, மாகாண தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். பதவி காலத்தை முடிக்க உள்ள அதிபர் ஏங்கலா மார்க்கெல், இந்த தொலைநோக்கு நடவடிக்கைகளை "தேச நலனுக்கான" செயல் என்று விளக்கியுள்ளார்.

    தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அல்லது கொரோனா தொற்றிலிருந்து அண்மையில் மீண்டவர்கள் மட்டுமே உணவகங்கள், திரையரங்குகள், ஓய்வு விடுதிகள் வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். "பிப்ரவரி மாதத்திற்குள் தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படலாம்," என்றும் ஆட்சித் தலைவர் கூறினார். ஜெர்மனியில் ஏற்பட்ட கொரோனா அலைகளிலேயே 4வது அலை கடுமையானதாக உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 388 பேர் இறந்துள்ளனர். ஒமிக்ரான் திரிபின் பரவல் குறித்த கவலையும் அதிகரித்து வருகிறது, அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இத்திரிபால் பாதிக்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துளனர். "சூழலைக் கருத்தில் கொண்டு, கட்டாய தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதே சரியாக இருக்கும்." என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.

  12. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி, ஜோ மகேஸ்வரன்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்https://bbc.com.im/tamil/live/global-59500901%3C/a%3E%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3C/ol%3E%3C/div%3E%3Cdiv class="css-1s4wzbg">