ரஷ்ய நிலக்கரி சுரங்க விபத்தில் 52 பேர் பலி

சைபீரியாவில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சமாக 52 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து கடந்த பல தசாப்தங்களில் ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாக கூறப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே...!

    இன்றைய இந்த நேரலையில் எங்களோடு இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.

    நாளை மீண்டும் வேறொரு நேரலையில் சந்திப்போம்.

    இந்த இரவு இனியதாகட்டும்.

  2. 'ஆண்ட பரம்பரையில் வந்த நாம் அடுத்தவர்களை துதிபாடுகிறோம்' - ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக வேண்டும். கடலூரில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால், இந்த பதவிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாடு மேய்க்கும் சிறுவனான, படிக்காத ஒருவனுக்கு இந்த மாவட்ட பொறுப்புகளை கொடுத்துவிடுவேன்," என்று கடலூரில் நடைபெற்ற பாமக ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

    கடலூர் மாவட்ட பாமக ஒருங்கிணைந்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித்தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ராமதாஸ்
  3. 'இலங்கையில் மனித உரிமை மீறல்கள்' - பயிற்சியை நிறுத்த ஸ்காட்லாந்து போலீஸ் முடிவு

    இலங்கையில் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால், இலங்கை காவல்துறைக்கு அளித்து வரும் பயிற்சிகளை முடித்துக்கொள்ள இருப்பதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    2010ஆம் ஆண்டு முதல் இந்தப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இலங்கை காவல்துறைக்கு ஸ்காட்லாந்து காவல்துறை தொடர்ந்து பயிற்சியளித்து வருவதை எதிர்த்து மனித உரிமைகளுக்கான பிரசாகர்கள் எதிர்ப்பு வெளியிட்டபின் இப்பயிற்சி இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

    இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து இடையிலான பயிற்சி ஒப்பந்தம் வரும் மார்ச் மாதம் முடிவடையவுள்ள நிலையில் அது மீண்டும் புதுப்பிக்கப்படாது என்று ஸ்காட்லாந்து காவலர்களுக்கான தலைவர் (Chief Constable) ஐயான் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தப் பயிற்சி சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டது என்று ஸ்காட்லாந்து காவல் ஆணையத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.

    'இலங்கையில் மனித உரிமை மீறல்கள்' - பயிற்சியை நிறுத்த ஸ்காட்லாந்து போலீஸ் முடிவு

    பட மூலாதாரம், Getty Images

  4. உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

    ''மக்கள் பணியே எனக்கான பிறந்தநாள் பரிசு'' என்று நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின்
  5. "அரசியலமைப்புச் சட்டம் நவீன 'கீதையைப்' போன்றது" - ஓம் பிர்லா

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது நமக்கு நவீன காலத்து 'கீதை' போன்றது. அது நம்மை நாட்டுக்காக உழைக்க ஊக்குவிக்கிறது.

    நாம் அனைவரும் நாட்டுக்காக உழைக்க உறுதி ஏற்றுக் கொண்டால், நாம் 'ஒரே தேசம், சிறந்த தேச'-த்தை உருவாக்கலாம் என இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அரசியலமைப்புச் சட்ட நாள் கொண்டாட்டத்தில் பேசியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    இந்நிகழ்ச்சி இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் (Central Hall) நடந்து வருகிறது.

  6. 50 பிறழ்வுகளோடு உலகை அச்சுறுத்தும் B.1.1.529 கொரோனா திரிபு

    கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது.

    இது மிகவும் அச்சுறுத்தக் கூடியது என ஓர் அறிவியலாளர் இதை விவரித்துள்ளார், மற்றொருவரோ தாங்கள் கண்ட திரிபுகளிலேயே இதுதான் மிகவும் மோசமான திரிபு என என்னிடம் கூறினார். இது இந்தத் திரிபு தொடர்பான விவரங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கும் ஆரம்ப நாட்களில் கூறப்பட்டவை.

    இத்திரிபால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்தத் திரிபு மேற்கொண்டு பரவியிருக்கலாம் என்பதற்கான சில குறிப்புகளைக் காண முடிகிறது.

    இந்தப் புதிய திரிபு எவ்வளவு வேகமாக பரவும், கொரோனா தடுப்பூசிகளால் மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் பாதுகாப்பு அம்சங்களை இது எப்படி கடக்கிறது, இந்த புதிய கொரோனா திரிபை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என பல கேள்விகள் இப்போது எழுகின்றன.

    B.1.1.529 கொரோனா திரிபு குறித்து பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன, ஆனால் வெகுசில தெளிவான விடைகள் மட்டுமே இருக்கின்றன.

    கொரோனா வைரஸ் கோப்புப் படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, கொரோனா வைரஸ் கோப்புப் படம்
  7. சைபீரிய சுரங்க விபத்தில் 52 பேர் பலி

    சைபீரியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விபத்து கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாக கூறப்படுகிறது.

    நவம்பர் 25ஆம் தேதி, வியாழக்கிழமை, மாஸ்கோவிலிருந்து சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிஸ்ட்வேஸ்னியா (Listvyazhnaya) என்ற சைபீரிய சுரங்கத்தில் காற்றோட்டத்துக்காக சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த வாயிற் குழியில் படிந்திருந்த நிலக்கரித் துகள்களில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

    அவசர உதவி சேவையைச் சேர்ந்த ஓர் அதிகாரி, சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களில் யாரும் உயிரோடு இல்லை என ஒரு செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

    லிஸ்ட்வேஸ்னியா சுரங்கத்தின் இயக்குநர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய ஆய்வுக் குழு கூறியுள்ளது. 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் நான்கு பேர் மிக மோசமான நிலையில் இருக்கின்றனர். ரஷ்யாவில் உள்ள 58 நிலக்கரிச் சுரங்கங்களில் 34% சுரங்கங்கள் பாதுகாப்பற்றவை என்று 2016இல் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    coal mine siberia

    பட மூலாதாரம், AFP

  8. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.