சென்னைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை

வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் கரையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 17, 18 தேதிகளில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா தலைமை நீதிபதியாக நியமித்தார் குடியரசு தலைவர்

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலேஜ்ஜியம்) அளித்த பரிந்துரையை ஏற்று அவரை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

    இதற்கான அறிவிப்பு இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை இன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது.

    இந்திய சட்டத்துறை

    பட மூலாதாரம், DOJ

  3. சிவகாசியில் சட்டவிரோத பட்டாசுகள் வெடித்ததில் தரைமட்டமான கட்டடம் - இருவர் காயம், இருவரை காணவில்லை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்த சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர். சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது நேருஜி நகர் . சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    அந்த பகுதியில் ராமநாதன் என்பவர் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார் - இவர் குழாய் கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

    இந்த சம்பவத்தில் வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பஞ்சவர்ணம் , கார்த்தீஸ்வரன், சமீதா ஆகிய 4 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே, வீட்டின் உரிமையாளர் ராமநாதன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த வெடி சம்பவம் குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  4. திருச்சியில் அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர், ஜி. மணிவண்ணன், திருச்சி

    பாஜகவினர் போராட்டம்
    படக்குறிப்பு, அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபடும் பாஜகவினர்.

    மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 35 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாண்ணுவின் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பாஜகவினர் அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் தடுப்புகளை அமைத்து முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து பாஜகவினர் தர்னாவில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகரன், பிரதமர் நரேந்திர மோதியை அவமதிக்கும் வகையில் அய்யாக்கண்ணு செயல்பட்டு வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் நாளை முதல் அய்யாக்கண்ணுவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

  5. விசாரணை கமிஷன் என்ற பெயரில் மிரட்டுகிறார் மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, ஏ.எம். சுதாகர், சேலம்

    எடப்பாடி பழனிசாமி

    வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்படுவதை எதிர்கட்சி என்ற முறையில் எடுத்துக் கூறினால் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்ததாகவும் அதை விசாரிக்க கமிஷன் அமைப்போம் என்றும் கூறி மிரட்டுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.

    சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் ஒன்றியத்திலுள்ள வெள்ளாளபுரம் ஏரி நிரம்பியதால் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்கள் வீடுளில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து இன்று எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை பேசிய அவர், "திமுக அரசு பருவமழைக்கு முன்னரே நீர்நிலைகளை தூர்வார சரியான திட்டமிடாததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்," என்று கூறினார்.

    நாளைய தினம் நானும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்டா பகுதிகளை பார்வையிட உள்ளோம்.தமிழக வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் உதவி கேட்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியபோது, நாங்களும் மத்திய அரசிடம் என்கிறார் ஸ்டாலின் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    மேலும் 100 ஏரி நிரப்பும் திட்டம் 60 சதவீதம் முடிந்த நிலையில், திமுக அரசு அதை மெத்தனமாக செய்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியதால் தான் அதிகமான தண்ணீர் சேமிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.

    மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவதாக எதிர்கட்சி என்ற முறையில் குற்றம்சாட்டினால், உடனே முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடு பற்றி விசாரிக்க கமிஷன் அமைப்போம் என்று மிரட்டும் வகையில் பேசுகிறார் ஸ்டாலின் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அறிமுகமான பல திட்டங்களைத்தான் திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது. திமுக அரசு புதிதாக திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  6. கோயில்களில் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு சீமான் கண்டனம்

    இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமர் மோதியின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    நவம்பர் ஐந்தாம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சில கோயில்களில் மின்னணு திரை மூலம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதில் பா.ஜ.கவின்மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தளங்களாக விளங்கும் கோயில்களை மதவெறி அரசியலுக்கும் கட்சியின் வேர்பரப்பலுக்கும் தன்னல செயல்பாடுகளுக்கும் பா.ஜ.கவினர் பயன்படுத்த முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

    "தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரதமர் மோதியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்ப யார் அனுமதித்தது? அத்துமீறி கோயிலுக்குள் உள் நுழைந்து பா.ஜ.கவினர் திரையிட்டபோதும் அதனைத் தடுக்காது காவல்துறை என்ன செய்ததென்று புரியவில்லை. இத்தகைய செயல்களில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் மீது இதுவரை எவ்வித வழக்கும் தொடுக்காது தி.மு.க. அரசு அமைதிகாப்பது வெட்கக்கேடானது.

    கோயில்களும் வழிபாட்டுத்தலங்களும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய மதபரப்புரைக் கூடங்களாக மாறுமென்றால் அறநிலையத் துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆர்.எஸ்.எஸ்சின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற கேள்விக்கு என்ன பதிலுண்டு? பா.ஜ.கவை வன்மையாக எதிர்ப்பதாகக்கூறி வாக்கு வேட்டையாடிய தி.மு.க. இப்போது அதிகாரம் இருந்தும் எதிர்ப்புணர்வைக் காட்டாது சமரசம் செய்வது ஆரிய அடிவருடித்தனமாகும்.

    கோயில்களில் மத நிகழ்வுகளை ஒளிபரப்பிய பா.ஜ.கவினர் மீதும் அதற்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. இந்து சமய அறநிலையத் துறை புதிதாகக் கல்லூரிகளைத் திறக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

    உயர் நீதிமன்றம்

    தமிழ்நாட்டில் கோவில்களுக்கு அறங்காவலர்கள் புதிதாக நியமிக்கப்படாத நிலையில் அக்கோவில்களின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை புதிதாக கல்லூரிகளைத் துவங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் எட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, நான்கு கல்லூரிகள் நடப்பு ஆண்டிலேயே துவங்கப்பட்டு, மாணவர் சேர்க்கையும் துவங்கியது.

    இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கல்லூரிகள் துவங்கப்படுவதை எதிர்த்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், அந்தக் கோவில்களின் நிதியில்கல்லூரிகளைத் துவங்கக்கூடாது என கோரியிருந்தார்.

    அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழ்நாட்டில் உள்ள 20,000 கோவில்களுக்கு அறங்காவலர்கள் இல்லை என்பதால் அந்தக் கோவில்களின் நிதியில் கல்லூரிகளைத் துவங்கக்கூடாது என கூறப்பட்டது.

    அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில், கோவில்களுக்கான பொது நிதியைப் பயன்படுத்தவிருப்பதாகவும் கடந்த 11 ஆண்டுகளாக கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லையென்றும் புதிதாக அறங்காவலர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் சில வாரங்களில் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, 'இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகளை துவங்கக்கூடாது. ஏற்கனவே துவங்கிய நான்கு கல்லூரிகளின் செயல்பாடு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' எனக் கூறினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்குநீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  8. சென்னைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை, முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    சென்னைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சென்னைக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை

    வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி சென்னைக்கு அருகில் கரையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுவதால் நவம்பர் 17, 18 தேதிகளில் கன மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் எஸ். பாலச்சந்திரன், "இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் சென்னையில் கன மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்தார். நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழைவரை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் கன மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஓரிடத்தில் மிக கன மழையும் 16 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. நவம்பர் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மொத்தமாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், அந்த அளவுக்கான மழை இப்போதே பெய்து முடித்துவிட்டது. சென்னையைப் பொறுத்தவரை தற்போதுவரை 48 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 81 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 69 சதவீதம் அதிகம். கன்னியாகுமரியில் நவம்பர் 12 முதல் 15வரை சாதாரணமாக 3 செ.மீ. மழையே பதிவாகும். ஆனால், இப்போதுவரை 28 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 9 மடங்கு அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  9. தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று பலத்த மழை: வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருக்கிறார்.

  10. டெல்லியில் காற்று மாசு: இன்றைய விசாரணையில் வீட்டில் இருந்தபடி வேலை உள்பட வேறு என்ன யோசனைகளை கூறியது உச்ச நீதிமன்றம்?

    டெல்லி காற்று மாசுபாடு

    பட மூலாதாரம், EPA

    டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்று மாசுபாடு குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தச் சூழலைச் சமாளிக்க சில காலம் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்புகளை ஆராயும்படி மத்திய அரசுக்கும் என்சிஆர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் யோசனை தெரிவித்திருக்கிறார்.

    டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தைக் கூட்டுமாறும் மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    முன்னாக, இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியான என்சிஆரில் அண்டை மாநிலங்களில் குப்பை கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் 10% மாசு ஏற்படுகிறது என்று கூறினார்.

    மேலும், 75% மாசு தொழிற்சாலைகள், தூசி, வாகனங்களின் புகையால் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்த விவகாரத்தில் டெல்லி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி முழு முடக்கத்தை அமல்படுத்த தயார் என்று கூறப்பட்டிருந்தது.

    அதே சமயம், மாசுபாடுக்கு காரணமான தொழிற்சாலைகள், புகை மாசு குறித்து டெல்லி அரசு தெரிவித்த விளக்கங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை.

    இந்த விஷயத்தில் டெல்லி அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், டெல்லி அரசின் இத்தகைய சாக்குப்போக்கு வருமானத்தை தணிக்கை செய்ய கட்டாயப்படுத்துகிறது என்று கூறியது.

    எந்தெந்த தொழிற்சாலைகளை மூட வேண்டும், எந்தெந்த வாகனங்கள் மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டும், அதற்கு மாற்று என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் நாளை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய விசாரணையின் போது, சில பகுதிகளில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தவிர, காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் போக்குவரத்து, தொழிற்சாலைகள் மற்றும் வாகன நெரிசல் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜெய்பீம் படம்: வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தியதாக சூர்யாவுக்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பாமக வழக்கறிஞர்

    ஜெய்பீம் திரைப்படம்

    பட மூலாதாரம், @2D_ENTPVTLTD

    ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் கதை வசனங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் நடிகர் சூர்யாவிடம் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

    இதேபோல, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியும் நடிகர் சூர்யா உள்பட 5 பேருக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    என்ன சர்ச்சை?

    படத்தில் வரும் ஐஜி பெருமாள்சாமி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இதில் வட இந்திய கதாபாத்திரம் ஒன்றிடம் விசாரிக்கும்போது அதில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நபர் இந்தியில் பேசுவார்.

    பிரகாஷ்ராஜ் அவரை கன்னத்தில் அறைந்து தமிழில் பேச சொல்லுவார். இந்த காட்சிக்கு இந்தி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

    கதாபாத்திரத்தின் தன்மை, அவர் வழக்கை திசை திருப்பும் நோக்கில் பேசியதற்காக மட்டுமே அப்படி காட்சிப்படுத்தி இருந்தோமே தவிர இந்தி ஆதரவாளர்களை கோபப்படுத்தும் நோக்கில் இல்லை என இந்த காட்சியின் நோக்கம் குறித்து சமீபத்தில் இயக்குநர் ஞானவேல் பிபிசி தமிழுக்கு அளித்திருந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

    மேலும், இந்த படத்தின் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர்.

    உண்மைக் கதையில் அவரது பெயர் அந்தோணி சாமி. இப்படி பெயரை மாற்றியது மட்டுமல்லாமல் அந்த வில்லன் வீட்டில் குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும் காலண்டர் இருப்பதாகக் காட்டியதும் சர்ச்சையானது.

    இதனை அடுத்து படத்தில் அந்த 'காலண்டர் காட்சி'யில் திருத்தம் செய்யப்பட்டது.

    நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி எழுப்பிய கேள்விகள்

    இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படைப்பு சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி நடிகர் சூர்யாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

    அந்த கடிதத்தில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு எதிராக தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அன்புமணி இதற்கு பதிலளிக்காமல் சூர்யா அமைதியாக இருப்பது அறமற்றது என்பதாலேயே இந்த கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதை அடுத்து, நடிகர் சூர்யா அன்புமணிக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த சர்சைக்களுக்கு விளக்கமாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை என்றும், சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, டெல்லியில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயார்: உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு

    இந்திய தலைநகர் டெல்லியில் புகை மாசு தீவிரம் ஆகி வருவதையடுத்து, அதை தடுக்கும் விதமாக நகரில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    அதே சமயம், இந்த முழு முடக்கம் என்பது டெல்லி மட்டுமின்றி அதன் அருகே உள்ள தேசிய தலைநகர் வலய பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் அதன் நோக்கம் நிறைவேறும் என்று மனுவில் டெல்லி அரசு குறிப்பிட்டுள்ளது.

  13. லிவர்பூல் நகரில் கார் வெடிப்பு: தீவிரவாத சட்டத்தின் கீழ் 3 பேர் கைது

    லிவர்பூல் கார் சம்பவம்

    பட மூலாதாரம், CARL BESSANT

    படக்குறிப்பு, கார் பற்றி எரியும் படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

    நேற்று (நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை) லிவர்பூல் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே ஒரு டாக்ஸி வாகனம் வெடித்ததில் ஒரு பயணி பலியானார்.

    தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை இந்த கார் வெடிப்பு தொடர்பாக 29, 26 மற்றும் 21 வயதுடைய மூன்று பேர் கென்சிங்டன் பகுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலில் ஒரு பயணி இறந்துவிட்டதாகவும், அவர் யார் என்கிற விவரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த டாக்ஸி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கார் வெடிப்பு தொடர்பாக மெர்செசைட் (Merseyside) காவல் துறை உடன் தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை இணைந்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளனர். அதே போல இந்த விவகாரம் தொடர்பாக எம் ஐ 5 அமைப்பும் உதவி வருகிறது.

  14. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் பரணிதரன், கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்