இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து காப்பாற்றிய நபர் மருத்துவமனையில் மரணம்

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தமது தோளில் சுமந்து காப்பாற்றிய நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். உதயா என்ற அந்த 25 வயது நபர் டிபி சத்திரம் கல்லறையில் மழையில் நனைந்து உடல் விறைத்துக் கிடந்தபோது போலீசாரால் மீட்கப்பட்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. கூட்டுப்பாலியல் வழக்கு: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

    கூட்டுப்பாலியல் வழக்கு

    பட மூலாதாரம், Thinkstock

    உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு கூட்டுப்பாலியல் வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    லக்னெளவில் உள்ள எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றநீதிபதி பவன் குமார் ராய் இந்த தீர்ப்பை வழங்கினார். குற்றவாளிகள் மூவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    மாநில சுரங்கத்துறை அமைச்சர் பதவி வகித்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள், சித்ரகூட் பகுதியில் மைனர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் காயத்ரி பிரஜாபதியுடன் சேர்த்து ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரி, விகாஸ் வர்மா, ரூபேஸ்வர், அமரந்தர் சிங், பின்டூ, சந்தரபால் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    இதில், ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரிக்கும் ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

    தண்டனைக்குள்ளான சந்திரபால், காயத்ரி பிரஜாபதியின் துப்பாக்கி ஏந்திய காவலர். வழக்கில் குற்றம்சாட்டிருந்தவர்கள் பிரஜாபதியின் நெருங்கிய உதவியாளர்கள் ஆவர்.

    இந்த கூட்டுப்பாலியல் சம்பவம் 2017ஆம் ஆண்டு லக்னெளவில் உள்ள கெளதம்பள்ளியில் உள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடந்தது. வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தலையீட்ட பிறகே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அதே ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர்.

    2017ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தார். அவரது அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

    அகிலேஷ் யாதவ் ஆட்சியில் சுரங்கத்துறையில் முறைகேடு நடந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதில் காயத்ரி பிரஜாபதிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் காயத்ரி பிரஜாபதியின் கோடிக்கணக்கான சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கி நடவடிக்கை எடுத்தது.

  3. ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த 5 பேரை மீட்ட காவல் துறை, பிரபுராவ் ஆனந்தன்

    மீட்பு

    நெல்லை மாவட்டம் பணகுடி ஆலந்துறை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற 5 பேர் சிக்கி தவித்தனர்.தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5 பேரையும் பத்திரமாக மீட்னர்.

    நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிகளில் அதிகாலை முதல் கன மழை பெய்து வந்தது.இதனால் ஆலந்துறை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை செல்வி ,ஸ்டெல்லா, ஆசிஸ்ட்டின்,எட்வின், மேரி ஆகிய 5 விவசாயிகள் விவசாய பணிக்காக ஆற்றை கடந்து சென்றனர்.பின்னர் விவசாய பணிகளை முடித்துவிட்டு திரும்பும் போது காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வந்தனர்.

    இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு துறையினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கித் தவித்த 5 நபர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

  4. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காப்பாற்றிய நபர் மரணம்

    இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

    பட மூலாதாரம், social media

    நேற்று சென்னை டிபி சத்திரம் மாநகராட்சி கல்லறையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதயா (25 வயது) என்பவரை டிபி சத்திரம் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அனுப்பிவைத்தார்.

    உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த உதயாவை ராஜேஸ்வரி தம் தோளில் தூக்கிக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

    ஆனால், உதயா என்ற அந்த நபர் இன்று கே.எம்.சி. மருத்துவமனையில் இறந்து விட்டார் என்று டிபி சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது.

  5. இரவு முழுவதும் பெய்த மழையால் வீட்டு சுவர் இடிந்து சிறுவன் பலி, 5 பேர் காயம், ஏ.எம்.சுதாகர்

    இடிந்த வீடு.

    இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான்.

    மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் அல்லிகுட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருடன் தந்தை ஏழுமலை மற்றும் சகோதரி காளியம்மாள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக இன்று ராமசாமி வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராமசாமியின் நான்கு வயது மகன் பாலசபரி படுகாயமடைந்தான். அக்கம் பக்கம் வீட்டினர் அவனை அரசு மருத்துவமனைக்கு தூக்கிசென்றனர்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பாலசபரி பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இந்த விபத்தில் ராமசாமி, அவரது தந்தை ஏழுமலை, சகோதரி காளியம்மாள், காளியம்மாளின் குழந்தைகள் புவனா, மாரியப்பன் ஆகிய ஐந்து பேர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இரவு முழுவதும் மழை பெய்து வந்ததன் காரணமாக மண் சுவர் என்பதால் மழைநீரில் சுவர் முழுவதும் ஊறி, ஆறு பேர் மீதும் விழுந்தது தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.

  6. தருமபுரி அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டது

    தருமபுரி அருகே தடம் புரண்ட ரயில்.
    படக்குறிப்பு, தருமபுரி அருகே தடம் புரண்ட ரயில்.

    தருமபுரி அருகே கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது. ஆனால் பயணிகளுக்கு ஆபத்தில்லை.

    சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டது.

    இந்நிலையில், தருமபுரி அருகே கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது .ஆனால் ரயில் தடம்புரண்டதால் அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ரயிலில் வந்த 1,850 பயணிகளும் எந்தவித ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ரயில் தடம் புரண்டதால் சேலம் தர்மபுரி மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வேறு மார்க்கத்தில் ரயில்களை திருப்பிவிட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் .

  7. தஞ்சை மாவட்டத்தில் மழை பாதித்த இடங்களில் அமைச்சர் குழு ஆய்வு

    அமைச்சர்கள் குழு ஆய்வு.

    பட மூலாதாரம், DIPR

    படக்குறிப்பு, அமைச்சர்கள் குழு ஆய்வு.

    மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு அமைத்த அமைச்சர்கள் குழு நேரடியாக ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

    கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இக்குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பலதுறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

    இக்கூட்டத்தில் அரசு கொறடா கோவி செழியன், எம்பிக்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் பயிர் பாதிக்கப்பட்ட வயல்களை நேரடியாக இக் குழுவினர் ஆய்வு செய்யத்திட்டமிட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  8. எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிடுவோம் - எச்சரிக்கும் பெலாரஸ்

    பெலாரஸ் நாட்டின் மேற்கு எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து குவிந்து வரும் குடியேறிகள் தொடர்பான விவகாரத்தில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் தலைவர் லுகஷென்கொ எச்சரித்துள்ளார்.

    இராக், சிரியா, யேமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான குடியேறிகள், பெலாரஸ் போலாந்து நாட்டு எல்லைகளில் குவிந்துள்ளனர்.

    பெலாரஸ் குடியேறிகள் பிரச்சனையை தூண்டுவதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குற்றம்சாட்டினர். அதை பெலாரஸ் மறுத்துள்ளது. பெலாரசுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அதன் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாயின. தடைகள் விதிக்கப்பட்டால், எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிடுவோம் என பயமுறுத்தியுள்ளார் பெலாரஸ் நாட்டின் நீண்ட கால தலைவர் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ. ரஷ்யாவிலிருந்து பெரிய எரிவாயு குழாய் மூலம் பெலாரஸ் நாட்டின் வழியாக போலந்து உட்பட பல நாடுகளுக்கு எரிவாயு விநியோகிப்பது குறிப்பிடத்தக்கது.

  9. நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்