You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மறைந்த எஸ்பிபி, பி.வி. சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கிய குடியரசு தலைவர்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. இதையடுத்து இன்று 2020ஆம் ஆண்டில் தேர்வானவர்களுக்கும், நாளை 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    எங்களுடைய நேரலை பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி. இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. எஸ்பிபி, வேணு ஸ்ரீநிவாசன், கங்கனா ரனாவத், சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்

    மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு ஸ்ரீநிவாசன், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, திரைப்பட நடிகர் சாலமன் பாப்பையா, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவித்தார்.

    இதையொட்டி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

    கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், தொழில், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன.

    கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இதையடுத்து இன்று 2020ஆம் ஆண்டில் தேர்வானவர்களுக்கும் நாளை (நவம்பர் 12) 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கும் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இதன்படி இன்று பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வான ஏழு பேர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வான 10 பேர், பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வான 102 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

    பத்ம விபூஷன் பெற்றவர்களில் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சிற்பக் கலைஞர் சுத்ராஷன் சாஹு, இதயநோய் நிபுணரும், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் பெல்லி மோனப்பா ஹெக்டே மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்குவர். எஸ்.பி.பிக்குரிய விருதை அவரது மகன் எஸ்.பி.பி. சரண் பெற்றுக் கொண்டார்.

    மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கான பத்ம விபூஷண் விருதை அவர்களின் உறவினர்கள் விருதினை பெற்றுக்கொண்டனர்.

    அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் (மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்), கன்னட இலக்கியவாதி சந்திரசேகர் கம்பாரா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, பாடகி கே.எஸ்.சித்ரா, சமூக சேவகி கிருஷ்ணம்மாள், முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிவிஎஸ் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஜோஹோ கார்ப்பரேஷனின் CEO ஸ்ரீதர் வேம்பு, பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் மாதா பி மஞ்சம்மா ஜோகதி ஆகியோர் அடங்குவர்.

    பாலிவுட் பிரபலங்களான கங்கனா ரனாவத், அட்னான் சாமி, ஏக்தா கபூர் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் அடங்குவர்.

    தமிழ் நடிகரும், தொலைக்காட்சி விவாத ஆளுமையுமான சாலமன் பாப்பையா, பார்வையற்ற மலையாள எழுத்தாளர் பாலன் பூத்தேரி, பாலினீஸ் நிகழ்ச்சிக் கலைஞர் ஐ வயன் துபியா, பயன்பாட்டுக் கணிதவியலாளர் ரங்கசாமி லக்மிநாராயணா ஆகியோரும் அடங்குவர். காஷ்யப் உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டனர்.

  3. கடலில் மாயமான தமிழக மீனவரின் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியுள்ளது, பிரபுராவ் ஆனந்தன்

    கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த நாகை மாவட்ட மீனவரின் உடல் இலங்கை காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள ஆற்காடுதுறையில் இருந்து கடந்த 2ஆம் தேதி சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கேசவன்,பழனி,திருமால் ஆகிய மூவரும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

    நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து மானவர் பழனி கடலில்தவறி விழுந்து மாயமானார்.

    மீனவர் பழனியை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சக மீனவர்கள் தேடி வந்தனர். மீனவர் குறித்து தகவல் ஏதும் தெரியாததால் வேதாரண்யம் மெரைன் போலீஸாரிடம் புகார் மனு அளித்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த மெரைன் போலீசார் பழனியைதேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதியில் மீனவர்கள் காரைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் காரை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்கச் 20 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரது உடலாக இருக்கலாம் என கருதிய போலீசார், மீனவரின் உறவினர்களை அழைத்து வந்து நேரடியாக உடலை காட்டினர். அந்த உடலை பார்த்த உறவினர்கள் இது இலங்கையை சேர்ந்தவருடைய உடல் இல்லை என தெரிவித்தனர்.

    கரை ஒதுங்கிய உடலில் அதிமுகவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த பனியன் அணிந்திருந்தார்.

    எனவே இந்தஉடல் தமிழகத்தை சேர்ந்தவரின் உடலாக இருக்கலாம் என அந்த புகைப்படம் நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பட்டது. புகைப்படத்தை மாயமான மீனவர் பழனியின் உறவினர்களிடம் காட்டி பழனி உடல் என உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து பழனியின் உடலை யாழ்ப்பாணம் பொது அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    பழனியின் உடலை உடல் கூராய்வுக்குப் பிறகு இலங்கையிலேயே தகனம் செய்யலாம் என அவரது குடும்பத்தார் அனுமதி அளித்தால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் உடலைப் பெற்று இறுதிச்சடங்கு செய்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. விளாத்திகுளத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 56 வயது நபர் கைது, மணிகண்டன், திருச்சி

    தமிழகத்தின் விளாத்திகுளம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் 56 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரின் மகன் சுப்பிரமணியன் (56). அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமி சமீபத்தில் அழுது கொண்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் பேசிய பாட்டியிடம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தன்னை, அருகில் புதியதாக கட்டட வேலை நடந்து கொண்டு இருக்கும் பகுதிக்கு சுப்பிரமணியன் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.

    அந்த நபரிடம் இருந்து தான் தப்பி வந்ததாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். இதையெடுத்து சிறுமியின் பாட்டி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், புகாரில் குறிப்பிடப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கைது செய்தனர்.

  5. ராமநாதபுரத்தில் வாகன தணிக்கையின்போது சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்: மூவர் கைது, பிரபுராவ் ஆனந்தன்

    தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் வாகன தணிக்கையின் போது நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் பாரதி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்த போது அந்த வாகனம் நிற்காமல் சென்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த இரு சக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். அந்த வாகனத்தில் சென்றவர்கள் ராமநாதபுரத்தை அடுத்த நாகநாதபுரத்தில் உள்ள வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பினர்.

    பின்னர் காவல்துறையினர் நின்று கொண்டிருந்த வாகனத்தை சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் 3 நாட்டுவெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து அந்த வாகனத்தில் சென்றவர்கள் ரியாஸ்கான், முகமது ரிபாயின், முகமது ஜஹாங்கீர் என அடையாளம் காணப்பட்டு அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    இவர்கள் யார் மீதோ தாக்குதல் நடத்துவதற்காக இந்த நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனரா என்ற கோணத்தில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  6. இலங்கை கன மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு, ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

    இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    வெள்ளப் பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, புத்தளம், காலி, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4300-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த இயற்கை அனர்த்தங்களினால் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சுமார் 63 குடும்பங்களைச் சேர்ந்த 250க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, 9 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

  7. துணை பிரதமர் கனவில் நாடகமாடும் ஸ்டாலின்: அண்ணாமலை கடும் தாக்கு, பிரபுராவ் ஆனந்தன்

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு துணை பிரதமராகும் கனவில் தற்போது முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நாடகம் ஆடி வருவதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணையில் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி கேரள அமைச்சர்கள் முன்னிலையில் 142 அடி நீர் தேக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல்; 138.7 அடி அளவுக்கு நீர் எட்டிய நிலையில், அந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இந்தநிகழ்வின்போது தேனி மாவட்ட ஆட்சியர் அங்கு அழைக்கப்படவில்லை. இதைக் கண்டித்து அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் அந்த கட்சியின் 5 மாவட்ட தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று குரல் எழுப்பினர்.

    தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை கண்டித்தும் பாஜகவினர் கோஷமிட்டனர்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் முதல்வராக இருந்து கொண்டு கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையின் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்ததற்கு நன்றிக் கடிதம் எழுதி தமிழக்ததில் வாழும் 8.5 கோடி மக்களை ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்," என்று குற்றம்சாட்டினார்.

    தமிழகத்தின் 8.5 கோடி மக்களின் சார்பாக எழுதப்பட்ட கடிதத்தில் இருந்த விவரத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது 8.5 கோடி தமிழக மக்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமதிப்பு. இதற்கு முதலாவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணையின் உரிமையான 142 அடி நீர் தேக்கத்தை போராடிப் பெற்றுத் தர வேண்டும்.இதை செய்யாவிட்டால் ஒரு லட்சம் தமிழக விவசாயிகளை பாரதி ஜனதா கட்சியினர் திரட்டி முல்லைப் பெரியாறு அணை பகுதிக்குச் சென்று மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

  8. COP26 மாநாடு: பணக்கார நாடுகளிடம் ஏழை நாடுகள் எதிர்பார்ப்பது என்ன?

    பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகள் குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ளது. கார்பன் உமிழ்வுக்கு காரணமான பணக்கார நாடுகள் கீழ்கண்டவற்றை செய்யவேண்டுமென்று ஏழை நாடுகள் விரும்புகின்றன.

    • கார்பன் அளவை கட்டுப்படுத்தவும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் தற்போதைய மதிப்பில் ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்ற உறுதியை பணக்கார நாடுகள் கடைபிடிக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்களின் நிகர-உமிழ்வு 2050ஆம் ஆண்டுக்கு முன்பே பூஜ்ஜியம் ஆக்கப்பட வேண்டும்.
    • அதிகம் உமிழும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு குறிப்பிட்ட இலக்குகள் உள்ளன.
    • அதிகரித்து வரும் கடல் மட்டம் அடிக்கடி ஏற்படும் வெள்ளங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் இழப்புகளையும் பணக்கார நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்.
    • இதற்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தங்களை பணக்கார நாடுகள் எவ்வாறு அமல்படுத்த போகின்றன என்பது குறித்த விதிகளை இறுதி செய்ய வேண்டும்.

    பணக்கார நாடுகளின் தலைவர்கள் அளித்த காலநிலை மாற்றம் தொடர்பான வாக்குறுதிகளை அமல்படுத்தவில்லை என்ற ஆழமான கோபம் ஏழை நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உள்ளது.

  9. ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம் அறிவிப்பு

    டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் ஒரு கோடி அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

    இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க அல்லது இணையதளத்தை மீண்டும் இயங்க வைக்க பிணைத் தொகை (ரேன்சம்) கேட்டு ஹேக்கர்கள் தாக்குதல் நடத்துவது ரேன்சம்வேர் தாக்குதல் எனப்படும்.

    கடந்த மே மாதம் டார்க்சைடு குழுவினர் நடத்திய இணையத் தாக்குதலால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள 5,500 மைல் (8,850 கிலோ மீட்டர்) நீளமுள்ள எரிபொருள் குழாய்களின் இயக்கம் முடக்கப்பட்டது.

  10. சென்னையில் இடியுடன் கூடிய கனமழையால் பெருவெள்ளம்

    சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை அப்புறப்படுத்த, தமிழ்நாடு மாநில அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    அதிக மழை பொழிவால் திடீரென வெள்ள நீர் மட்டம் அதிகரித்ததில், வாகனங்கள் மூழ்கிக் கிடப்பது, மரங்கள் சாய்ந்து கிடப்பது போன்ற காட்சிகளை உள்ளூர் ஊடக காணொளி காட்சிகள் காட்டுகின்றன. 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்துக்குப் பிறகு பெய்த மிகப்பெரிய மழை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டின் நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில், சென்னை அடிக்கடி கனமழையை எதிர்கொள்கிறது. சரிபார்க்கப்படாத மேம்பாட்டு பணிகள் மற்றும் மோசமான நகர திட்டமிடல் இந்த பேரழிவுக்கும் குழப்பத்துக்கும் வழிவகுத்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை, மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் தாக்கி யாரும் இறந்துவிடக் கூடாது என்கிற நோக்கில் சென்னையின் பல பகுதிகளிலும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

  11. இந்தியாவின் முதல் பெண் விமானப் படை ஏர் மார்ஷலுக்கு மருத்துவ துறை சதனைக்காக பத்ம ஸ்ரீ விருது

    இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை, மருத்துவ துறையில் செய்த சாதனைக்காக இன்று (நவம்பர் 8, திங்கட்கிழமை) இந்திய குடியரசுத் தலைவர் ராம்கோவிந்திடம், டெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் பெற்றார் முன்னாள் இந்திய விமானப் படை ஏர் மார்ஷல் மருத்துவர் பத்மா பந்தோபாத்யாய்.

    இந்திய விமானப் படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் இவர் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது இந்திய விமானப் படையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், மக்களுக்கு சேவை செய்து வருகிறார் என ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த விருது விழாவில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய அரசின் வெளி விவகாரத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  12. காலநிலை மாநாட்டுக்கு மாபெரும் அணியை அனுப்பியுள்ள புதைபடிம எரிபொருள் துறை

    காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப அதிகரிப்பு ஆகியவற்றுக்கு நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு முதன்மையான காரணமாக உள்ளது.

    காலநிலை மாநாடு தொடங்கப்படுவதற்கு முன், அதில் கலந்து கொள்பவர்களின் விவரங்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. அதை குளோபல் விட்னஸ் குழுவைச் சேர்ந்த பிரசாரகர்கள் பட்டியலை மதிப்பீடு செய்தனர்.

    புதைபடிம எரிபொருள் துறையுடன் தொடர்புடைய 503 பேர், காலநிலை மாநாட்டில் அதிகாரபூர்வமாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்தனர். அவர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையினருக்கு சாதகமாக கொள்கைகள் வகுக்கப்படும் விதத்தில் வாதங்களை முன்வைப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என பிரசாரகர்கள் கூறுகிறார்கள்.

  13. ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் மீது சூடான் பாதுகாப்புப் படை தாக்குதல்

    சூடான் தலைநகர் கார்தூமில், ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது சூடானின் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    கடந்த மாதம் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து, இரு நாட்கள் திட்டமிடப்பட்ட மக்கள் ஒத்துழையாமை போராட்டத்தில் (நவம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் நடந்தது. சூடானில் நிலவும் பிரச்சனையைத் தீர்க்க, அரபு லீக் மத்தியஸ்தர்கள் கார்தூம் நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர், அதற்கிடையிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

    ஆசிரியர்கள் பங்கெடுத்த ஒரு போராட்டம் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள், ராணுவ ஆட்சி பின்வாங்கப்பட்டு, அமைதியான முறையில் குடிமை ஆட்சி அனுமதிக்கப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.

  14. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.