You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியத்தில் போர் குற்றங்கள்: ஐ.நா அறிக்கை

எத்தியோப்பிய நாட்டின் வடக்குப் பகுதியில் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படையினருக்கும், அரசுப் படைகள் மற்றும் அதன் கூட்டணிப் படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. கொரோனா: சிங்கப்பூரில் ஆண்டுக்கு 2000 பேர் பலியாகக் கூடும் எனக் கணிப்பு

    சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

    மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்றும், இதைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக மேலும் 3,496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 204,340 ஆக கூடியுள்ளது.

    தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்

  3. கோவேக்சின் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால ஒப்புதல்

    இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.

    கோவிட்- 19 தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளின் பட்டியலில் தற்போது கோவேக்சின் தடுப்பு மருந்தும் சேர்ந்துள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு மற்றும் உலகெங்கிலுமுள்ள நாடுகளின், மருத்துவ ஒழுங்காற்று அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை கோவேக்சின் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்று ஆராய்ந்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கோவேக்சின் தடுப்பூசி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரநிலைகளின் அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியத்தில் போர் குற்றங்கள்: ஐ.நா அறிக்கை

    எத்தியோப்பிய நாட்டின் வடக்குப் பகுதியில் அரசுப் படைக்கும், டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் மத்தியில் நடக்கும் உள்நாட்டுப் போரின்போது, அனைத்து தரப்புகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு கூட்டு விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

    எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன கூட்டாக நடத்திய விசாரணையின் அறிக்கையில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பாலியல் வல்லுறவு, துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020 நவம்பரில் டீக்ரே தனி நாடு கேட்கும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது உத்தரவிட்டபின் இருதரப்பு மோதல் தொடங்கியது.

    டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படையினருக்கும், அரசுப் படைகள் மற்றும் அதன் கூட்டணிப் படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது.

    இந்த வாரம் எத்தியோப்பியாவில் அவசரநிலை அமலாக்கப்பட்டது.

    டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது.

    ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி. இதனிடையே டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை வீழ்த்திவிட்டதாக எத்தியோப்பியா அறிவித்தது. ஆனால், சண்டை தொடர்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  5. அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் சீன மக்கள்

    ஒருவேளை அவசர நிலை ஏற்பட்டால் அப்போது பயன்படுத்துவதற்கு தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    ஆனால் இந்த அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது என்று, அதை வெளியிட்ட சீன வர்த்தக அமைச்சகம் காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

    சீனாவின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான அதிக மழையால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதால் தடைபட்டுள்ள காய்கறி விநியோகம் ஆகியவற்றுக்கு நடுவே சீன அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    உணவுப் பொருட்களுக்கான விநியோகச் சங்கிலி சீராக இருப்பதையும், உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு சீன வர்த்தக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

  6. கனடாவிலிருந்து அன்னபூர்ணா சிலை மீட்டு உத்தர பிரதேச அரசிடம் ஒப்படைப்பு

    100 ஆண்டுகளுக்கு முன், காசியில் இருந்த ஒரு ‘அண்ணபூர்ணா’ இறைவி சிலை திருடப்பட்டது. அச்சிலை பலரது கைமாறி கடைசியில் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திடம் சென்றடைந்தது.

    அச்சிலை, கனட பல்கலைக்கழகத்திடமிருந்து இந்திய அரசு மீட்டு, தற்போது உத்தர பிரதேச அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  7. வெர்ஜீனியாவில் தோல்வியுற்ற ஜனநாயகக் கட்சி

    குடியரசு கட்சியின் க்ளென் யங்கின் வெர்ஜீனியாவின் அடுத்த ஆளுநராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அவர் ஜனநாயக கட்சியின் டெர்ரி மெக்அலிஃபேவை (Terry McAuliffe) விட 2.1 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார். 2014 முதல் 2018 வரை ஆளுநராக இருந்த மெக் அலிஃபேயின் முன்னிலை வாக்குகள், சமீபத்தைய வாரங்களில் நடந்த கருத்துக் கணிப்பில் காணாமல் போனதைக் கண்டார்.

    இந்த தோல்வி ஜனநாயகவாதிகளின் நம்பிக்கையை பாதிக்கும். ஓராண்டுக்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில், வெர்ஜீனியாவில் ஜோ பைடன் பத்து புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  8. டி20 உலககோப்பையில் இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் மோதல் - அரை இறுதிக்கு வாய்ப்புள்ளதா

    இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதுவரை விளையாடிய இரு டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது.

    பாகிஸ்தான் குரூப் பி பிரிவில் எட்டு புள்ளிகளோடு தன் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. ஆப்கானிஸ்தான் நான்கு புள்ளிகளோடு இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து இரு புள்ளிகளோடு மூன்றாமிடத்திலும், நமீபியா இரு புள்ளிகளோடு நான்காவது இடத்திலும், இந்தியா பூஜ்ஜியத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

    இந்தியா அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளை எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளையும் வெல்லும் பட்சத்தில் இந்தியாவுக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும்.

    அதோடு நல்ல ரன் ரேட்டும் மிக முக்கியம். குரூப் 2-ல் ஒரு அணியைத் தவிர வேறு எந்த அணியும் புள்ளிபட்டியலில் ஆறு புள்ளிகளுக்கு மேல் பெறக்கூடாது. அப்போது இந்தியா நல்ல ரன் ரேட்டுடன் இருக்கும்பட்சத்தில் அரை இறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.

  9. வெளிநாட்டு நாணயங்களுக்கு தாலிபன்கள் தடை

    ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்த தாலிபன்கள் தடை விதித்துள்ளனர்.

    ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள ஆப்கன் பொருளாதாரத்தை இந்த முடிவு மேலதிக பாதிப்புக்கு உள்ளாக்கும் வாய்ப்புள்ளது.

    பொருளாதார சூழ்நிலை மற்றும் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஆப்கானியர்கள் அனைவரும் 'ஆப்கனி' நாணயத்தை, தங்களது அனைத்து வர்த்தகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

    தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த சர்வதேச நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன.

    ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களால் பன்னாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஆப்கானியர்கள் வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்க டாலரே பயன்படுத்தப்பட்டது

  10. பாஜகவின் தோல்விகள் குறித்து காங்கிரஸ் கருத்து

    நேற்று முடிவுகள் வெளியான பல மாநில சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் பாஜக பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெறாதது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.

    பா.ஜ.க, குறிப்பாக இந்தி பேசும் முக்கிய மாநிலங்களில், தனது உத்வேகத்தை இழக்கிறது, என்பது தெளிவாக தெரிகிறது. எங்கெங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவும் நேரடியாக மோதிக் கொள்கிறதோ, அங்கு மக்களுக்கு விரோதமான கொள்கைகள் காரணமாக காவிக் கட்சி மீது பெரும் அடி விழுகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கூறியுள்ளதாக பி.டி.ஐ முகமை தெரிவித்துள்ளது.

    பா.ஜ.கவுக்கும் அதனை எதிர்க்கும் கட்சிகளுக்கும் "சமமான மரியாதையே உள்ளது" என்பதை சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பல்வேறு மாநிலங்களில் 2022ம் ஆண்டு நடக்கும் தேர்தலில், யார் பக்கம் காற்று வீசும் என்று யோசிக்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் என்று பி.டி.ஐமுகமை கூறியுள்ளது.

  11. சீனா மற்றும் ரஷ்யாவை விமர்சித்த ஜோ பைடன்

    சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் காலநிலை மாநாட்டில் (COP26) கலந்து கொள்ளாததை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

    பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய பிரமாண்ட பிரச்னை, சீனா மற்றும் ரஷ்யா பொறுப்பற்ற முறையில் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கிவிட்டன என்று ஜோ பைடன் செவ்வாய்கிழமை இரவு தனது உரையில் குறிப்பிட்டார்.

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

  12. இடைத்தேர்தல் முடிவுகள் - பெரிய வெற்றி பெறாத பாஜக

    ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸும், ஹரியாணாவில் இந்தியன் நேஷனல் லோக் தள், மகாராஷ்டிராவில் காங்கிரஸும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும், நாகாலாந்தில் நேஷனலிஸ்ட் டெமாக்ரடிக் ப்ராக்ரஸிவ் கட்சியும், தெலங்கானாவில் பாஜகவும் வெற்றி பெற்றன.

    இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: பீகாரில் இரு இடங்களையும் ஜனதா தளம் (யுனைடெட்) கட்சியும், கர்நாடகாவில் இரு இடங்களில் ஒன்றில் பாஜகவும், ஒன்றில் காங்கிரஸும் வென்றன. ராஜஸ்தானில் இரு இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

    மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்கள்: மூன்று இடங்களில் இடைத்தேர்தல் நடந்த மத்தியப் பிரதேசத்தில் இரு இடங்களை பாஜகவும், ஓரிடத்தை காங்கிரஸும் கைப்பற்றியது. அதே போல மேகாலயாவின் மூன்று இடங்களில் இரு இடங்களை நேஷனல் பீபிள்ஸ் பார்ட்டியும், ஓரிடத்தை யுனைடெட் டெமாக்ரடிக் பார்ட்டியும் வென்றன. ஹிமாச்சல பிரதேசத்தில் மூன்று இடங்களையும் இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது.

    நான்கு இடங்களில் இடைத்தேர்தல் நடந்த மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளையும் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. அசாமில் ஐந்து இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் மூன்றில் பாஜகவும், இரு இடங்களில் யுனைடெட் பீபிள்ஸ் பார்டி (லிபரல்) கட்சியும் வென்றுள்ளன.

    ஆதாரம்: தேர்தல் ஆணையம்

  13. காபூல் ராணுவ மருத்துவமனையில் தாக்குதல் - 20 பேர் பலி

    ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள சர்தார் தாத் கான் ராணுவ மருத்துவமனையில் குண்டு வெடிப்புத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இத்தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதல் நவம்பர் 2ம் தேதி நடந்ததாகக் கூறுகிறது ராய்டர்ஸ் முகமை. முதலில் மருத்துவமனை கட்டடத்துக்கு வெளியே இரு குண்டுகள் வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்தியவர்கள் மருத்துவமனையில் நுழைந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

    இது ஆப்கானிஸ்தானிலேயே மிகப்பெரிய, 400 படுக்கைகளைக் கொண்ட ராணுவ மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் குழுவினரோடு தொடர்புடையாஇ எஸ் - கே கடும்போக்கு குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

  14. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்