You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நமது சவக்குழியை நாமே தோண்டுகிறோம்: எச்சரிக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர்

புதைபடிவ எரிபொருள்களுக்கு அடிமையாகி இருப்பதன் மூலம் நமது சவக்குழியை நாமே தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் எச்சரித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்துக்கு காரணமாகும் அனல்மின் நிலையங்களை உருவாக்குவது ஏன்?

    இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெகுவாக எதிர்கொள்ள வேண்டிய மாநிலம். தமிழ்நாட்டிற்கு காலநிலை மாற்றம் தொடர்பாக என்ன கொள்கைகள், திட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்து தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

    கே. உலகம் முழுவதுமே காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிட்டன. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னை எந்த அளவுக்கு தீவிரமானது என நினைக்கிறீர்கள்?

    ப. காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கடந்த காலத்தில் சரியாகக் கையாளாதால், கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். இருந்தாலும் புதிய அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் துவங்கியிருக்கிறது.

    காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம், புவிவெப்பமாதல். அதனை எதிர்கொள்ளும்விதமாக, தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பசுமைக் குழு மூலமும் வனத் துறை மூலமும் பெரிய அளவில் மரங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    தமிழக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெயர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கமும் துவங்கப்பட்டு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

    காலநிலை மாற்றத்தினால் வரக்கூடிய பாதிப்புகள் எப்போதுமே ஏழை, எளிய மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆகவே, இந்த பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. வசிக்கத் தகுதியற்ற இடங்களில் இன்னமும் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க 2.76 லட்ச ரூபாயில் வீடுகள் கட்டுத்தரப்பட்டு வருகின்றன.

  2. COP26 மாநாடு என்பது என்ன? இது ஏன் நடக்கிறது?

    புதைபடிம எரிபொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் வெளியாகும் புகையால் உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது.

    பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் தீவிர நிகழ்வுகளான வெப்ப அலைகள், வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை அதிகரித்து வருகின்றன.

    இதுவரை வெப்பம் பதிவு செய்யப்பட்ட காலங்களிலேயே கடந்த தசாப்தம்தான் மிகவும் அதிக வெப்பம் வாய்ந்ததாக உள்ளது.

    அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் இவற்றைக் கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கை தேவை என்று ஒப்புக் கொண்டுள்ளன.

    கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள COP26 உச்சிமாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் எரிபொருள் வாயிலான தங்கள் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்களிடம் கொண்டுள்ள திட்டம் என்ன என்பதை, இதில் பங்கேற்கும் 200 நாடுகளும் தெரிவிக்க வேண்டும்.

    தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்த வெப்பநிலையை விட 2 டிகிரி செல்சியசுக்கும் மிகாமல் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டும் என்று 2015ஆம் ஆண்டு உலக நாடுகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

    2 டிகிரிக்கும் மிகக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தின் இலக்கு.

    பருவநிலை மாற்றம் காரணமாக உண்டாகும் பேரழிவுகளை தவிர்ப்பதற்காக உலக நாடுகள் கையெழுத்திட்டு இந்த ஒப்பந்தம்தான் "பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2050ஆம் ஆண்டில் தங்களது நிகர எரிபொருள் உமிழ்வுகளை பூஜ்ஜியம் எனும் அளவில் கொண்டு வருவதற்கு உலக நாடுகள் பெருமளவில் தங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டி இருக்கும். (வெளியேற்றப்பட்ட கார்பன், உறிஞ்சப்பட்ட கார்பன் ஆகியவற்றின் இடையே உள்ள வேறுபாடு நிகர உமிழ்வு எனப்படும்.)

  3. தாங்க முடியாத வெப்பத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் இந்திய மக்கள்?

    மக்களை அலற வைக்கும் வெப்பத்தை இந்தியர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? இந்தியாவின் சுட்டெரிக்கும் வெப்பம் குறித்த பிபிசியின் Life at 50C ஆவணப்படம் இது.

  4. பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா செய்ய வேண்டிய கடமை என்ன?

    வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் இந்தியாவுக்கு கடந்த ஓராண்டில் 8700 கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த தகவலை உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 23,800 கோடி டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ள சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக இழப்பை சந்தித்த நாடு. நிபுணர்கள் இந்த இழப்பை, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்.

    இந்தியா உட்பட உலகின் சுமார் 120 நாடுகள் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் கூடி, பருவநிலை மாற்றம் மற்றும் அதன் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்பதுபற்றி விவாதிக்க உள்ளன.

    டெல்லி, உத்தராகண்ட் முதல் கேரளா வரை, குஜராத் முதல் மேற்கு வங்கம் மற்றும் அசாம் வரையிலான மக்கள், வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்களை மிக நெருக்கமாக உணர்ந்துள்ளனர்.

  5. பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள கிளாஸ்கோ சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி

    புவி வெப்பமயமாதல் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க, கிளாஸ்கோ நகரத்தில் இன்று (நவம்பர் 1ம் தேதி, திங்கட்கிழமை) பருவநிலை மாற்ற மாநாடு தொடங்க உள்ளது. இம்மாநாடு நவம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    அதில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள, இந்திய பிரதமர் நரேந்திர மோதி கிளாஸ்கோ சென்றடைந்தார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்ததாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.இது ஐக்கிய நாடுகள் சபையின் 26ஆவது சி ஓ பி மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

  6. நேயர்களுக்கு வணக்கம்!

    புவி வெப்பமயமாதல் பிரச்னைக்கு தீர்வு காண இன்று க்ளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாடு குறித்த அண்மைய செய்திகளை இந்த நேரலை பக்கத்தில் நீங்கள்தெரிந்து கொள்ளலாம்.

    இந்த நேரலை பக்கத்தை தொகுத்து வழங்குவது விஷ்ணுப்ரியா ராஜசேகர்.