You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சூடான் ராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் மேலும் 3 பேர் பலி

ஒம்டுர்மன் நகரத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மூன்று போராட்டக்காரர்கள் இறந்துவிட்டதாக சூடானின் மத்திய மருத்துவர்கள் குழு என்கிற சுயாதீன அமைப்பு கூறியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இந்த இரவு உங்களுக்கு இனிதாகட்டும்.

  2. இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்தார் மோதி

    இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அங்கு இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேசினார்.

    ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இத்தாலிக்குச் சென்றிருக்கிறார் பிரதமர் மோதி.

    திங்கள்கிழமை பிரிட்டனில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் மோதி பங்கேற்கிறார்.

  3. தேவர் ஜெயந்தி: அரசு வண்டி மீது ஏறி நடனமாடிய 13 பேர் மீது வழக்கு

    முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் அமைத்துள்ள முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவையொட்டி ராமநாதபுரம் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பொதுமக்கள் என அதிகமானோர் வந்திருந்தனர்.

    அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர்.

    இதையடுத்து பசும்பொன் கிராமம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் தென் மண்டல ஐஜி அன்பு தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 8,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை சேர்ந்த விஷ்ணு, ஹரிகிருஷ்ணன், செந்தில், அலெக்ஸ் பாண்டி, கணேசன், சிவகுமார் உள்ளிட்ட 13 இளைஞர்கள் அபிராமம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த அரசு வாகனத்தின் மீது ஏறி ஆடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    வண்டியை ஓட்டிவந்த டிரைவரான போலீஸ்காரரையும் அவர்கள் தரக்குறைவாக பேசியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 13 பேர் மீது கமுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

  4. புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையோடு அடக்கம்

    மாரடைப்பால் இறந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல், அரசு மரியாதையோடு பெங்களூருவில் உள்ள கந்தீரவா ஸ்டூடியோவில் இன்று (அக்டோபர் 31, ஞாயிற்றுக்கிழமை) காலை அடக்கம் செய்யப்பட்டது.

    அவரது தந்தை மற்றும் கன்னட திரையுலகின் முக்கிய நடிகர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் அவரது தாய் பர்வதம்மா ராஜ்குமார் ஆகியோரது உடல்களும் இதே கந்தீரவா ஸ்டூடியோவில் தான் அடக்கம் செய்யப்பட்டன.

    கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சித்தராமைய்யா, முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார், பல்வேறு கன்னட திரையுலக பிரபலங்கள் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  5. இந்தியாவில் கொரோனாவில் உள்ளோர் எண்ணிக்கை 1.59 லட்சமாக குறைவு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,830 ஆக பதிவானது. 14,667 பேர் குணமடைந்துள்ளனர், 446 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் கூறுவதாக ஏ என் ஐ முகமை கூறுகிறது.

    அதே போல இந்தியாவில் கொரோனா நோயால் தற்போது பாதிக்கப்பட்டு குணமாக காத்திருப்போர் எண்ணிக்கை கடந்த 247 நாட்களில் இல்லாத அளவுக்கு 1,59,272 ஆக குறைந்துள்ளது எனவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போக அக்டோபர் 30ம் தேதி வரை 60.83 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 11.35 லட்சம் பரிசோதனைகள் நேற்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

  6. சூடான் ராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் மேலும் 3 பேர் பலி

    சூடான் நாட்டில் இந்த வாரதொடக்கத்தில், ராணுவ ஜெனரல் அப்தெல் ஃபடாஹ் புர்ஹான், குடிமை ஆட்சியைக் கலைத்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

    அதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடந்து வருகிறது.

    சனிக்கிழமை சூடானின் தலைநகர் கார்டோம் உட்பட பல்வேறு நகரங்களில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிரதமர் அப்தெல்லா ஹம்தோக்கை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஆயிரக் கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.

    ஒம்டுர்மன் நகரத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மூன்று போராட்டக்காரர்கள் இறந்துவிட்டதாக சூடானின் மத்திய மருத்துவர்கள் குழு என்கிற சுயாதீன அமைப்பு கூறியுள்ளது.

    சூடானின் உள்துறை அமைச்சகம் அதை மறுத்துள்ளது.

    இந்த வாரத்தில் மட்டும் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு மத்தியிலான மோதலில் 10-க்கும் மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளனர்.

    தற்போது சூடான் அதிகாரிகள் இணையம் உட்பட பல்வேறு தொலைத் தொடர்பு வசதிகளைத் துண்டித்துள்ளனர். அதோடு மக்கள் நடமாட்டத்துக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

  7. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்

    https://bbc.com.im/tamil/live/global-59100525%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3C/ol%3E%3C/div%3E%3Cdiv class="css-1s4wzbg">