முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் அமைத்துள்ள முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவையொட்டி ராமநாதபுரம் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பொதுமக்கள் என அதிகமானோர் வந்திருந்தனர்.
அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர்.
இதையடுத்து பசும்பொன் கிராமம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் தென் மண்டல ஐஜி அன்பு தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 8,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கத்தை சேர்ந்த விஷ்ணு, ஹரிகிருஷ்ணன், செந்தில், அலெக்ஸ் பாண்டி, கணேசன், சிவகுமார் உள்ளிட்ட 13 இளைஞர்கள் அபிராமம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த அரசு வாகனத்தின் மீது ஏறி ஆடியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வண்டியை ஓட்டிவந்த டிரைவரான போலீஸ்காரரையும் அவர்கள் தரக்குறைவாக பேசியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 13 பேர் மீது கமுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.