சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் இடமில்லை
என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள்
பேசி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ள கருத்து, விவாதப் பொருளாக
மாறியுள்ளது.
பசும்பொன்னில் வரும் 30
ஆம் தேதி தேவர் குருபூஜை நிகழ்ச்சி
நடைபெற உள்ளது. இதற்காக வங்கி லாக்கரில் இருந்து அ.தி.மு.க தரப்பில் அளிக்கப்பட்ட
தங்கக் கிரீடம் மற்றும் தங்கக் கவசத்தை ஒப்படைப்பதற்காக அ.தி.மு.க
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்திருந்தார்.
அப்போது அ.தி.மு.க முன்னாள்
அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது''
என்றார்.
அப்போது,
`சசிகலாவை அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?'
என செய்தியாளர்கள் கேள்வி
எழுப்பியபோது, ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும்
வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம். அவரை அ.தி.மு.கவில்
இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவுசெய்வார்கள். முன்னாள் முதல்வர்
எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு
வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர்,
இணை ஒருங்கிணைப்பாளர் என்ற
அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது'' என்றார்.
தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், ''அம்மா உணவகத்தில் ஏற்கெனவே
வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
அந்த உணவுகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா
கொண்டு வந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்எனவும் கூறி வருகிறோம். அ.தி.மு.க
அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டப்பூர்வமான முறையில்
போராடுவோம்'' என்றார்.
மேலும், ''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவின் செயல்களால் பல இடங்களில்
அ.தி.மு.கவின் வெற்றி மறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு
அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்''
என்றார்.
அண்மையில், 'பகை வெல்வோம்' என்றபெயரில் தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
ஒன்றையும் எழுதியிருந்தார். அவருக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வரும்
நிலையில், ஓ.பி.எஸ்ஸின் கருத்து அக்கட்சி
வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.