சூடானில் அரசைக் கலைத்த ராணுவம்; அவசரநிலையை மீறி போராட்டம்

தலைநகர் கார்தூமில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இந்த இரவு உங்களுக்கு இனிதாகட்டும்.

  2. ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள்

    ஐபிஎல்

    பட மூலாதாரம், Getty Images

    ஆமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

    ஆமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் ரூ.7090 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.

    லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி குழுமம் 5625 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.

    இவ்விரு அணிகளுக்கும் டெண்டர் விடும் நடைமுறை துபாயில் நடைபெற்றது.

    பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள டெண்டர் விண்ணப்பத்தை 22 நிறுவனங்கள் வாங்கியிருந்தன. அணிகளின் அடிப்படை விலையாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

  3. இலங்கை சென்ற இந்திய கடற்படைக் கப்பல்கள்

    இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை நேற்று (24) மேற்கொண்டுள்ள இந்திய தெற்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா, இன்று (25) இலங்கை கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோரை சந்தித்துள்ளார்.

    இந்திய கடற்படையின் ஒன்றாவது கடற்படை பயிற்சிப் பிரிவின் 6 பயிற்சிக் கப்பல்கள், இலங்கை கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியை நடத்துவதற்காக நேற்று (24) இலங்கையை வந்தடைந்த போது, இந்திய தெற்கு கடற்படைத் தளபதியும் இலங்கைக்கு நேற்றைய தினம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

    இந்திய - இலங்கை கடற்படைக் கப்பல்கள் கூட்டுப் போர்ப் பயிற்சி

    பட மூலாதாரம், NAVY AND AIR FORCE OF SRILANKA

  4. சூடானில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்

    சூடானில் குடிமை அரசை கலைத்துள்ள அந்நாட்டு ராணுவம், அரசியல் தலைவர்களை கைது செய்துள்ளதுடன் அவசர நிலையையும் பிரகடனம் செய்துள்ளது.

    அரசியல் சண்டைகளே குடிமை அரசைக் கலைப்பதற்கான காரணமென்று, குடிமை அரசின் தலைவர்களுடன் சேர்ந்து, நாட்டை நிர்வகிக்கும் கூட்டுக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் அப்தெல் ஃபட்டா புர்கான் தெரிவித்துள்ளார்.

    தலைநகர் கார்தூமில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சூடானை நீண்ட காலம் ஆட்சி செய்துவந்த ஓமர் அல்-பஷீர் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, ஓர் இடைக்கால அரசு குடிமைத் தலைவர்களை கொண்டு அமைக்கப்பட்டது.

    அப்போது முதலே குடிமை அரசின் தலைவர்கள் மற்றும் ராணுவத்தினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

    ஆழமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சூடானுக்கு மிகப்பெரிய அளவில் சர்வதேச நாடுகள் உதவி செய்து வருகின்றன. தற்பொழுது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளதால் அந்த உதவிகள் தடைபடுவதற்கான அபாயம் உண்டாகியுள்ளது.

    Sudan's military dissolves civilian government and arrests leaders

    பட மூலாதாரம், AFP

  5. யாசிதி குழந்தை கொலை தொடர்பாக ஜெர்மன் ஐ.எஸ். பெண்ணுக்கு சிறை

    ஜெர்மனி

    பட மூலாதாரம், Getty Images

    அடிமையாக வாங்கிய யாசிதி இனக் குழந்தையை கொலை செய்ததாக இஸ்லாம் மதத்துக்கு மாறி இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) இயக்கத்தில் சேர்ந்த ஜெர்மனி பெண்ணுக்கு மியூனிக் நகரில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஜெனிபர் வெனிஷ் என்ற அந்தப் பெண்ணின் செயல் போர்க்குற்றத்துக்கு நிகரானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஜெனிபர் வெனிஷ் ஒரு போர்க்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது, அவரது கணவர் ஐந்து வயது குழந்தையை சங்கிலியால் கட்டி வெயிலில் தாகத்தால் தவிக்க விட்டுக் சாகடித்தபோது அதற்கு உடந்தையாக ஜெனிபர் இருந்திருக்கிறார்.

    அவரது கணவர் மீதான வழக்கு பிராங்பர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் அவருக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2015-ஆம் ஆண்டு இராக்கின் பல்லூஜா நகரில் அந்தச் சிறுமி இறந்தார்.

    தன் மீதான குற்றச்சாட்டை வெனிஷ் மறுத்தார். குழந்தையின் தாய் நோரா ஒரு நம்பத்தகாத சாட்சி என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர், மேலும் சிறுமி உண்மையில் இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

    யாசிதி இனத்துக்கு எதிராக ஐஎஸ் இயக்கத்தினர் புரிந்த குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.

    2014 இல் ஐஎஸ் பயங்கரவாதிகள் வடக்கு இராக்கில் உள்ள யாசிசி மக்களின் பகுதிக்குள் நுழைந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்து வைத்தனர்

  6. ஓ. பன்னீர்செல்வம் கூறியதற்கு ஜெயக்குமார் கருத்து

    சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்.

    ''ஓபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்தால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கலாம்; சசிகலாவை எதிர்த்தே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  7. மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா சசிகலா?, ஆ. விஜயானந்த்

    சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் இடமில்லை என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்து, விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக வங்கி லாக்கரில் இருந்து அ.தி.மு.க தரப்பில் அளிக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தங்கக் கவசத்தை ஒப்படைப்பதற்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்திருந்தார்.

    அப்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது'' என்றார்.

    அப்போது, `சசிகலாவை அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம். அவரை அ.தி.மு.கவில் இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவுசெய்வார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது'' என்றார்.

    தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், ''அம்மா உணவகத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். அந்த உணவுகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்எனவும் கூறி வருகிறோம். அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டப்பூர்வமான முறையில் போராடுவோம்'' என்றார்.

    மேலும், ''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவின் செயல்களால் பல இடங்களில் அ.தி.மு.கவின் வெற்றி மறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்'' என்றார்.

    அண்மையில், 'பகை வெல்வோம்' என்றபெயரில் தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அவருக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வரும் நிலையில், ஓ.பி.எஸ்ஸின் கருத்து அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ. பன்னீர்செல்வம்
  8. உணவுக்காக உடைமைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், EPA

    உடனடியாக அவசரகால நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தக் குளிர்காலத்தில் பட்டினியாக இருக்க நேரிடும் என்று ஐநா உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 2.28 கோடி பேர், உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட 32 லட்சம் குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

    "ஆப்கானிஸ்தான் இப்போது உலகின் மிக மோசமான மனிதநேய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது" என்று WFP அமைப்பின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லி கூறுகிறார்.

    "நாம் பேரழிவை எதிர்கொள்ளும் கவுண்டவுனை பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் அவர்.

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் வசமானது. அமெரிக்கா எஞ்சியிருந்த தனது படைகளையும் குடிமக்களையும் அங்கிருந்து வெளியேற்றியது. அதனால் தாலிபன்களின் ஆதிக்கம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது.

    இதனால் ஏற்கெனவே நலிவடைந்த பொருளாதாரம் மேலும் பலவீனமானது.. வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டன. சர்வதேச செலாவணி நிதியமும் உதவியை நிறுத்தி வைத்தது.

    மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக வெளிநாட்டு உதவிகள் கிடைத்தால், அந்த நாடு உதவி சார்ந்த நாடு என்று கருதப்படும். ஆனால் ஆப்கானிஸ்தானில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக வெளிநாட்டு உதவிகள் மூலமே கிடைப்பதாக உலக வங்கி கூறுகிறது.

    இப்போது பல ஆப்கானியர்கள் உணவு வாங்குவதற்காக தங்களது உடைமைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாலிபன்களின் வெளிநாட்டுச் சொத்துகளை அணுக முடியாததால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

  9. சூடான் அரசின் தலைவர்கள் கைது - 'ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி'

    ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முயல்கிறது என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சூடான் நாட்டின் இடைக்கால அரசைச் சார்ந்த பல உறுப்பினர்களும், குடிமை அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திங்கள்கிழமையன்று அதிகாலை, அடையாளம் தெரியா ராணுவத்தினர், பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கையும், குறைந்தபட்சம் நான்கு அமைச்சர்களையும் கைது செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

    இதுகுறித்து, ராணுவத்தினர் கருத்து கூறாத நிலையில், ஜனநாயக ஆட்சிக்கான ஆதரவாளர்கள் வீதிகளில் போராட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்நாட்டில் நீண்டகாலமாக ஆட்சிபுரிந்த ஒமர்-அல்-பஷீரின் ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட பின்னர், ராணுவத்தினருக்கும் குடிமை அரசின் தலைவர்களுக்கும் மோதல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், தலைவர்களின் கைதுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் தகவல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கைது கூட்டு ராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது என்றும், கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

    தலைநகரான கார்தூமில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சாட்சிகள் கூறுகின்றன. மேலும், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் வீதிகளில் ஆவேசமான மக்கள் கூட்டம் டையர்களை எரிப்பதைக் காண முடிகிறது.

    மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகரம் முழுவதும் ராணுவ மற்றும் துணை ராணுவப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

    Sudan's civilian leaders arrested amid coup reports

    பட மூலாதாரம், RASD SUDAN NETWORK/REUTERS

  10. அசுரன் படத்துக்காக தேசிய விருது பெற்றார் தனுஷ்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    டெல்லியில் இன்று 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதாசாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது என ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.

    மேலும், `அசுரன்` திரைப்படத்திற்காக நடிகர் தனுஷூக்கும், `போன்ஸ்லே` என்கிற இந்தி திரைப்படத்திற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

    `மனிகர்னிகா`, `பங்கா` ஆகிய இந்தி திரைப்படங்களுக்காக நடிகை கங்கனா ரணாவத்துக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்றும் ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.

  11. தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினிகாந்த்

    இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது டெல்லியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது.

    rajinikanth
  12. 'ஆர்யன் கான் வழக்கின் சாட்சி பிறழ் சாட்சி ஆகிவிட்டார்' - என்.சி.பி

    இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கில் சாட்சியாக இருந்த பிரபாகர் சைல் என்பவர் பிறழ் சாட்சியாக மாறி விட்டார் என்று போதைபொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ) தெரிவித்துள்ளது.

    கைதான ஆரியன் கானுடன் செல்ஃபி எடுத்து வைரலான தனியார் டிடெக்டிவ் கே.பி. கோசவி என்பவரின் உதவியாளர் பிரபாகர் சைல், கோசவி சாம் டிசோசா என்பவரும் 18 கோடி ரூபாய் லஞ்சம் வழங்குவது குறித்து பேசிக் கொண்டிருந்ததைத் தான் கேட்டதாகவும், அதில் 8 கோடி ரூபாய் நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்படுவதாகவும் கூறியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

    கோசவி மற்றும் டிசோசா இடையே அந்த செல்பேசி உரையாடல் நடந்தபோது தாமும் அப்பொழுது காரில் இருந்ததாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

    பிரபாகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கு எதிராக நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோ மற்றும் சமீர் வான்கடே தரப்புகளால் தனித்தனியாக எதிர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

    தம் மீதான விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் வான்கடே நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    சமீர் வான்கடே

    பட மூலாதாரம், ani

    படக்குறிப்பு, நார்காட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே
  13. தெலங்கானா காவல்துறை - நக்சலைட்கள் இடையே மோதல்

    தெலங்கானா மாநிலத்தில் வெங்கடப்பூர்-சத்தீஸ்கர் எல்லைப்பகுதியில் முலுகு மாவட்ட காவல்துறையினருக்கும், நக்சல் அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    இந்த என்கவுண்டர் தொடர்ந்து நடந்துவருவதாகவும், இதன் முடிவில் நக்சல் அமைப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிவிக்கப்படும் என்றும் முலுகு எஸ்.பி கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. சீனாவில் அதிகரிக்கும் கொரோனா - காலவரையின்றி பெய்ஜிங் மாரத்தான் ஒத்திவைப்பு

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    படக்குறிப்பு, கொரோனா வைரஸ்

    சீனாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், பெய்ஜிங் மாரத்தான் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 30,000 பேர் வரை பங்கேற்கவிருந்த மாரத்தான் அக்டோபர் 31ஆம் தேதி நடக்கவிருந்தது. சீனாவின் 11 மாகாணங்களில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தரப்பு கூறியுள்ளது.

    அவர்கள் அனைவருமே டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நான்ஜிங் கொரோனா பரவலுக்குப் பிறகு இது தான் மிகப் பெரிய பரவலாக கருதப்படுகிறது.

    கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பெய்ஜிங் மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இது சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாரத்தான் பாரம்பரியமாக தியானென்மென் சதுக்கத்தில் தொடங்கி, பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவிலுள்ள கொண்டாட சதுக்கத்தில் நிறைவடையும்.

  15. அமெரிக்கா அனுப்பப்பட உள்ளார் கொலம்பியாவின் போதை மருந்து கடத்தல் மன்னன்

    டைரோ ஆன்டொனியோ உசுகா கடந்த சனிக்கிழமை கொலம்பியாவின் விமானப்படை, ராணுவம், காவல் துறையினரின் கூட்டு ஆப்ரேஷனில் கைது செய்யப்பட்டார்.

    அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார் என கொலம்பியா அறிவித்துள்ளது. அமெரிக்கா டைரோ உசுகாவுக்கு ஐந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    டைரோ 2003 முதல் 2014 ஆண்டுகளுக்கு மத்தியில் குறைந்தபட்சமாக 73 மெட்ரிக் டன் கொகைன் போதைப் பொருளை இறக்குமதி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    Colombian drug lord Otoniel to be extradited to US

    பட மூலாதாரம், COLOMBIAN POLICE/HANDOUT VIA REUTERS

  16. உகாண்டா தலைநகரில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி

    அக்டோபர் 23ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு உகாண்டாவின் தலைநகரான கம்பலாவில் உள்ள ஒரு பாரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் 20 வயதான பார் சேவை வழங்கும் பெண் பலியானார். மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

    வாடிக்கையாளர்களைப் போல வந்த மூன்று பேர் வெடிகுண்டை, பாரில் இருந்த மேசைக்கு அடியில் வைத்துவிட்டு சென்றதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

    ஒரு வார காலத்துக்கு முன்பு தான், உகாண்டாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக பிரிட்டன் அரசு எச்சரித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    Uganda

    பட மூலாதாரம், Reuters

  17. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் விக்னேஷ் அ, கெளதமன் முராரி.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.