நடிகை சுதா சந்திரன், விமான
நிலையத்திற்கு போகும் போது ஒவ்வொரு முறையும் தன்னுடைய செயற்கை காலை கழட்டி
பரிசோதனை செய்வது தனக்கு அவமானமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி இதனை தடுக்க வேண்டும்
எனவும் கூறி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வருத்தத்துடன் வீடியோ ஒன்றை
பகிர்ந்துள்ளார்.
56 வயதாகும் சுதா சந்திரன் தமிழ்,
தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள்
மற்றும் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் ஒரு சிறந்த
பரதநாட்டிய கலைஞரும் கூட.
‘சின்ன தம்பி பெரிய தம்பி’,
’சின்ன பூவே மெல்ல பேசு’ உள்ளிட்ட சில தமிழ்
படங்களிலும், ‘நாகினி’ உள்ளிட்ட சில
சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 1981-ம் ஆண்டு
திருச்சி அருகே நடந்த விபத்தில் அவரது வலது காலில் பாதி அறுவை சிகிச்சை மூலம்
நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், அவர்
தொடர்ந்து நடிப்பு, நடனம் என இரண்டிலும் கவனம் செலுத்தி
வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாதுகாப்பு
சோதனைகளுக்காக தனது செயற்கை காலை விமான நிலைய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும்
அகற்றுவது வேதனையாகவும் அவமானமாகவும் இருப்பதாக அவர் தனது அதிகாரப்பூர்வமான சமூக
வலைதள பக்கத்தில் வீடியோ மூலம் இதனை தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகளுக்காக செயற்கை
காலை அகற்றுவது உடல் அளவிலும் வலி மிகுந்த ஒன்று என குறிப்பிட்டுள்ளார். செயற்கை
காலுடனே தான் பல நாடுகளிலும் நடனமாடி நம் நாட்டை பெருமைப்படுத்துவதாகவும், ஆனால், இப்படி தங்களை வேதனைப்படுத்துவதற்கு பதிலாக
வயதானவர்களுக்கு இருப்பது போல தங்களுக்கும் அடையாள அட்டை வேண்டும் எனவும் மத்திய
மாநில அரசுகளிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சுதா சந்திரனின் இந்த பதிவிற்கு தனது
ட்வீட் மூலமாக சிஎஸ்ஐஎஃப் மன்னிப்பு கோரியுள்ளது. சுதா சந்திரனின் சிரமத்திற்கு
வருந்துவதாகவும்,
விதிவிலக்கான சில சூழ்நிலைகளில் மட்டும் அதுவும் பாதுகாப்பு
சோதனைகளை கருதியே இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இனிமேல், எந்த சிரமும் ஏற்படாது என உறுதியளிக்கிறோம் என்றும் அந்த ட்வீட்டில் சிஎஸ்ஐஎஃப்
தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.