100 கோடி தடுப்பூசி இந்தியா குறித்த ஐயங்களுக்கு விடை - பிரதமர் மோதி

“இந்தியாவால் சமாளிக்க முடியுமா? இவ்வளவு பேருக்கு இந்தியாவால் தடுப்பூசி செலுத்த முடியுமா? தடுப்பூசி வாங்க பணத்துக்கு இந்தியா எங்கே போகும்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன” என்று மோதி குறிப்பிட்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அக்டோபர் 22ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இன்றைய நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

  2. இளங்கோவன் இடங்களில் 21 கிலோ தங்கம், 10 சொகுசு கார்கள் பறிமுதல்

    இளங்கோவன்

    தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 23 இடங்களில் நடத்திய சோதனையில் 21 கிலோ தங்க நகைகள் மற்றும் 10 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.

    ரு.29.77 லட்சம் ரொக்கம், 2 வால்வோ பேருந்துகள் 282 கிலோ வெள்ளிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறவர் இளங்கோவன்.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமாக செயல்பட்டுவரும் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவராக 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்ததில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

  3. விமான நிலையத்தில் செயற்கை காலை சோதிப்பது அவமானமாக உள்ளது - நடிகை சுதா சந்திரன்

    Instagram பதிவை கடந்து செல்ல
    Instagram பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    Instagram பதிவின் முடிவு

    நடிகை சுதா சந்திரன், விமான நிலையத்திற்கு போகும் போது ஒவ்வொரு முறையும் தன்னுடைய செயற்கை காலை கழட்டி பரிசோதனை செய்வது தனக்கு அவமானமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி இதனை தடுக்க வேண்டும் எனவும் கூறி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வருத்தத்துடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    56 வயதாகும் சுதா சந்திரன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட.

    ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ’சின்ன பூவே மெல்ல பேசு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், ‘நாகினி’ உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 1981-ம் ஆண்டு திருச்சி அருகே நடந்த விபத்தில் அவரது வலது காலில் பாதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.

    ஆனாலும், அவர் தொடர்ந்து நடிப்பு, நடனம் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாதுகாப்பு சோதனைகளுக்காக தனது செயற்கை காலை விமான நிலைய அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் அகற்றுவது வேதனையாகவும் அவமானமாகவும் இருப்பதாக அவர் தனது அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வீடியோ மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

    பரிசோதனைகளுக்காக செயற்கை காலை அகற்றுவது உடல் அளவிலும் வலி மிகுந்த ஒன்று என குறிப்பிட்டுள்ளார். செயற்கை காலுடனே தான் பல நாடுகளிலும் நடனமாடி நம் நாட்டை பெருமைப்படுத்துவதாகவும், ஆனால், இப்படி தங்களை வேதனைப்படுத்துவதற்கு பதிலாக வயதானவர்களுக்கு இருப்பது போல தங்களுக்கும் அடையாள அட்டை வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    சுதா சந்திரனின் இந்த பதிவிற்கு தனது ட்வீட் மூலமாக சிஎஸ்ஐஎஃப் மன்னிப்பு கோரியுள்ளது. சுதா சந்திரனின் சிரமத்திற்கு வருந்துவதாகவும், விதிவிலக்கான சில சூழ்நிலைகளில் மட்டும் அதுவும் பாதுகாப்பு சோதனைகளை கருதியே இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இனிமேல், எந்த சிரமும் ஏற்படாது என உறுதியளிக்கிறோம் என்றும் அந்த ட்வீட்டில் சிஎஸ்ஐஎஃப் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

  4. நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா காரணமல்ல - ஆய்வறிக்கை

    விவேக்

    நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மத்திய சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கோவிட் - 19க்கான தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட தீவிரமான பக்க விளைவுகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவில் இருதய நோய் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

  5. இந்தியா ஹைப்பர்சானிக் ஆயுதத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது- அமெரிக்க அறிக்கை

    ஹைப்பர்சானிக்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஹைப்பர்சானிக்

    உலகில் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் நாடுகளில் இந்தியாவும் இருப்பதாக அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆய்வு சேவை என்ற அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.

    அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை மேம்பட்ட ஹைப்பர்சானிக் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் முதலியவையும் ஹைப்பர்சானிக் ஆயுதங்களை மேம்படுத்திவருகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

    ஆஸ்திரேலியா அமெரிக்கக் கூட்டுறவுடனும், இந்தியா ரஷ்யக் கூட்டுறவிலும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்திவருகின்றன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    இது தவிர, ஹைப்பர்சானிக் தொழில்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டர் திட்டத்தின்கீழ் இந்தியா தன் சொந்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

  6. சீனா தாக்கினால் தைவானை பாதுகாப்போம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    சீனா, தைவானை தாக்கினால், அமெரிக்கா அந்நாட்டை பாதுகாக்கும் என கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

    அமெரிக்கா தைவானை பாதுகாக்குமா என டவுன் ஹாலில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது “ஆம், அதை செய்ய நாம் ஒப்புக் கொண்டுள்ளோம்” என விடையளித்தார் ஜோ பைடன். நீண்ட காலமாகவே சீனா தைவானை தாக்கினால், அந்நாட்டை பாதுகாப்பது தொடர்பான விஷயத்தில் அமெரிக்கா அமைதியாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது தைவானை பாதுகாப்போம் என கூறியுள்ளது.

  7. 100 கோடி தடுப்பூசி இந்தியா குறித்த ஐயங்களுக்கு விடை - பிரதமர் மோதி

    நரேந்திர மோதி.

    பட மூலாதாரம், PIB

    படக்குறிப்பு, நரேந்திர மோதி.

    கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் 100 கோடி டோஸ் என்ற மைல் கல்லை இந்தியா கடந்திருப்பது இந்தியா குறித்து எழுப்பப்பட்ட ஐயங்களுக்கான விடை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    வியாழக்கிழமை இந்தியா 100 கோடி மைல் கல்லைக் கடந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோதி “இந்தியாவால் சமாளிக்க முடியுமா?இவ்வளவு பேருக்கு இந்தியாவால் தடுப்பூசி செலுத்த முடியுமா?தடுப்பூசி வாங்க பணத்துக்கு இந்தியா எங்கே போகும்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன”என்று அவர் குறிப்பிட்டார்.

    கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியாவின் முன்னரண் என்பது மக்கள் பங்கேற்பு என்று கூறிய அவர் அதன் ஒரு பகுதியாகவே மக்கள் விளக்கு ஏற்றினார்கள், மணியடித்தார்கள். ஆனால், இதெல்லாம் கொரோனாவை ஒழிக்க உதவுமா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள் என்றும் மோதி குறிப்பிட்டார்.

    “இந்தியாவின் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையை விஐபி பண்பாடு குலைத்துவிடாமல் பார்த்துக்கொண்டோம். எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள்” என்றும் மோதி குறிப்பிட்டார்.

    இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து நேர்மறை எண்ணத்தோடு இருப்பதாக குறிப்பிட்ட மோதி வரவிருக்கும் பண்டிகைகளை மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு கொண்டாடவேண்டும் என்றும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் போட்டுக்கொள்ளாதவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

  8. கொரோனாவால் 80 ஆயிரம் - 1.80 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் இறந்திருக்கலாம் - WHO

    கொரோனா பெருந்தொற்றுநோய் சுகாதாரப் பணியாளர்களை கடுமையாக பாதித்திருப்பதாகவும், 80,000 - 1.8 லட்சம் பேர் வரை அந்நோயால் இறந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

    சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் கூறினார்.

    மேலும் கொரோனா தடுப்பூசிகள் நியாயமற்ற முறையில் விநியோகிக்கப்படுவது குறித்தும் அவர் விமர்சித்தார். போதுமான கொரோனா தடுப்பூசிகள் இல்லாததால், அடுத்த ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் மற்றொரு மூத்த அதிகாரி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க 135 மில்லியன் சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  9. தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் ஆர் இளங்கோவன் வீட்டில் சோதனை

    தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு கடன் கொடுத்த விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  10. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் அ தா பாலசுப்ரமணியன், கெளதமன் முராரி. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும் https://bbc.com.im/tamil/live/india-58991186%3C/p%3E%3C/div%3E%3C/div%3E%3C/article%3E%3C/li%3E%3C/ol%3E%3C/div%3E%3Cdiv class="css-1s4wzbg">