டீக்ரே தனிநாடு கேட்கும் போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல்

தனிநாடு நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. அக்டோபர் 12ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. நேபாளில் பேருந்து கவிழ்ந்து குறைந்தது 25 பேர் பலி

    நேபாள நாட்டின் முகு எனும் மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது இருபத்தி ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவிக்கிறது.

    விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால் இந்த விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள படங்கள் சேதமடைந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து நிலையில் மலையடிவாரத்தில் இருப்பதைக் காட்டுகின்றன.

    நிகழ்விடத்திற்கு மீட்பு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் நேபாள நாட்டு காவல்துறை தெரிவிக்கிறது.

    இமயமலை நாடான நேபாளத்தில் சாலை விபத்துகள் நடப்பது வழக்கமானது. மோசமான சாலைகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள் ஆகியவையே பெரும்பாலும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன.

    Nepal bus crash kills at least 25 in Mugu district
  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

    ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்தி.மு.க. - 100அ.தி.மு.க. - 12சி.பி.ஐ. - 1சி.பி.எம். - 1தே.மு.தி.க. - 1காங்கிரஸ் - 4ம.தி.மு.க. - 4அ.ம.மு.க. - 2. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம் - தி.மு.க. - 4.

  4. ஒரு ஓட்டு வாங்கிய பா.ஜ.க. உறுப்பினருக்கு குடும்பத்தினர் வாக்களிக்காதது ஏன்?

    கோயம்புத்தூர் மாவட்டம் குருடம்பாளையத்தில் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார். அவருக்கு அவருடைய குடும்பத்தினரே வாக்களிக்காதது ஏன் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த வார்டுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டர் தளத்தில் இது குறித்து பெரிய அளவில் கேலிசெய்யப்பட்டு வருகிறது. இதனை கேலி செய்யு #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_vote_BJP என இரண்டு ஹாஷ்டாகுகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

    #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_vote_BJP
  5. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நிலவரம்

    தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம்தி.மு.க. - 42அ.தி.மு.க. - 2சி.பி.எம். - 1காங்கிரஸ் - 1மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் வெற்றி நிலவரம் - தி.மு.க. - 3.

  6. கோவேக்சின் தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரை

    இரண்டு முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

    குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தத் தேவையான தரவுகள் அனைத்தையும் இந்திய அரசிடம் அளித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

    சைடஸ் காடில்லா நிறுவனத்தின் தடுப்பு மருந்தை 12 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு வழங்க ஏற்கனவே இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கோவேக்சின் தடுப்பு மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டால், குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்தாக இருக்கும்.

    covaxin

    பட மூலாதாரம், Getty Images

  7. இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை

    மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பழங்கால வரலாற்று அகழ்வாராய்ச்சி: இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை

    பட மூலாதாரம், Reuters

  8. திறக்க சாவி இல்லாததால் வாக்குப் பெட்டி உடைப்பு

    வாக்குப் பெட்டி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தபால் வாக்குகள் வைத்திருந்த பெட்டியின் சாவி தொலைந்ததால் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது.

    ராமநாதபுரம் ஒன்றியத்தில் சக்கரைக்கோட்டை ஊராட்சிக்கான தலைவர் தேர்தலில் 5 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

    அப்போது போகலூர் ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான தபால் வாக்குகள் இருந்தபெட்டியை திறக்க முயன்ற போது பெட்டியின் சாவி இல்லாததால் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வாக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது.

    அந்த பெட்டில் மொத்தமாக 61 தபால் ஓட்டுக்கள் இருந்தன. பின் அந்த வாக்குகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து பொது மக்கள் பதிவு செய்த ஓட்டுக்களை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  9. டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் கடும் தாக்குதல்

    எத்தியோப்பியா

    பட மூலாதாரம், AFP

    தனிநாடு நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டீக்ரே போராளி குழுவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    தாக்குதல் குறித்து எத்தியோப்பிய அரசு எதையும் உறுதி செய்யவில்லை. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்யவும் இயலவில்லை.

    கடந்த வாரத்தில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடங்கியதாகவும் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி(டி.பி.எல்.எஃப்) அமைப்பின் மூத்த உறுப்பினர் கெட்டாசூவ் ரீடா தெரிவித்தார்.

    11 மாதங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடியால் சுமார் 4 லட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

    இதுவரையிலான சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு வெளியேறிச் சென்றுவிட்டனர்.

    பின்னணி என்ன?

    1994-ஆம் ஆண்டு எத்தியோப்பியா இனவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் டீக்ரே.

    2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

    அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

    ஆனால் மத்திய அரசின் அதிகாரத்தை அவர் பெருக்குவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் டீக்ரேவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

    கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அபிய் அகமது அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

    அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

    டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார் அபிய் அகமது.

    போர் முடிந்தவிட்டதாக அபிய் அகமது அறிவித்தாலும் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

  10. தென்கொரியாவும் அமெரிக்காவும் சீண்டுகின்றன: கிம் ஜோங் உன்

    கிம்

    பட மூலாதாரம், Getty Images

    தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

    வடகொரியாவின் அரசு ஊடகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

    தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

    திங்கள்கிழமையன்று பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து கிம் உரையாற்றினார்.

    கடந்த சில வாரங்களாக வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளை நடத்திய நிலையில், கிம் ஜோங் உன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

  11. ஜோ பைடனுக்கு உதவி செய்த ஆப்கானியர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு

    தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரது ஆப்கானிஸ்தான் பயணத்தில் உயிராபத்து ஏற்படாமல் தவிர்க்க உதவிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

    2008ஆம் ஆண்டு பைடன் மற்றும் பிற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த பொழுது பனிப்புயல் ஒன்றின் காரணமாக ஒரு பனிப் பள்ளத்தாக்கில் அவர்களது ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்க வேண்டிய கட்டாயம் உண்டானது.

    அந்தப் பள்ளத்தாக்கில் அப்பொழுது அவர்கள் தாக்குலுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் இருந்தன. அப்போது பைடன் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களின் மொழிபெயர்ப்பாளர் அமான் கலிலியும் அடக்கம்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு, தமது விசா பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமென்று ஆகஸ்ட் மாதம் முதல் அவர் வேண்டுகோள் விடுத்து வந்தார்.

    ஆகஸ்ட் மாத மத்தியில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ள பல்லாயிரம் ஆப்கானியர்களில் ஒருவராக கலிலி இருக்கிறார்.

    அமான் கலிலி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தான் அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அங்கிருந்து அவர்கள் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    அமான் கலிலி (வலது பக்கம் இருந்து மூன்றாம் நபர்) மற்றும் அவரது குடும்பத்தினர்

    பட மூலாதாரம், SAFI RAUF/HUMAN FIRST COALITION

    படக்குறிப்பு, அமான் கலிலி (வலது பக்கம் இருந்து மூன்றாம் நபர்) மற்றும் அவரது குடும்பத்தினர்
  12. பெண்களுக்கு ஒதுக்கீடு கிடையாது: நோபல் பரிசுக் குழு

    நோபல்

    நோபல் பரிசு வழங்குவதில் பெண்கள் அல்லது இன ஒதுக்கீடு தரும் எந்த நடைமுறையையும் அமல்படுத்தப் போவதில்லை என்று ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் தலைவர் கோரன் ஹன்சன் தெரிவித்தார்.

    "முக்கியக் கண்டுபிடிப்புக்காக மட்டுமே பரிசு வழங்கப்பட வேண்டும். பாலினம் அல்லது இனத்துக்காக அல்ல" என்று அவர் கூறியுள்ளார்.

    1901-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசுகளை இதுவரை 59 பெண்களே பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஒரேயொரு பெண் மட்டுமே நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    "நோபல் பரிசை குறைந்த எண்ணிக்கையிலான பெண்களே பெறுகிறார்கள் என்பது மிகவும் கவலையளிக்கிறது. இது சமூகத்தின் நியாயமற்ற நிலையைப் பிரதிபலிக்கிறது. கடந்த காலங்களில் இது அதிகமாக இருந்தது, இப்போதும் தொடர்கிறது. இதற்காக நாம் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது" என்று ஏஃஎப்பி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒதுக்கீடு அளிப்பது குறித்து நோபல் கமிட்டி முடிவெடுக்காவிட்டாலும், பெண்களை அதிக எண்ணிக்கையில் பரிந்துரைக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  13. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழ் நேரலைப் பக்கத்துக்கு வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, எம். மணிகண்டன்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்