முன்கூட்டியே நடக்கும் இராக் தேர்தல் - ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் தொடருமா?

போராட்டங்கள் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் தற்போது ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    நேரலையில் இணைந்திருந்ததற்கு நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. முன்கூட்டியே நடக்கும் இராக் தேர்தலில் வாக்குப்பதிவு

    ஊழல், வேலைவாய்ப்பு, அரசு சேவைகளின் ஒழுங்கின்மை உள்ளிட்டவற்றின் காரணமாக இராக்கில் 2019ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு அந்த நாடு முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இன்று அதற்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    போராட்டங்கள் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் தற்போது ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

    அரசியல் கட்சிகள் மட்டுமே போட்டியிடக் கூடிய இராக் தேர்தல் 2019இல் நடந்த போராட்டங்கள் காரணமாக சுயேச்சை வேட்பாளர்களும் பங்கேற்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    அக்டோபர் - டிசம்பர் 2019இல் நடந்த போராட்டங்களின்போது சுமார் 550 போராட்டக்காரர்கள் நாடு முழுவதும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இம்முறையும் பெரும்பான்மை இனத்தவரான ஷியா முஸ்லிம்களே பெரும்பாலான இடங்களை கைப்பற்றுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் 2003ஆம் ஆண்டு இராக் மீது படையெடுத்த பின்பு சதாம் ஹுசேனின் ஆட்சி அகற்றப்பட்டது. அப்போதிலிருந்து நடந்த தேர்தல்களில் ஷியா முஸ்லிம்களே இராக் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இராக் தேர்தலில் வாக்குப்பதிவு

    பட மூலாதாரம், Reuters

  3. இந்தியாவின் அழுத்தத்தால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த இலங்கை முடிவு செய்துள்ளதா?

    இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது.

    இலங்கை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு இந்தியத் தரப்பில் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு, இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலருக்கு, இலங்கையின் சில கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்திய அரசின் அழுத்தத்தால் தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவிக்கிறது.

    கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்காக ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.

    அத்துடன், வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

  4. சீனாவுக்கு தைவான் அதிபர் பதிலடி

    "நாம் அதிகம் சாதிக்க, சாதிக்க சீனாவிடம் இருந்து வரும் அழுத்தம் அதிகமாகும்," என்று தைவான் அதிபர் த்சை இங்-வன் தெரிவித்துள்ளார்.

    ஞாயிறன்று நடந்த தைவானின் தேசிய தின உரையில் அவர் இ வாறு பேசியுள்ளார். சீனாவுடன் தைவானின் மறு இணைப்பு நிச்சயம் நடக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய மறுநாளே த்சை இங்-வன் தெரிவித்துள்ளார்.

    சீன போர் விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்தது முதல் சமீபத்தில் சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவுகிறது.

    தைவானை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகவே சீனா இன்றுவரை பார்க்கிறது. மீண்டும் தன்னுடன் இணையும், அல்லது இணைந்திருக்கும் பிராந்தியமாகவும் கருதுகிறது.

    ஆனால் இதை பெரும்பகுதி தைவானிய மக்கள் ஒப்புக் கொள்வதில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தாங்கள் இறையாண்மை கொண்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து வருவதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

    taiwan president

    பட மூலாதாரம், EPA

  5. கன்டைனருக்குள் தவித்துக்கொண்டிருந்த 126 குடியேறிகள் மீட்பு

    சரக்குகளை கொண்டு செல்லும் கன்டைனருக்குள் தவித்துக்கொண்டிருந்த 126 குடியேறிகளை குவாட்டமாலா நாட்டு காவல்துறையினர் சாலையோரம் இருந்து மீட்டுள்ளனர்.

    நூவே கான்செப்சியான் மற்றும் கோக்கேல்ஸ் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் இடையே இருந்த ஓரிடத்தில் சாலையோரம் இருந்த இந்த கன்டைனருக்குள் இருந்து ஆட்கள் கத்தும் சத்தத்தை இன்று அதிகாலை கேட்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    இவர்களை மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அழைத்துச் செல்லப் பணம் வாங்கிய நபர்கள் அவர்களைப் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாக காவல்துறையினர் கருதுகிறார்கள்.

    இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஹெய்ட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள், குவாட்டமாலாவில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஆப்ரிக்க நாடான கானா, ஆசிய நாடான நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டவர்களில் அடக்கம்.

    Guatemala police free 126 migrants from abandoned container

    பட மூலாதாரம், PNC DE GUATEMALA

    படக்குறிப்பு, Guatemala police free 126 migrants from abandoned container
  6. 'பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் மரணம்

    பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று கூறப்பட்ட அப்துல் கதீர் கான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்லாமாபாத்தில் காலமானார். அவருக்கு வயது 85.

    ஏ.க்யூ. கான் என்று பரவலாக அறியப்பட்ட அப்துல் கதீர் கான் மத்திய பிரதேச தலைநகராக உள்ள போபல் நகரில் பிறந்தவர்.

    கோவிட் -19 தொற்று காரணமாக ஏ.க்யூ. கான் உயிரிழந்தார் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அணு ஆயுதங்கள் உடைய முதல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தானை உருவாக்கியதில் பெரும்பங்கு உடைய அப்துல் கதீர் கான் பாகிஸ்தானில் ஒரு தேசிய நாயகனாகவே பார்க்கப்படுகிறார்.

    ஆனால், தெற்காசியப் பிராந்தியத்தில் அணு ஆயுதப் போட்டிக்கு வித்திட்டவர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.

    AD Khan pakistan nuclear scientist death

    பட மூலாதாரம், Getty Images

  7. அமெரிக்கா - தாலிபன் பேச்சுவார்த்தை

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

    கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தாலிபன்களுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பதற்காக தாலிபான்களை தாங்கள் அங்கீகரிப்பதாக பொருளாகாது என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது.

    ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பின்பு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் நடந்த மறுநாள் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

  8. போலீசை வன்புணர்வு செய்த வழக்கில் போலீசிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

    ஒரு பெண் காவலரை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் சப் இன்ஸ்பெக்டரிடம் லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் இரண்டு போலீஸ் அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண் உதவி சப் இன்ஸ்பெக்டர். மற்றொருவர் பெண் எஸ்.ஐ.

    டெல்லி மாளவியா நகர் காவல் நிலையத்தில் இந்த கைது நேற்றிரவு நடந்தது. ஏ.என்.ஐ. செய்தி முகமை இந்தத் தகவலை ட்வீட் செய்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. அரசு பணத்தில் ஊடகப் பிரசாரம் செய்ததாக குற்றச்சாடு: ஆஸ்திரிய சான்சிலர் பதவி விலகல்

    செபாஸ்டியன் குர்ஸ்

    பட மூலாதாரம், EPA

    படக்குறிப்பு, செபாஸ்டியன் குர்ஸ்

    ஒரு டேப்ளாய்ட் பத்திரிகையில் தம்மைப் பற்றி நல்லவிதமாக செய்தி வருவதற்கு அரசுப் பணத்தை செலவிட்டதாக குற்றச்சாட்டை எதிர்கொண்டு வந்த ஆஸ்திரிய சான்சிலர் செபாஸ்டியன் குர்ஸ் பதவி விலகினார்.

    தமது வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷேலன்பெர்க் என்பவரை தமக்கு பதிலாக சான்சிலர் ஆக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

    அவரது பழமைவாத ஓவிபி மக்கள் கட்சியோடு தொடர்புடைய பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதை அடுத்து குர்ஸ் உள்ளிட்ட 10 பேர் மீது புலன்விசாரணை தொடங்கியுள்ளது.

    அரசுப் பணத்தை சாதகமான ஊடக பிரசாரத்துக்காக பயன்படுத்தவில்லை என்று குர்ஸ் மறுக்கிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டினால் அவரது கூட்டணி அரசாங்கம் கவிழும் நிலைக்கு சென்றது. காரணம் சான்சிலராகத் தொடர குர்சுக்கு இனி தகுதி இல்லை என்று அவரது அரசில் இடம் பெற்றுள்ள தி கிரீன்ஸ் கட்சி கூறியது.

    அத்துடன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவதாக அச்சுறுத்திய எதிர்க்கட்சிகளுடன் கிரீன்ஸ் கட்சி பேச்சுவார்த்தையும் தொடங்கியது.

    இந்நிலையில்தான் குர்ஸ் பதவி விலகியுள்ளார்.

  10. விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு: மத்திய பாஜக அமைச்சர் மகன் கைது

    ஆஷிஷ் மிஸ்ரா.
    படக்குறிப்பு, ஆஷிஷ் மிஸ்ரா.

    விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியது தொடர்பான வழக்கில் மத்திய பாஜக உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

    கார் ஏற்றியதில் 4 விவசாயிகளும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் டிரைவர், 2 பாஜகவினர், ஒரு பத்திரிகையாளர் ஆகிய 4 பேரும் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக ஏற்பட்ட கொந்தளிப்பையும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளையும் அடுத்து 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

  11. லெபனான் நாடு முழுவதும் இருளில் மூழ்கியது

    பொருளாதார சிக்கலில் தவித்துவரும் லெபனான் நாட்டில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.

    எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஜஹ்ரானி ஆகிய இரண்டும் இயங்குவது நின்றதாக ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

    இதையடுத்து மின் தொகுப்பு "சனிக்கிழமை நண்பகலில் முற்றிலும் நின்றுபோனது" என்றும் மேலும் பல நாள்களுக்கு இது மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

    கடந்த 18 மாதங்களாக லெபனான் தீவிரமான பொருளாதார சிக்கலில் தவித்துவருகிறது.

    இதனால், மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அந்நாட்டின் பணம் மதிப்பிழந்துள்ளது. அரசியல் தலைவர்களுக்கு எதிரான பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு எரிபொருள் சப்ளையர்களுக்கு பணம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் அ.தா.பாலசுப்ரமணியன், விக்னேஷ் அ. எங்களோடு இணைந்திருங்கள் நேயர்களே.