ஜம்முவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ராணுவ வீரர்கள் பலி
நம்பகமான உளவுத் தகவல் அடிப்படையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள இடத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் தேடுதல் வேட்டையில ராணுவத்தினர் ஈடுபட்டபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
அக்டோபர் 11ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது
பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
லக்கிம்பூர் வன்முறை: மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவியை பறிக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனம் மோதிய சம்பவத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைதானதையடுத்து அஜய் மிஸ்ராவின் பதவியை பிரதமர் நரேந்திர மோதி பறிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
இந்த விவகாரத்தில் தனது மகனை சந்தேக நபராக காவல்துறையினர் பிடித்திருப்பதால், அதன் விசாரணை முடிவடையும்வரை மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியில் அஜய் மிஸ்ரா தொடரக்கூடாது என்று பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்.
வெளிப்படையான விசாரணையும் நீதியும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் அஜய் மிஸ்ரா இனியும் உள்துறை இணை அமைச்சர் பதவியில் தொடருவது சரியாக இருக்குமா என்றும் பிரியங்கா காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இடுகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஐவர் பலி, மொஹித் கந்தாரி ஜம்முவில் இருந்து, பிபிசி இந்திக்காக
பட மூலாதாரம், Defence PRO, JAMMU
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பலியானார்கள்.
எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் ஆயுததாரிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து பிபிசி இந்தியிடம் பேசிய ஜம்முவில் உள்ள இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டிணன்ட் கர்னல் தேவ்ந்திர ஆனந்த், "வெகு தூரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி ஒரு ஜேசிஓ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பூஞ்ச் பகுதியில் திங்கட்கிழமை காலையில் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியாகியுள்ளனர். அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது," என்றார்.
தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த நம்பகமான உளவுத்தகவல் அடிப்படையில் சூரன்கோட் தாலுகாவுக்குக் கீழ் உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.
தாக்குதல் நடவடிக்கையில் படுகாயம் அடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான நாயக் சுபேதார் ஜஸ்விந்தர் சிங், நாயக் மந்தீப் சிங், சிப்பாய் கஜன் சிங் ஆகியோர் பஞ்சாபின் கபூர்தலாவைச் சேர்ந்தவர்கள். சிப்பாய் சரஜ் சிங் உத்தர பிரதேசத்தின் ஷாஹ்ரன்பூரைச் சேர்ந்தவர். வைசாக், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அடுத்த 10 நாட்களுக்குள் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: நான்கு மாநில அரசுகள் ஏற்பு
படக்குறிப்பு, டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், அடுத்த 10 நாட்களுக்குள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை கூட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 53ஆம் கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமி்ழ்நாடு பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கர்நாடக மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் காவிரி விவகாரத்தில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய நீர் வளத்துறை தலைமை பொறியாளர் சுஷில் குமாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர், தற்போது மேட்டூர் அணையில் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு விவரங்களை விளக்கினார்.
தமிழ்நாட்டின் நீர்த் தேவையை கருதி உடனடியாக பிலிகுண்டுலுவில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நிலுவையில் உள்ள நிரையும் மாதாந்திரவாரியான நீரையும் உடனடியாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த இரு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், அதன் பிறகும் கர்நாடகம் உரிய நீரை திறந்து விடவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆக்டோபர் 10ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடகா வழங் வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வலியுறுத்தினார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தையும் விரைவாக கூட்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து காவிரி நீர் முறைப்படுத்தும் குழு, கர்நாடகா நிலுவையில் உள்ள 25.84 டிஎம்சி நீரையும் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டிய 14 டிஎம்சி நீரையும் பிலிகுண்டுலுவில் வழங்க வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தை அடுத்த 10 தினங்களுக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை: அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை
பட மூலாதாரம், AMIT SHAH
படக்குறிப்பு, அமித் ஷா, இந்திய உள்துறை அமைச்சர்
இந்தியாவில் நிலவி வரும் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் குறித்து எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி மற்றும் உயரதிகாரிகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்திய மின்சார ஆணைய தரவுகளின்படி, நாட்டில் தற்போதைய நிலையில் அனல் மின் நிலையங்கள் கையிருப்பில் உள்ள நிலக்கரியின் கையிருப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த 5ஆம் தேதி, நாட்டில் உள்ள 135 மின்னுற்பத்திக்காக நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் 106 நிலையங்களில் அடுத்த 6-7 நாட்கள் வரையிலான நிலக்கரியே இருந்துள்ளது.
பொருளாதாரத்தை மீள்கட்டியெழுப்பப்படுவதால் ஏற்பட்டுள்ள மின் நுகர்வு அதிகரிப்பு, செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட கன மழையால் தடை பட்ட நிலக்கரி தோண்டும் பணிகள், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையேற்றத்தால் குறைந்த உற்பத்தி, மழைக்காலத்துக்கு முன்பாகவே போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைக்கத் தவறியது போன்றவை இதற்கு காரணம் என்று நிலக்கரித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி கையிருப்பு நிலையை ஆராய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு உள்ளது. அந்தக்குழுவே இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க நிபுணர்கள் தேர்வு
பட மூலாதாரம், Nobel Prize Outreach
2021ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பொருளாநிபுணர்கள் தேர்வாகியுள்ளனர்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிட் கார்ட், மாசசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜோஸ்வா டி. அங்கிறிஸ்ட், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் க்வீடோ டபியுள்யூ. இம்பென்ஸ் ஆகியோர் அந்த பரிசுக்கு தேர்வாகியுள்ளனர்.
இதில் பரிசின் முதல் பகுதி டோவிட் காட்டுக்கும் மீதமுள்ள பகுதியை ஜோஸ்வாவும் க்வீடோவும் பகிர்ந்து கொள்வர் என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது. யதார்த்த வாழ்வின் உறவுகள் தொடர்பாக அவர்கள் நடத்திய ஆய்வுக்காக இந்த பரிசு கிடைத்திருக்கிறது.
நடிகர் நெடுமுடி வேணு மரணம்
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் மலையாள பட உலகில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் வேணு, 1978ஆம் ஆண்டு 'தம்பு' திரைப்படம் மூலமாக திரையுலகிற்குள் நுழைந்தார்.
டெல்லியில் தொடங்கியது காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டம்
பட மூலாதாரம், TNDIPR
படக்குறிப்பு, டெல்லியில் இன்று கூடியுள்ள காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள்.
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழுவின் 53ஆம் கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் திரு.சந்தீப் சக்சேனா, காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு உறுப்பினர், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி,மற்றும் காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், காவேரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன், செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். காவிரி விவகாரத்தில் தொடர்புடைய நான்கு மாநிலங்களான ,தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் காவிரி நீர் தொடர்பான தங்களுடைய கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக சமர்ப்பித்துள்ளனர்.
திமுக எம்.பி ரமேஷுக்கு நீதிமன்றக் காவல்
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக கடலூர் எம்.பி ரமேஷை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி குற்றவியல் முதன்மை நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் இன்று காலை சரணடைந்தார்.
முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த இந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் அவரை அக்டோபர் 13ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கற்பகவள்ளி உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் கடும் வெள்ளம்: சுமார் 20 லட்சம் பேர் பாதிப்பு
பட மூலாதாரம், GETTY IMAGES
சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் இடிந்தம் மண்சரிந்தும் கடுமையான சேதம் ஏற்பட்டது.
கனமழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஒரு துயரத்தை சீனா சந்தித்திருக்கிறது.
ஷாங்க்சி மாகாணம் முழுவதும் 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவின் காரணமாக நான்கு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக அரசின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.
கடலூர் திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண், நடராஜன் சுந்தர்
முந்திரி ஆலைத் தொழிலாளி கொலைசெய்யப்பட்டதாகப் பதிவாகியுள்ள வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் கடந்த 9ஆம் தேதி காலை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை சிபிசிஐடி காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடலூர் பண்ருட்டியில் உள்ள குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார்.
முந்திரி திருடி மாட்டிக் கொண்டதால் கோவிந்தராசு எனும் அந்தத் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார் என்று அப்போது ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
ரமேஷ் வெளியிட்ட அறிக்கை
ரமேஷ் எம்.பி. இன்று வெளியிட்ட அறிக்கையில் , “சிபிசிஐடி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து திமுக மீது அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது."
"ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி பேசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் என கருதி சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
படக்குறிப்பு, கடலூர் திமுக எம்.பி டிஆர்வி. எஸ். ரமேஷ்
புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக முழு அடைப்புப் போராட்டம், நடராஜன் சுந்தர்
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் குளறுபடிகள் இருப்பதாகவும் அவற்றைச் சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.
போராட்டத்தால் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. குறைந்த அளவிலான தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள், மற்றும் ஆட்டோ மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
முக்கிய வர்த்தக வீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகள் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாலும், தனியார் பேருந்துகள் இயக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் நகரப் பகுதிகளின் முக்கிய சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
புதுச்சேரியில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி உள்ளதாக காங்கிரஸ் - திமுக கூட்டணி குற்றம்சாட்டுகிறது.
செயல்கள் மூலமே தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் தங்களது செயல்கள் மூலமாகவே மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாறிய பிறகு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த முதல் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தக் கருத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு, பயங்கரவாதம் தொடர்பான கவலைகள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் பத்திரமாக வெளியேறுவது ஆகியவற்றை மையப்படுத்தியே பேச்சுவார்த்தை இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கான்ஸ்தான் மக்களுக்கு நேரடியாக மனிதநேய உதவிகளைச் செய்வது குறித்து இருதரப்பும் விவாதித்ததாகவும் பிரைஸ் கூறியுள்ளார்.
தாலிபன்களுடனான பேச்சுவார்த்தை நேர்மையாகவும் அலுவல்ரீதியாகவும் இருந்ததாக பிரைஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் வசமுள்ள அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க வேண்டும் என பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழ் நேரலைப் பக்கத்துக்கு வரவேற்கிறோம்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குவோர் விக்னேஷ் அ, எம். மணிகண்டன்.