பூமியின் வெப்பம் உயர்வது ஏன் என்பதை விளக்கிய விஞ்ஞானிகளுக்கு நோபல்
பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி, கார்பன் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பது விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி நேயர்களே!
நேரலையில் இணைந்திருந்ததற்கு நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
பட மூலாதாரம், FACEBOOK
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கடந்த 24.09.21 அன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது தொடர்பாக சாத்தூரில் அதிமுகவினர் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இம்மோதலில் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் வீராவேரெட்டி புகார் அளித்ததின் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் உட்பட 5 பேர் மீது சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என்பதற்காக கே டி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது கொலைமிரட்டல் மட்டுமில்லாமல் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வழக்கறிஞர் திருமலையப்பன் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முன்னாள் அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் அமைச்சருக்கான முன்ஜாமின் மனுவை வலியுறுத்துவதில்லை என்று தெரிவித்து அதனை வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) தனசேகரன் அமைச்சரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.
லக்கிம்பூர் விவகாரத்தில் தம்மை சட்ட விரோதமாக தடுத்து வைத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தம்மை கைது செய்ததற்கான முதல் தகவல் அறிக்கையைக்கூட காவல்துறையினர் தம்மிடம் காட்டவில்லை என்று கூறியுள்ளார்.
தம்மை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தவில்லை என்று கூறியிருக்கும் பிரியங்கா, வழக்கறிஞரைச் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
லக்கிம்பூர் சம்பவத்தில் அமைச்சரின் மகன் கைது செய்யப்படாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
பட மூலாதாரம், Twitter@DrAshwani_Kumar
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்படாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருமான அஸ்வனி குமார், "பலியானவர்களின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோதி சந்திக்காதது ஏன்?" எனவும் கேட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணை வெறும் காகித அளவிலேயே இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநில அரசு அறிவித்திருக்கும் 45 லட்ச ரூபாய் நிவாரணம் குறித்து விமர்சித்திருக்கும் அவர், "மனித உயிரின் மதிப்பு 45 லட்சம்தானா? பணத்தைக் கொண்டு உயிரை மதிப்பிடக் கூடாது" எனவும் கூறியுள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மத்திய இணை அமைச்சரின் மகன் கைது, பிரியங்கா காந்தி விடுதலை - 24 மணி நேரத்தில் நடக்காவிட்டால் லக்கிம்பூர் நோக்கி பேரணி - எச்சரிக்கும் நவ்ஜோத் சித்து
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்வது, தடுப்புக்காவலில் உள்ள பிரியங்கா காந்தியை விடுதலை செய்வது ஆகியவற்றை 24 மணி நேரத்துக்குள் செய்யாவிட்டால், பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸார் லக்கிம்பூர் நோக்கி பேரணியாக புறப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து.
பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியதும், சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் அரசு அமைந்தது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சித்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தி லக்கிம்பூர் செல்ல முற்பட்டபோது சீதாபூரில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மாநிலத்தில் அமைதியை குலைக்க முயன்றதாக மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அவரை சந்திக்க பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உத்தர பிரதேச மாநில எல்லையை நேற்று அடைந்தபோது, மாநில எல்லையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதேபோல, இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ்பாகெலும் லக்னெவ் வந்தபோது, அவரையும் விமான நிலையத்தை தாண்டிச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் விமான நிலையத்திலேயே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
பிரியங்கா மீது வழக்கு: லக்னெள விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதல்வர் தர்னா
பட மூலாதாரம், SCREENSHOT OF INC VIDEO
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் 10 பேர் மீது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றதாக அம்மாநில காவல்துறையினர் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலீஸாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளவர், அச்சமற்றவர் என்றும் அவர் ஓர் உண்மையான காங்கிரஸ்காரர் என்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சீதாபூரில் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை சந்திப்பதற்காக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னெள வந்தார்.
ஆனால், அவர் பிரியங்கா காந்தியை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறி உத்தர பிரதேச காவல்துறையினர் தடையாக இருந்தனர். இதனால், அவர் விமான நிலைய வளாகத்திலேயே தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.
கார்பன் அதிகரிப்பால் பூமி வெப்பம் உயருவது ஏன்? - விளக்கிய விஞ்ஞானிகளுக்கு நோபல்
பட மூலாதாரம், NOBEL PRIZE
பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி, கார்பன் டை ஆக்ஸைடு மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பது விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுகரோ மனபே, ஜெர்மனியின் க்ளாஸ் ஹேஸல்மன், இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேரும் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு செறிவு அதிகரிக்கும்போது பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை எப்படி அதிகரிக்கிறது என்பது குறித்து மனேபே ஆய்வு செய்திருக்கிறார். 1960-களில் பூமியின் பருவநிலை குறித்த மாதிரிகளை இவர் உருவாக்கினார். இன்றைய பருவநிலை மாதிரிகளுக்கு இவரது ஆய்வுகளே அடிப்படையாக அமைந்தது.
அதற்கு10 ஆண்டுகளுக்குப் பிறகு பருவநிலைக்கும் காலநிலைக்கும் இடையேயான தொடர்பை விளக்கினார் க்ளாஸ் ஹேஸல்மன். இயற்கையாகவும், மனித நடவடிக்கைகளாலும் பருவநிலையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இவர் தனது மாதிரிகள் மூலம் தெளிவுபடுத்தினார்.
1980 இல், ஜார்ஜியோ பாரிசி சீரற்ற சிக்கலான பொருட்களில் மறைந்திருக்கும் வடிவங்களைக் கண்டுபிடித்தார். அவை இயற்பியலில் மட்டுமல்ல, கணிதம், உயிரியல், நரம்பியலில் உள்ள சீரற்ற சிக்கலான பொருட்கள் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகின்றன
நீலகிரி: டி23 புலியை சுட்டுக் கொல்வதா? - சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு, ஆ. விஜயானந்த், பிபிசி தமிழுக்காக
பட மூலாதாரம், Getty Images
நீலகிரி மாவட்ட வனத்துறைக்கு கடும் சவாலை கூடலூரை சேர்ந்த டி23 புலி ஏற்படுத்தி வருகிறது. 11வது நாளாக நீடிக்கும் தேடுதல் வேட்டையில், ` புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி ஒன்று, கடந்த சில வாரங்களாக மனிதர்களை இலக்காக வைத்து தாக்குதலை நடத்தி வந்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, மேன் ஈட்டர் எனப்படும் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வனத்துறை ஊழியர்கள், அதிரடிப் படை போலீஸார், கும்கி யானைகள், மோப்ப நாய்கள் என பெரும் படையே தேடுதலில் ஈடுபட்டு வருகிறது.
அடுத்ததாக, மனிதர்களைத் தாக்குவதற்கு முன் அந்தப் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா தோக்ரா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ` 11 (1) (ஏ) என்ற சட்டப்பிரிவின்கீழ் புலியை சுடுவதற்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், அதற்கான வழிமுறைகளை அவர்கள் பின்பற்றவில்லை.
`நான்கு பேரையும் கொன்றது இந்தப் புலிதானா?' என்பது நிரூபிக்கப்படவில்லை. நீலகிரி வனத்துறையின் இந்தச் செயல், தேசிய புலிகள் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.
மேலும், அந்தப் புலிக்கு சீரான அளவில் மயக்க ஊசியை செலுத்தி உயிருடன் பிடிக்க வேண்டும். அந்தப் புலி பிடிபட்டாலும் வன உயிரின பூங்காங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விவாதத்தை ஏற்படுத்தவே, மயக்க மருந்து செலுத்தியே புலியைப் பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனை சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், சங்கீதா தோக்ரா தொடர்ந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை அளித்த விளக்கத்தில், புலியை உயிருடன் பிடிக்கவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ` நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தப் புலி (MD T23) ஆள்கொல்லியாக இல்லாமல்கூட இருக்கலாம். எனவே, அதைக் கொல்ல முயற்சிக்க வேண்டாம்.
இந்தத் தேடுதல் பணியில் பிற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் .புலியின் நடவடிக்கையை கண்காணித்து அதற்கு உரிய சிகிச்சை சிகிச்சையளிக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்து, வழக்கின் விசாரணையை இரண்டுவார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரெஞ்சு பாதிரியார்களால் 1950 முதல் 2,16,000 சிறார்கள் பாதிப்பு: விசாரணை குழு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
1950ஆம் ஆண்டு முதல் முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தேவாலய உறுப்பினர்களின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணை குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது விரிவான விசாரணை அறிக்கையில், தேவாலயத்தின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் வரலாற்றிலேயே இந்த அறிக்கை ஒரு திருப்புமுனை என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை, காவல்துறை புலனாய்வு, தேவாலய தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கையை ஜீன் மார்க் சாவே தலைமையிலான குழு தயாரித்துள்ளது.
ஆனால், விசாரணை குழு மதிப்பிட்ட பல வழக்குகள், பிரெஞ்சு சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்த முடியாத வகையில் பழைய வழக்குகளாக உள்ளன.
2018இல், உலகின் பல நாடுகளில் தேவாலய பாதிரியார்களால் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, பிரெஞ்சு கத்தோலிக்க தேவாலயம் இந்த விசாரணை குழுவை நியமித்தது.
திருச்சி விமான நிலையத்தில் 2 பயணிகளிடமிருந்து 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல், பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை இந்திய சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அவர்களிடம் இருந்து ரூ. 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் றிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஒரு பயணியின் உடைமையில் பேஸ்ட் வடிவத்தில் இருந்த தங்கத்தின் எடை 555.00 கிராம் என தெரிய வந்துள்ளது. சந்தையில் இதன் மதிப்பு ரூ. 26.29 லட்சம் ஆகும்.
அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியிடமிருந்து 697.500 கிராம் எடையுள்ள ரூ. 33.04 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 59 லட்சம் ஆகும். இந்த கடத்தல் தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், கண்ணன் ஆகிய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படக்குறிப்பு, பேஸ்ட் வடிவில் தங்கம்
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கிராம மக்கள் கருப்புக்கொடி போராட்டம், பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, வீரபாண்டியாபுரம் கிராமத்தில் வீதிதோறும் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தெற்கு வீரபாண்டியாபுரம் கிராம மக்கள் கிராமம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்குள்ள சிப்காட் இரண்டாம் கட்ட நிலம் கையகப்படுத்துதலுக்கான நடவடிக்கையின் அங்கமாக தெற்கு வீரபாண்டியாபுரம் கிராமத்தில் 235 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அந்த நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 14 லட்சம் ரூபாய் வழங்க அரசு தரப்பு விலை நிா்ணயம் செய்துள்ளது.
ஆனால் விவசாயிகள் தரப்பில் இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாவதால் தங்களுக்கு அரசு குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு 30 லட்ச ரூபாயாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் இதுவரை இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மிரட்டி பணிய வைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து இன்று தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் கண்டன பேனர் வைத்து கிராம மக்கள் கிராமம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் நாளை முதல் சுற்று வட்டார கிராமங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
6 மணி நேரம் செயலிழந்த வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடக மற்றும் செய்திப் பறிமாற்றத் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப் ஆகியவை நேற்று திங்கள் கிழமை இரவு தொடங்கி 6 மணி நேரத்துக்கு செயலிழந்தன.
இந்த மூன்றுமே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனங்களின் சேவைகளை மொபைல் செயலிகள் மூலமோ, கணினி மூலமோ எதன் மூலமும் பெற முடியவில்லை.
சமூக ஊடகத் தளங்கள் அவ்வப்போது முடங்குவது இயல்புதான் என்றாலும், இந்த முடக்கம் மிகப் பெரியது.
காரணம் இந்த முடக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் நடந்துள்ளது. அதே போல சரி செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலமும் மிக நீண்ட நேரம்.
இன்னும் முழுமையாக இந்த சேவைகள் மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத இந்த முடக்கத்துக்குக் காரணம் என்ன?
கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால்தான் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள்.
இந்த இணைய தளங்களின் கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.
கிரீன்விச் சராசரி நேரப்படி திங்கள் கிழமை 16.00 மணிக்கு கிடைக்காமல் போன இந்த சேவைகள், 22.00 மணிக்கு மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
தவறாக செயல்படுத்தப்பட்ட கான்ஃபிகரேஷன் மாற்றம் நிறுவனத்தின் உள்ளக கருவிகளையும், கணினிகளையும் பாதித்துவிட்டதால், சரி செய்யும் நடவடிக்கைகள் சிக்கலாக மாறிவிட்டதாக ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வண்டி ஹாரன்களில் இந்திய இசைக்கருவிகளின் இசை மட்டுமே கேட்க புதிய சட்டம் - நிதின் கட்கரி
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, நிதின் கட்கரி.
வண்டிகளில் ஒலிக்கும் ஹாரன்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக சத்தம் போடுகின்றனவா?
ஹாரன்கள் அடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஹாரன் அடிக்கிறார்களா?
என்பதைத்தான் இதுவரை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இனி ஹாரன்களில் ஒலிப்பது இந்திய இசைக் கருவிகளின் ஓசைதானா என்பதையும் அதிகாரிகள் கவனிக்கவேண்டியிருக்கும் போலத் தெரிகிறது.
ஆம்.
இந்தியாவில் ஹாரன்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே ஒலிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என்று இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என்கிறது பி.டி.ஐ. செய்தி நிறுவனம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
வணக்கம் நேயர்களே!
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய இன்றைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் பகிர்கிறோம். எங்களுடன் இணைந்திருங்கள். தொகுத்து வழங்குவோர் பரணிதரன், அ.தா.பாலசுப்ரமணியன். நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.