காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தாலிபன் ஆதரிக்காது: ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்
"தாலிபன் எந்தவொரு வெளிநாட்டிடம் இருந்து உத்தரவுகளை பெற்று செயல்படுவது கிடையாது. தங்களுடைய சொந்த நலன்களை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். யாருக்காகவும் பிறரை தாலிபன் ஆதரிக்க மாட்டார்கள்," என்று லெப்டிணன்ட் ஜெனரல் அசத் துர்ரானி தெரிவித்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
செப்டம்பர் 21 நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,
இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
எங்களுடன் இந்த பக்கத்தில் இன்று இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
காந்தி அரையாடை பூண்ட மதுரைக்கு வந்தது பெருமை;காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா மதுரையில் பெருமிதம், பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, மதுரையில் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அவரது மகன் வழி பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா.
காந்தி அரையாடை விரதம் பூண்ட மதுரை மண்ணில் இன்று நான் கால்பதித்து இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என மதுரை காந்தி அருங்காட்சியத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா (87) தெரிவித்துள்ளார்.
இவர் காந்தியின் நான்காவது மகன் தேவ்தாஸ் காந்தியின் மகளாவார். காந்தி ஸ்மிரிதியின் துணைத் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கும் தர்ஷன் ஸ்மிரிதியின் தலைவராக ஒன்பது ஆண்டுகளுக்கும் இவர் பதவி வகித்துள்ளார்.காந்தி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். அதன் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 22ஆம் தேதி மதுரை காந்தி அருங்காட்சியகம் கொண்டாடவிருக்கிறது.
இந்த விழாவில் மகாத்மா காந்தி மற்றும் ராஜகோபாலாச்சாரியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்து கொள்கிறார்.
அதில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகை தந்து காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியது: தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு எனது தாய் நிலம்.போன்றது. இங்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமன்றி காந்தி அரையாடை பூண்ட மதுரை மண்ணில் கால் பதித்து இருப்பது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது.
இந்தியாவில் வாழ்கின்ற விவசாயிகளே செயல்படும் மனிதர்களாக இருக்கிறார்கள். அப்படி ஒரு அடையாளமாக தன்னை மகாத்மா காந்தி வெளிப்படுத்திக் கொண்ட ஒரு தருணம் நிகழ்ந்த மண் தான் இந்த மதுரை.
ஒரு சாதாரண விவசாயி போலவே தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டார் காந்தி. தன்னுடைய வாழ்க்கையில் பலவற்றை சோதனையாகவே மேற்கொண்டு அதனையே வாழ்வியலாக மாற்றிக்கொண்டவர் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆன்மிகத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர் ஆனால் அதற்காக துறவறம் பூண்டு இமயமலைக்கு செல்ல விரும்பவில்லை. இந்த மக்களோடு வாழ்ந்து தாம் உணர்ந்த ஆன்மீகத்தை பரப்ப விரும்பினார்.
நமது வாழ்க்கையில் சில மனிதர்கள் தான் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்வதை நாம் உணர்ந்திருப்போம். எனது பார்வையில் அந்த சிறப்பிற்கு உரியவர்களாக காந்தியும் ராஜாஜியும் வாழ்ந்து காட்டினார்கள். தன் வாழ்ந்த காலம் முழுவதும் ஒரு கர்மயோகியாகவே வாழ்ந்தவர் மகாத்மா காந்தி.
ஒருபோதும் ஆன்மிகம் தொடர்பாக அவர் பேசவில்லையே தவிர ஆனால் இந்திய மக்கள் முன்பாக வாழ்ந்து காட்டினார்.
பல்வேறு வண்ண உடைகளோடு நீங்கள் வாழ்கிறீர்கள் ஆனால் உங்கள் தாத்தா காந்தி அப்படி வாழவில்லையே என்று என்னிடம் கூட சிலர் கேட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்வேன் வெள்ளை நிறம் என்பது அனைத்து நிறங்களையும் உள்ளடக்கியதாகும்.
அப்படி ஒரு வெண்மை நிறத்தோடு வாழ்ந்தவர் தான் மகாத்மா அவர் தந்த வண்ணங்கள் தான் இன்றைக்கு நம்மோடு இருப்பவை என்று கூறுவேன்.
மதுரை மக்கள் காந்தியின் மீதும் காந்தியத்தின் மீதும் மிகுந்த பிடிப்பு கொண்டவர்களாக இருப்பது வெளிப்பாடுதான் காந்தி அரையாடை ஏற்ற இந்த நூற்றாண்டு விழா. இதில் பங்கேற்பதை மிகுந்த பெருமையாக நான் கருதுகிறேன் என்று தாரா காந்தி கூறினார்.
புது டெல்லி காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயக்குநர் அண்ணாமலை மற்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் விதூர் பரதன் காந்தி நினைவு அருங்காட்சியகம் இயக்குநர் நந்தா ராவ் காந்திய கல்வி நிறுவன முதல்வர் முனைவர் முத்துலட்சுமி ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.
படக்குறிப்பு, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும் தாரா காந்தி பட்டாச்சார்யா
வந்துகொண்டிருக்கும் செய்தி, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தாலிபன் ஆதரிக்காது: ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர், உஸ்மான் ஜாஹித்
படக்குறிப்பு, லெப்டிணன்ட் ஜெனரல் (ஓய்வு) அசத் துர்ரானி, ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தாலிபன் ஆதரிக்காது என்று கூறியிருக்கிறார், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான லெப்டிணன்ட் ஜெனரல் அசத் துர்ரானி.
பிபிசியின் உஸ்மான் ஜாஹித்திடம் பேசிய அவரிடம், ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியாவின் செல்வாக்கு மற்றும் தாலிபனின் புதிய ஆளுகையுடன் அந்நாட்டுக்கு உள்ள உறவு குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு துர்ரானி, "தமது சொந்த நலன்களை மனதில் வைத்தே தாலிபன் வெளிநாடுகளுடன் உறவைப் பேணும். அது இந்தியாவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி," என்றார்.
தாலிபன் ஆளுகையைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வெளியேறி விட்டதே என்று கேட்டபோது, "இந்தியா விரும்பி அங்கிருந்து வெளியேறவில்லை. அது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றே கருதுகிறேன்," என்று தர்ரானி பதிலளித்தார்.
"ஆப்கானிஸ்தானில் இந்தியா முதலீடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே தாலிபன் எதிர்பார்க்கும். அந்நாட்டு சமூகத்தில் இந்தியாவுக்கு ஆழமான செல்வாக்கு உள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனாலும், அதன் நலன்களில் இந்தியா அக்கறை காட்டி வந்துள்ளது. அந்த இரு நாடுகளும் வரலாற்றுபூர்வமான உறவைக் கொண்டுள்ளன. அதில் பாகிஸ்தான் கூட தலையிட விரும்பாது," என்று துர்ரானி தெரிவித்தார்.
அப்படியென்றால் தாலிபன் மீது பாகிஸ்தான் தமது செல்வாக்கை செலுத்துகிறதா என்று கேட்டபோது, முன்பும் சரி, இப்போதும் சரி தாலிபன் மீது எவ்வித செல்வாக்கையும் பாகிஸ்தான் செலுத்தவில்லை என்று துர்ரானி கூறினார்.
"தாலிபன் எந்தவொரு வெளிநாட்டிடம் இருந்து உத்தரவுகளை பெற்று செயல்படுவது கிடையாது. தங்களுடைய சொந்த நலன்களை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். யாருக்காகவும் பிறரை தாலிபன் ஆதரிக்க மாட்டார்கள்."
"பொது நல விவகாரங்களில் பாகிஸ்தானுடன் தாலிபன் இணக்கமாக உள்ளது. அதற்காக, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் தரப்பில் நடக்கும் ஆயுத போராட்டத்துக்கு தாலிபன் ஆதரவு தெரிவிக்காது. அது ஒருபோதும் நடக்காது," என்றார் துர்ரானி.
வந்துகொண்டிருக்கும் செய்தி, புதுச்சேரி மாநிலங்களவை வேட்பாளரை அறிவித்தது பாஜக, நடராஜன் சுந்தர், புதுச்சேரி
பட மூலாதாரம், Selvaganapathy
படக்குறிப்பு, செல்வகணபதி
புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான வேட்பாளராகும் வாய்ப்பை யாருக்கு தருவது என்பதில் ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில் அந்த வாய்ப்பை பாஜகவிற்கே என்.ஆர். காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. இதற்கு முதல்வர் ரங்கசாமிக்கு மத்தியில் ஆளும் பாஜக கொடுத்த அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வகணபதி, அக்கட்சியின் பொருளாளருமாக இருப்பவர. முன்னாள் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கட்சி மேலிட அறிவிப்பைத் தொடர்ந்து நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின்
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் என்.ஆர்.காங்கிரசிடம் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, பா.ஜ.க. ஆதரவு சுயேச்சைகள் 3 பேரும் உள்ளனர்.
எனவே ஆளும் கூட்டணி எளிதாக வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு உள்ளது.
பட மூலாதாரம், BJP
உணவும் உடல்நலமும்: சமையல் முறையில் கவனம் தவறினால் புற்றுநோய் ஆபத்து - மருத்துவ அறிவியல் ஆய்வு, மிகுவேல் ட்ரான்கோசோ த்ரெவினோ
பட மூலாதாரம், Getty Images
உணவு பொருள்களை சில முறைகளில் சமைக்கும்போது நச்சு ரசாயனங்களை உருவாக்கி நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
"நாம் பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களாக உருவெடுத்ததற்கான முழுக் காரணமே நாம் உணவைச் சமைக்கத் தொடங்கியதுதான்" என்கிறார் ஜென்னா மேசியோச்சி.
"சமைக்காத உணவை மட்டுமே நாம் உட்கொண்டபோது, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் அதில் இருந்து ஊட்டச் சத்துக்களைப் பெற நமது உடல் போராட வேண்டியிருந்தது."
சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை எப்படி நோய் எதிர்ப்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்தவர் மேசியோச்சி. அவரது கருத்துடன் உயிரியலாளர்கள் உடன்படுகின்றனர்.
உண்மையில் நெருப்புடன் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட்
பட மூலாதாரம், TNDIPR
படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர்.
மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது.
மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்தத் தேர்வித் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்தக் குழுவில் சமூக சமத்துவதற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், மருத்துவத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றிருந்தனர்.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.
கடலூர் திமுக எம்.பி டிஆர்வி. எஸ். ரமேஷ் மீது வழக்கு
திமுகவைச் சேர்ந்த, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி. எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் இறந்ததை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது. முதல் தகவல் அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உயிரிழந்த தொழிலாளி திருடி மாட்டிக்கொண்ட பின்னர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆனால், இறந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறும் அவரது உறவினர்கள், அதை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
படக்குறிப்பு, கடலூர் திமுக எம்.பி டிஆர்வி. எஸ். ரமேஷ்
சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வாண வெடிகள் வெடித்ததில் கருகிய கார், பல வீடுகள் சேதம், பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, காருக்குள் இருந்த வெடிகள் வெடித்ததில் சேதம் அடைந்த வீடு
சாத்தான்குளம் அருகே காருக்குள் இருந்த வாண வெடி வெடித்ததில் அந்த கார் எரிந்து சாம்பலானது.இந்த சம்பவத்தில் அருகே இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை
குமரன்விளையை சேர்ந்த பாலகிருஷ்ணன். நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
பாலகிருஷ்ணன் நேற்று இரவு திசையன்விளை அருகே கோயில் திருவிழாவிற்கு வெடிகளை கொடுத்துவிட்டு மீதமுள்ள வெடிகளை காரில் வைத்து விட்டு வீட்டில் தூங்கியுள்ளார்.
இரவு சுமார் ஒன்றரை மணி அளவில் திடீரென காரின் உள்ளே இருந்த வெடிகள் வெடித்து சிதறின. காரில் தீ ஏற்பட்டு அது முற்றிலுமாக எரிந்து சாம்பலானதுடன் அருகிலுள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அவற்றின் மேல்கூரை ஓடுகள், ஜன்னல்கள், கதவுகள் சேதம் அடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர்.எஸ்.பி கண்ணன், ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வெடி விபத்து குறித்து தட்டார்மடம் காவல்நிலைய அதிகாரிகள் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளை அருகே உள்ள அழகியவிளை பகுதியில் வெடி பட்டறை நடத்தி வந்தபோது தீ விபத்து ஏற்பட்டதால்
வெடி பட்டறை நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அணைக்கரை பகுதியில் வெடி பட்டறை நடத்துவதற்கான உரிமம் பெற்று பாலகிருஷ்ணன் வெடிகள் தயாரித்து வருகிறார்.
இதனால் பாலகிருஷ்ணன் தயாரிக்கும் வெடிகளின் தன்மைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவலர் தெரிவித்தார்.
படக்குறிப்பு, உருக்குலைந்த கார்
இந்தியர்களுக்கு பயணத் தடையை நீக்கிய மலேசியா
இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் குடிமக்கள் மலேசியாவுக்குள்
நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி விதிக்கப்பட்ட தடையை நீக்கும் உத்தரவு
உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,
நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள்
இனி மலேசியாவுக்கு செல்ல இயலும். எனினும், இதற்கான சில விதிமுறைகளையும்
அந்நாடுஅறிவித்துள்ளது.
மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் அனுமதி, நீண்ட
காலம் தங்குவதற்கான விசா உள்ளவர்கள், முதலீட்டாளர்கள்,
தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மலேசியாவுக்குள் நுழைய இனி அனுமதி உண்டு.
இந்திய துணை கண்டத்தைச் சேர்ந்த பயணிகள் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளைப்
போட்டிருக்க வேண்டும்.
மலேசியாவுக்கு வந்து சேர்ந்ததும் கொரோனா பரிசோதனைக்கு உட்பட
வேண்டும என்றும், மலேசிய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின்படி
குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் புதிய திரிபுகள் மலேசியாவுக்குள் ஊடுருவாமல்
இருக்க இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஐந்து நாடுகளின் தூதரகங்களுக்கு
கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அத்துறை கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு
ஆணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகைக்கு
தடை விதிக்கப்பட்டது.
எனினும், எந்த நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும்
மலேசியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை.
பட மூலாதாரம், Getty Images
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும்
வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் என்று சுகாதார அமைச்சர் மன்சுக் மாந்தவியா தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா சென்ற ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்தபோது, உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் 'குவாட்' (Quad) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோதி செவ்வாயன்று வாஷிங்டன் கிளம்பவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்றாவது முறையாக கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ - பெரும்பான்மை இல்லாததால் சிக்கல்
பட மூலாதாரம், Getty Images
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன் தேர்தலை நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பெற 170 இடங்கள் தேவைப்படும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன.
இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.
கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.
உலகின் வயதான இரட்டையர்களாக ஜப்பான் சகோதரிகள் கின்னஸ் சாதனை
பட மூலாதாரம், GUINNESS WORLD RECORDS
உலகின் வயதான இரட்டையர்களாக உமேனோ மற்றும் கொடாமா ஆகிய ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
அவர்களுக்கு வயது 107 ஆண்டுகள் 300 நாள்கள்.
இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகளே வயதான இரட்டையர்களாக இருந்தனர். அந்தச் சாதனையை உமேனோவும் கொடாமாவும் முறியடித்துள்ளனர்.
ஜப்பானில் முதியவர்கள் நாள் கொண்டாடப்பட்ட தினத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரு சகோதரிகளும் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.
கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி முன்னிலை
பட மூலாதாரம், Getty Images
கனடா நாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை வகித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும் அவரது தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் ஊடகங்கள் கணித்துள்ளன.
வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும் இது.
நாடாளுமன்றத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் ஆயுள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும்.
கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் கிடைத்தன.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம்.மணிகண்டன்.