பஞ்சாப் மாநில முதல் தலித் முதல்வராகப் பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி
மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்ட பின் அவர் பதவி விலகிய நிலையில் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பக்கத்தை நிறைவு செய்கிறோம்.
எங்களுடன் இன்றைய நாளில் இந்த பக்கத்தில் இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
பேஸ்புக்கில் பெண் என நினைத்து பழகியவர் ஆண் என்று தெரிந்ததும் கொலை செய்த இளைஞர் கைது
படக்குறிப்பு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் முருகன்
பேஸ்புக்கில் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பழகியவர் ஆண் என்று தெரிந்ததால் அவரை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து. மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் இருந்த கண்ணாணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் இறந்தவர் விளாத்திகுளம் அருகே உள்ள மேலஈரால் பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பதும், அவரை கொலை செய்தது காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்த் முருகன் (24) என்பதும் தெரியவந்தது.
முருகன் கொலை குறித்து கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் நடத்திய விசரணையில், இறந்து போன முருகன் அமுதா என்ற பெண் பெயரில் முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கி வைத்துள்ளார்.
அந்த முகநூல் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் முருகன் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனிடம் பெண் என்று நினைத்து பேஸ்புக் வழியாக பழகி வந்துள்ளார்.
பின்னர் இருவரும் செல்போன் நம்பர் பரிமாறிக் கொண்டுள்ளார்.; காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகனிடம் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் செல்போனில் பெண் குரலில் பேசி வந்துள்ளார்.
இருவரும் காதலர் தினத்தன்று சந்திக்க திட்டமிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எட்டையாபுரம் வந்துள்ளார்.
எட்டயபுரத்தில் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தான் பேசிய பழகி வந்த நபர் பெண்ணல்ல ஆண் என்பது காஞ்சிபுரம் முருகனுக்கு தெரிய வந்தது.
உடனே முருகன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்புவதாக கூறி கிளம்பியபோது, அவருடன் சமரசம் பேசி தன்னுடன் அழைத்துச் சென்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகனை மிரட்டி மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி அழைத்துள்ளார்.
ஆனால் முருகன் மறுத்துவிடவே இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக முருகனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எப்படியாவது விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனை கொலை செய்துவிட்டு அவனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை அழித்து விட வேண்டும் என திட்டமிட்டு குளிர் பானத்தில் விஷத்தை ஊற்றி வைத்துள்ளார்.
இருவரும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டு பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.
அப்போது விஷம் கலந்த குளிர்பானத்தை காஞ்சிபுரம் முருகன் விளாத்திகுளம் முருகனுக்கு கொடுத்துள்ளார்.அதை குடித்த முருகன் மயக்கத்தில் இருந்துள்ளார்.
அப்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் அருகில் இருந்த கல்லை முருகனின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கொலை செய்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் தனது மணி பர்ஸ்சை தவற விட்டு சென்றுள்ளார்.
முருகன் தனது வீட்டிற்கு சென்ற போது தன்னுடைய மணி பர்ஸ்சை தவறவிட்டு வந்ததை அறிந்து, அதை எடுப்பதற்காக மீண்டும் மறுநாள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சென்றபோது அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வேளாண் சட்டத்தை ரத்து செய்யுங்கள் - பஞ்சாப் புதிய முதல்வர் கோரிக்கை
பட மூலாதாரம், Charanjit Singh Channi
படக்குறிப்பு, பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்து தெரிவிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுங்கள் என்று பஞ்சாப் மாநில முதல்வராக பதவியேற்ற முதலாவது நாளிலேயே மத்தியில் ஆளும் மோதி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சரண்ஜித் சிங் சன்னி.
அந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் சமீபத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சரண்ஜித் சிங் சன்னியை அக்கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் அவருக்கு இன்று காலை முதல்வராக பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரண்ஜித் சிங், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை. அவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அந்த சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.
சிவகாசி அருகே பட்டாசு விபத்து - தொழிலாளி பலி, பிரபுராவ் ஆனந்தன்
சிவகாசி அருகேயுள்ள சரஸ்வதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
சிவகாசி அடுத்த சரஸ்வதிபாளையத்தில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலை நாக்பூரில் இயங்கி வரும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அனுமதி பெற்றுள்ளது.
இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கப் போல் தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர்.
சின்ன முனியப்பன் என்ற தொழிலாளி ஒரு அறையில் பணிபுரியும் போது தரையில் உராய்வு ஏற்பட்டு தீடிரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சின்ன முனியப்பன் உடல் சிதறி சம்பவ இடத்தில் பலியார்.
மேலும் அவர் பணி புரிந்து வந்த அறை முற்றிலும் தரைமட்டமானது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் அணைத்தனர்.
மேலும் சார் ஆட்சியர் பிரதிவிராஜ், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் ஜீவா ஜோதி, வட்டாசியர் ராஜேஷ்குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் கோடீஸ்வரன் மற்றும் ஆலை போர் மேனை தேடி வருகின்றனர்.
கடலூரில் பள்ளி விழுந்த உணவை உண்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு சிகிச்சை, நடராஜன் சுந்தர்
கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பயிலும் 20 குழந்தைகளில் 13 மூன்று குழந்தைகளுடன் மேலும் 4 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று இன்று மதிய உணவை சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உணவு பரிமாறிய ஊழியர்கள் சாப்பாட்டை பார்த்தபோது அதில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாந்தி மற்றும் மயக்கமடைந்த 2 குழந்தைகள் உட்பட உணவருந்திய 17 குழந்தைகளையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வருகிறது.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த ஆட்சியர் பாலசுப்ரமணியம்,கோட்டாட்சியர் அதியமான் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளை பார்வையிட்டு, அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அங்கன்வாடி பணியாளர் ஜெயசித்ரா மற்றும் சமையலர் அம்சவல்லி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, உணவில் கிடந்த பல்லி
பஞ்சாப் மாநில முதல்வராகப் பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி
பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதல்வராக இன்று மதியம் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்ட பின் அவர் பதவி விலகிய நிலையில் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
பஞ்சாப் மாநில மொத்த மக்கள் தொகையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு வங்கி 33 சதவீதம் உள்ளது.
அந்த சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் முதல்வராக தேர்வாவதன் மூலம் பட்டியலின வாக்குகளை பெறலாம் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பட மூலாதாரம், government of punjab
தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு
கேப் டௌன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன.
மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள்.
சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள இரூந்த பென்குயின் காலனி, அங்கிருந்த கடற்கரை ஒன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அவற்றின் உடலில் தேனீக்கள் கொட்டியதைத் தவிர வேறு எந்த காயமும் தென்படவில்லை.
பென்குயின்களின் கண்களைச் சுற்றி தேனீக்கள் கொட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
பட மூலாதாரம், AFP
ரஷ்ய துப்பாக்கி சூடு: பெர்ம் பல்கலைக்கழகத்தில் பலர் சுட்டுக்கொலை
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ரஷ்யவில் இன்று காலை துப்பாக்கி சூடு நடைபெற்ற பெர்ம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே காவல்துறையினர்
ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தபட்சம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்த அறைகளை மூடிக்கொண்டனர். மற்றவர்கள் அறை ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பி ஓடினார்கள்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேக நபரை தாக்கி காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். அவர் மாணவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 19 பேர் காயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த பெர்ம் பல்கலைக்கழகம், தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,300 கி.மீ தூரத்தில் உள்ள உரால்ஸ் பகுதியில் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் நியமனங்கள்- சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
பட மூலாதாரம், Getty Images
அண்ணா தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பின் மூலம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.
`அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளுக்கு இது முரணானது' எனக் கூறி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், ` அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக, கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஏற்று 2018 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதா மரணம் அடைந்தபோது இருந்த உள்கட்சி விதிகளைப் பின்பற்றுவதற்கு அ.தி.மு.க தலைமைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், ` கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை. இந்த விவகாரத்தில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா.. இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது. மேலும், உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது' எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
7.5% ஒதுக்கீடு: கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பட மூலாதாரம், Getty Images
தொழிற்படிப்பில் 7.5 சதவிகித சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஏழை மாணவர்களின் பெற்றோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை, கிண்டியில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேருவதற்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், "கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு படிப்பு என்பதே இலக்காக இருக்க வேண்டும் என புரட்சியாளர் லெனின் கூறியுள்ளார். மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு வேலைக்குச் செல்வதோடு மட்டும் இல்லாமல் வேலை கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும். அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட இயக்கத்தின் நோக்கமாக உள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது" என்றார்.
மேலும், " 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின்கீழ் தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். ஒரு மாணவருக்கு ஓர் ஆண்டுக்கு சராசரியாக 70,000 ரூபாய் முதல் 80,000 ரூபாய் வரையில் செலவாகிறது.இதன்மூலம் பொறியியல் படிப்பில் 10,000 மாணவர்களும் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் ஆகிய பிரிவுகளில் 350 மாணவர்களும் பலன் பெற உள்ளனர். உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி மாற வேண்டும்" எனவும் முதலமைச்சர் கூறினார்.
கனடாவில் இன்று பொதுத் தேர்தல் - மீண்டும் வெற்றி பெறுவாரா ட்ரூடோ?
பட மூலாதாரம், Getty Images
கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. ஏற்கெனவே மைனாரிட்டி அரசை நடத்தும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலாகும் இது.
நாடாளுமன்றத்துக்கு இன்னும் இரு ஆண்டுகள் ஆயுள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் மூன்றாவது முறையாக ட்ரூடோ பிரதமராகப் பொறுப்பேற்பார்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் 170 இடங்களைப் பிடித்தால் ஆட்சியமைக்க முடியும். கடந்த தேர்தலில் ட்ரூடோவின் கட்சிக்கு 155 இடங்கள் கிடைத்தன.
அணு ஆயுதப் போட்டி உருவாக்காதீர் - அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டால் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் குலைக்கும் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சக் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் இரண்டு வகையான ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. அவற்றில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையிலான க்ரூஸ் ரக ஏவுகணையும் அடங்கும்.
ஆக்கஸ் உடன்பாட்டின்படி அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கித் தொழில்நுட்பங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆஸ்திரேலியாவுக்கு வழங்க இருக்கின்றன.
இது சீனாவை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே இந்த உடன்பாட்டுக்கு சீனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடின் கட்சி முன்னிலை
பட மூலாதாரம், Reuters
ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாதிமிர் புடினின் கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் இருக்கிறது.
அரசுக்கு எதிரான பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகள், புடினின் யுனைட்டட் ரஷ்யா கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறுகின்றன.
450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையான டூமாவுக்கு தேர்தல் நடந்திருக்கிறது. இதில் 14 கட்சிகள் போட்டியிட்டன.
50 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 46 சதவிகித வாக்குகளை புடின் கட்சியும் 21 சதவிகித வாக்குகளை கம்யூனிஸ்ட் கட்சியும் பெற்றிருக்கின்றன.
ஆக்கஸ்: பிரிட்டனுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது பிரான்ஸ்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இடையேயான ஆக்கஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் ரத்து செய்திருக்கிறது.
ஆக்கஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலேஸுடன் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லி ரத்து செய்துவிட்டார்.
இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் ரிக்கெட்ஸும் உறுதி செய்துள்ளார்.
ஆனால் ஆக்கஸ் உடன்பாட்டால் பிரான்ஸ் கவலைப்படத் தேவையில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஆக்கஸ் உடன்பாடு கடந்தவாரம் கையெழுத்தானது. இதன்படி நீர்மூழ்கிகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவத் தொழில்நுட்பங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படுகின்றன.
இதனால் பிரான்ஸுடன் ஆஸ்திரேலியா செய்து கொண்டிருந்த நீர்மூழ்கி உடன்பாடு ரத்து செய்யப்பட்டது. இது பிரான்ஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.