மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வாக இந்தியாவில் நடத்தப்படும் சர்ச்சைக்குரிய நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் தீர்மானம் ஒன்று நாளை, திங்கள் கிழமை, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எல்லைநாயக்கன்பட்டியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இத்தகவலைத் தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்வார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்று 40 ஆயிரம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும், இவற்றின் மூலம் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 805 இடங்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களின் மூலம் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஒரு சோதனை முயற்சி என்று கூறிய மா.சுப்ரமணியன், இதுவரை இந்திய ஒன்றிய அரசிடம் இருந்து 3.51 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகம் உள்ள 9 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் இதுவரை 500 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.