குஜராத் மாநில முதல்வர் பதவிக்கு பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடந்த பாஜக சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் அவரை பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்தனர். பாஜக மத்திய பார்வையாளராக இருந்த ஒன்றிய அமைச்சர் நரேந்திர தோமர் இந்த தகவலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வர் தேர்வு நடைபெற்றது.
பூபேந்திர பட்டேல், முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
இவர் முன்பு அகமதாபாத் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். பூபேந்திர பட்டேல் குஜராத்தின் புதிய முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்பார் என்று தெரிகிறது.
தாம் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தெரிவிக்கும் கடிதத்துடன் பூபேந்திர பட்டேல் இன்று ஆளுநரை சந்திக்கிறார்.
ஆனால், பதவி விலகிய முதல்வர் விஜய் ரூபானிக்கு என்ன பொறுப்பு வழங்கப்படவுள்ளது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பட மூலாதாரம், BHUPENDER PATEL/FACEBOOK
படக்குறிப்பு, பூபேந்திர பட்டேல்
அரசு பேருந்தின் டயர் மோதி தந்தைக்கு எலும்பு முறிவு... கண்ணீரோடு நீட் எழுத சென்ற மகன்
படக்குறிப்பு, எடுத்துச் செல்லப்படும் டயர்
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவரின் மகன் கணேஷ் நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் உடையாப்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளிக்கு வந்திருந்தார்.
அப்பொழுது விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு பேருந்து ஒன்று விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, உடையாப்பட்டி பகுதியில் திடீரென பேருந்தின் டயர் கழன்று தேர்வு மையத்திற்கு செல்ல சாலையை கடந்து வந்து கொண்டிருந்த காசிவிஸ்வநாதன் உட்பட சிலர் மீது மோதியது.
இதில் இரண்டு மாணவர்கள் லேசான காயத்துடன் தப்பிய நிலையில் மாணவனின் தந்தைக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டு, இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கால்கள் உடைந்த நிலையிலும் மகனுக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத அனுப்பியுள்ளார் காசி. மகன் கணேஷும் கண்ணீருடன் தேர்வு எழுதச் சென்றுள்ளார். அம்மாபேட்டை காவல்துறையினர் காசி விஸ்வநாதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
புதுவை வந்தார் வெங்கையா நாயுடு
படக்குறிப்பு, புதுவை வந்துள்ள வெங்கையா நாயுடுவை வரவேற்கும் முதல்வர் ரங்கசாமி.
இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பல்வேறு திட்டப் பணிகளைத் தொடக்கிவைக்க புதுச்சேரி வந்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சூரிய மின்சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தல், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தல், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சூரிய மின்சக்தி திட்டத்தை துவக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புதுச்சேரி வருகை தந்துள்ளார்.
முதல் நிகழ்வாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ரூபாய் 7.67 கோடி செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டத்தை துவக்கி வைக்கிறார் வெங்கையா நாயுடு.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஜிப்மர் வளாகத்தில் உள்ள 15 மருத்துவமனை மற்றும் விடுதி கட்டடங்கள் பயன்படுத்தும். இவ்விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் ஜிப்மர் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
குடியரசுத் துணைத் தலைவரின் வருகையை ஒட்டி முக்கிய சாலை மற்றும் சந்திப்புகளில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நாளை சட்டமன்றத்தில் தீர்மானம்
பட மூலாதாரம், Twitter
படக்குறிப்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்
மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வாக இந்தியாவில் நடத்தப்படும் சர்ச்சைக்குரிய நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் தீர்மானம் ஒன்று நாளை, திங்கள் கிழமை, தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எல்லைநாயக்கன்பட்டியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இத்தகவலைத் தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்வார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்று 40 ஆயிரம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும், இவற்றின் மூலம் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 805 இடங்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களின் மூலம் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஒரு சோதனை முயற்சி என்று கூறிய மா.சுப்ரமணியன், இதுவரை இந்திய ஒன்றிய அரசிடம் இருந்து 3.51 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகம் உள்ள 9 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் இதுவரை 500 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
குஜராத் முதல்வரை தேர்வு செய்ய இந்திய அமைச்சர்கள் இருவர் பயணம்
குஜராத் மாநில பாஜக முதல்வர் விஜய் ரூபானி தனது பதவி விலகல் கடிதத்தை சனிக்கிழமை ஒப்படைத்துள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக மத்தியப் பார்வையாளர்களாக இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் குஜராத் பயணம் செய்கிறார்கள்.
அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகிய இருவரும்தான் மத்தியப் பார்வையாளர்களாக குஜராத் செல்கிறவர்கள்.
புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்றக் கட்சியின் கூட்டம் இன்று நடக்கிறது.
கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணம் விதிகளைப் பின்பற்றாததே - விசாரணை அறிக்கை
கடந்த ஆண்டு 21 பேரை பலி கொண்ட கோழிக்கோடு விமான விபத்துக்கு பொறுப்பில் இருந்த விமானி நிலையான நடைமுறை விதிகளை பின்பற்றத் தவறியதே காரணம் என்று ஏர்கிராஃப்ட் ஆக்சிடண்ட் இன்வெஸ்டிகேஷன் பீரோ என்ற விசாரணை அமைப்பு அளித்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு இந்த இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை இயக்கும் பொறுப்பில் இருந்த விமானிக்கு அதே போன்ற தட்பவெட்ப நிலையில், கோழிக்கோட்டில் விமானத்தை பல முறை இறக்கிய அனுபவம் இருந்த காரணத்தால், அதீத தன்னம்பிக்கையும் அதனால் அசட்டையும் தோன்றியிருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
வணக்கம் நேயர்களே!
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகள் தொடர்புடைய செய்திகளை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.