கொரோனா வைரஸ் பாதிப்புக்கு போடப்படும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போடுவதால் குயில்லன் பார்ரே என்ற அரிய வகை நரம்பு மண்டல பக்க விளைவு சாத்தியமாகலாம் என்றாலும் அந்த ஆபத்து வெகு குறைவு என்று ஐரோப்பிய மருத்துவ அமைப்பான இஎம்ஏ கூறியிருக்கிறது
ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்துக்கும் இந்த அரிதான நரம்பியல் பாதிப்புக்கும் ஒரு சதவீத தொடர்பு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வகை பக்கவிளைவு 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கே ஏற்படலாம் என்று இஎம்ஏ கூறுகிறது. இந்த சாத்தியமிக்க ஆபத்துகளுடன் தடுப்பூசியின் ஆற்றலை ஒப்பிட்டால் அது பல மடங்கு பயன் தரவல்லது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதே இஎம்ஏ அமைப்பு, கடந்த ஜூலை மாதம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடுவதால் குயில்லன் பர்ரே குறைபாடு ஏற்படலாம் என்று கூறியது.
அஸ்ட்ரா செனிகா போலவே அந்த நிறுவன தடுப்பூசி மருந்தில் அடினோ வைரஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
குயில்லன் பர்ரே குறைபாடு என்றால் என்ன?
GBS என்பது ஒரு சுய தடுப்பாற்றல் குறைபாடு ஆகும். இதில் ஒருவரின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் புற நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது.
தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளையும், வலி, வெப்பம், தொடு உணர்வுகளைக் கடத்தும் நரம்புகளையும் இந்நோய்த் தாக்கம் பாதிக்கிறது.
இதன் விளைவாகத் தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் சில வேளைகளில் முடக்குவாதமும் ஏற்படும்.
சிலர் முற்றிலுமாக இந்நோயில் இருந்து குணம் பெறுவர். ஆனால் சிலருக்கோ நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படும்.இந் நோய் சிக்கல்களால் 3% - 5% நோயாளிகள் இறக்க நேரிடலாம். மூச்சைக் கட்டுப்படுத்தும் தசைகளில் வாதம், ரத்த தொற்று,நுரையீரலில் ரத்த உறைவு, இதயம் செயலிழப்பு ஆகியவை இந்த சிக்கல்களில் அடங்கும்.
இந்நோய்க்கான காரணம் தெரியவில்லை.ஆனால்,இரைப்பைக் குடல் தொற்று அல்லது நுரையீரல் தொற்று போன்ற ஒரு தொற்று நோயினால் இது குறிப்பாகத் தூண்டபடுகிறது.
ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகள்,குடும்பங்களில் இந்நோய் ஏற்படுவதாக அறிக்கை தந்துள்ளன
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 100000 பேரில் 0.4 – 4.0 பேருக்கு GBS உண்டாகிறது. இதனால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். பெரியவர்களுக்கு அதிலும் ஆண்களுக்குப் பரவலாகக் காணப்படுகிறது.