சுருக்குமடி வலையை பயன்படுத்தும் விஷயத்தில் மீனவ கிராமங்களிடையே மோதலை தடுக்க போலீசார் 15 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 600 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
புதுச்சேரியில் நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலை பயன்படுத்தும் விஷயத்தில் மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தியதாக கூறி வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களும் நடுக்கடலில் தாக்கிக் கொண்டனர்.
கடலில் ஏற்பட்ட சம்பவத்தை அறிந்த கரையிலிருந்த இரு மீனவ கிராம மக்களும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை அருகே சுளுக்கு குத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கக்கொள்ள முயன்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம், தவளக்குப்பம் காவல் துறையினர் மீனவர்களை மோதல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீனவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, போலீசார் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரம் ஏற்படாமல் கூட்டத்தைக் கலைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
பிறகு நேற்று மாலை வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 14 பெரிய படகுகள் மற்றும் 5 ஃபைபர் படகுகளில் நல்லவாடு அருகே உள்ள நடுக்கடலில் வட்டமிட்டு வானவெடி வெடித்து எச்சரிக்கை தெரிவித்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் பலமுறை எச்சரித்தும் திரும்பிச் செல்லாமல் நடுக்கடலில் தொடர்ந்து வெடி வெடித்து படகுகளில் சுற்றினர்.
பிறகு நல்லவாடு மீனவர்களுக்கு ஆதரவாக வம்பா கீரப்பாளையத்தை சார்ந்த மீனவர்கள் ஒன்று திரண்டு நடுக்கடலில் வட்டமிட்டு எச்சரிக்கை தெரிவித்த வீராம்பட்டினம் மீனவ படகுகளைத் தாக்க முற்பட்டனர். இதனால் வம்பா கீரப்பாளையம் மற்றும் வீராம்பட்டினம் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனைத் தடுக்க முற்பட்ட காவல் துறையினர் கடலிலிருந்து வீராம்பட்டினம் மீனவர்களை திரும்பிச் செல்லும் படி எச்சரித்தனர். இதனிடையே வீராம்பட்டினம் மற்றும் வம்பா கீரப்பாளையம் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் வானத்தை நோக்கி 14 முறை துப்பாக்கிச் சூடு நடத்திக் கூட்டத்தைக் கலைய செய்தனர். இதனால் தேங்காய்த்திட்டு முகத்துவாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தட்சணாமூர்த்தி, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் ரட்சனாசிங் உள்ளிட்டோர் மீனவ கிராம மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தினர்.
வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டினம், நல்லவாடு ஆகிய மூன்று மீனவ கிராமங்களில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.
மோதல் தொடர்பாக மூன்று மீனவ கிராமங்களிலும் தலா 200 பேர் வீதம் சுமார் 600 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.