காபூலில் நடந்த இரு தாக்குதல்களில் 10க்கும் அதிகமானோர் பலி - சங்கடம் தரும் படங்கள்
விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தற்போது வெடிச்சத்தம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் விமான நிலைய தாக்குதல்: அமெரிக்க அதிபருடன் அதிகாரிகள் ஆலோசனை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே இன்று மாலையில் ஏற்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அங்கு தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்த பிறகு துப்பாக்கிச்சண்டை நடக்கும் சத்தத்தைக் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வந்துகொண்டிருக்கும் செய்தி, காபூல் விமான நிலையத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது. அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என தெரிய வந்துள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி, விமான நிலையத்துக்கு வெளியே வந்த நபர் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டதாக தமக்கு தகவல் வந்துள்ளதாக தெரிவித்தார்.
அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், விமான நிலையத்துக்கு வெளியே தாலிபன்களும், விமான நிலையத்துக்கு உள்ளே ஆப்கன் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தற்போது வெடிச்சத்தம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
கொரோனா வைரஸ்: 6 மாதங்களில் 10% வரை சரியும் நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு
பட மூலாதாரம், Getty Images
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைவதைக் காண்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
'தி ரியல் வேர்ல்ட்' ஆராய்ச்சியில், கடந்த மே மற்றும் ஜூலை 2021 காலகட்டத்தில், கொரோனா பிசிஆர் சோதனையில் பாசிட்டிவ் வந்தவர்களின் தரவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஃபைசர் தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு ஒரு மாத காலத்தில் 88 சதவீதமாக இருந்தது. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74 சதவீதமாக குறைந்திருக்கிறது.
ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு தொடக்கத்தில் 77 சதவீதமாக இருந்தது, நான்கு முதல் ஐந்து மாத காலத்தில் இது 67 சதவீதமாக குறைந்திருக்கிறது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, புதுச்சேரி பட்ஜெட்: விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் ரத்து - முக்கிய அம்சங்கள் என்ன?, நடராஜன் சுந்தர், புதுச்சேரி
படக்குறிப்பு, என். ரங்கசாமி, புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் ரூ. 9,924 கோடி மதிப்பிலான 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்:
புதுச்சேரி தாக்கல் செய்யப்பட்ட 9,924 கோடி பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. குறிப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும், ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும்.
விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
புதிய உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை.
நிலத்தடி நீர்மட்டத்தை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உயர்த்த பிரதான் மந்திர் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்பபடும்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.
காரைக்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.60 லட்சம் செலவில் 6 புதிய கிணறுகள் அமைக்க உள்ளன.
புதுச்சேரியில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன, விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்.
பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் செங்குத்து தோட்டம் உருவாக்கப்படும்.
ஆரோக்கியமான கன்றுகள் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
கரவை மாடுகள் பாராமரிக்கவும்,கூட்டுறவு சங்கங்களில் அல்லாதவர்களுக்கு 75 விழுக்காடு மானியத்தில் தீவனம் நடப்பாண்டு வழங்கப்படும்.
கால்நடை இனப்பெருக்கம் செய்ய தாது ஊப்பு கலவை வழங்கப்படும்.
தேசிய மயக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும்.
கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.
அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் உள்ளிட்டவை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
புதுச்சேரியில் மூட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான சத்திய கூறுகள் ஆராயப்படும்.
100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும்.
மாணவர்கள் படிப்பில் இருந்து இடை நிற்றலை தவிர்க்கவும் கல்வி கற்கவும் தேவையான உதவிகளை அரசு வழங்கும்.
இதற்காக கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்கல்விக்கு ரூ. 296.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மின் பற்றாக்குறை இல்லை. 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தெரு மின் விளக்குகளை எல்.ஈ.டி விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
10 தொழிற்சாலைகளுக்கு உயர் மின் இணைப்பும், 50 தொழிற்சாலைகளுக்கு குறைந்த மின் இணைப்பு வழங்கப்படும்.
அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நவீன கணினி வயர்லெஸ் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்க நடவடிக்கை.
கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தி வழங்கப்படும்.
மீன் பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும்.
தடைக்காலத்தில் விசைப்படகு பராமரிப்பு உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.
வைத்திகுப்பம் மீனவ பகுதியில் தூண்டில் வளைவு அழைக்கப்படும்.
கோரிமேடு பகுதியில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்படும்.
கொரோனாவை எதிர்கொள்ள கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஆயுஷ் மருத்துவமனை கட்ட ரூ.795.88 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்புகள்
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை சுற்றி தேரோடும் நான்கு வீதிகளையும் செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டா மாற்றுதலில் ஏற்படும் காலதாமதத்தைப் போக்கும் வகையில் ஆன்லைன் மூலம் பட்டா மாற்றும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் வாரம் முழுவதும் சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட நீர் விளையாட்டுகள் நடத்தவும் பாய்மரப் படகுத்தளமும் அமைக்கப்படும்.
நலிவடைந்த நிலையில் உள்ள புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்படும்.
பழங்குடியின மாணவர்களுக்கு தங்கும் விடுதி புதியதாக அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு
இலவச படிப்பு திறம்பட செயல்படுத்தப்படும்.
புதிய அரசின் முதல் பட்ஜெட்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
இந்த பட்ஜெட் நிதியாக ரூ.10 ஆயிரத்து 100 கோடியாக உயர்த்தப்பட்டது.
புதுச்சேரி அரசு கோரியபடி, இந்த தொகைக்கு சில திருத்தங்களுடன் மத்திய அரசின் அனுமதியும் கிடைத்தது.
இதன்படி அரசு கேட்டுள்ள கடன் தொகையில் ரூ.200 கோடியை குறைத்து, ரூ.9924 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
துணைநிலை ஆற்றிய தமிழ் உரை:
புதுச்சேரி 15வது சட்டப்பேரவையின் இன்றை கூட்டத்தொடரில் சம்பிரதாயத்தின்படி துணைநிலை ஆளுநர் உரையாற்றினார். இதற்கு முன்பு இங்கு பதவியில் இருந்த துணைநிலை ஆளுநர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், தற்போது இங்கு துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் தமிழிசை செளந்தர்ராஜன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இதனால் தமது உரையை அவர் தமிழிலேயே வாசித்தார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள், மாநிலத்தின் பணிகளை பட்டியலிட்டுப் பேசினார்.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 3ஆம் தேதிவரை நடைபெறும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசிக்கும் முதல்வர் என். ரங்கசாமி.
படக்குறிப்பு, புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக அதன் ஆவணங்கள் இடம்பெற்ற பெட்டியுடன் புறப்பட்ட முதல்வர் ரங்கசாமி.
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆகஸ்ட் 31க்குள் முடிவடையாது: அமெரிக்கா
பட மூலாதாரம், reu
படக்குறிப்பு, ஆன்டனி பிளிங்கின், அமெரிக்க செயலாளர்
ஆப்கானிஸ்தானில் தமது ராஜீய இருப்பை ஆகஸ்ட் 31 காலக்கெடுக்குப் பிறகும் தக்க வைக்க பல்வேறு வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினரும் வெளிநாட்டுப் படையினரும் ஆகஸ்ட் 31க்குள் வெளியேற வேண்டும் என்பதுதான் ஆப்கன் தாலிபனும் அமெரிக்காவும் செய்து கொண்ட உடன்பாடு.
கடந்த 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தாலிபன் தமது வசமாக்கிக் கொண்ட பிறகு அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினரையும், தாயகத்தை விட்டு வெளியே விரும்பும் ஆப்கானியர்களையும் மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஆனாலும், காபூல் விமான நிலையத்தில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள்.
மீட்புப்பணிக்காக ஏராளமான தனியார் பயணிகள் விமான சேவையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இன்று மட்டும் மணிக்கு இரண்டு விமானங்கள் என்ற அளவில் மீட்புப் பணியில் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இருப்பினும், குறித்த காலக்கெடுவுக்குள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அனைவரும் மீட்கப்படுவார்களா என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
முன்னதாக, காணொளி வாயிலாக நடைபெற்ற ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில், ஆகஸ்ட் 31 காலக்கெடுவின்படி மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செயலாளர் ஆன்டனி பிளிங்கென், அடுத்த சில நாட்களுக்கு ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அமெரிக்க குடிமக்கள், கூட்டாளி நாடுகளின் மக்கள் ஆகியோரை பாதுகாப்பாக அந்த நாட்டை விட்டு வெளியேற்றுவதிலேயே அரசு கவனம் செலுத்தும் என்று கூறினார்.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மை பகுதிகளை தாலிபன் கட்டுப்படுத்துகிறது. எனவே, அந்த நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். அது ஆகஸ்ட் 31க்குள் நடக்குமா என்பதை பார்க்க வேண்டும் என்று ஆன்டனி பிளிங்கின் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் அரசு கொறடா நியமனம்
படக்குறிப்பு, ஏ.கே.டி.ஆறுமுகம்
புதுச்சேரி சட்டப்பேரவை அரசு கொறடாவாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் இந்திராநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி.ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 9 நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு அனுமதி
பட மூலாதாரம், SCI
உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள இடங்களில் நியமிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வழக்கமாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கோலேஜ்ஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக்குழுவே இறுதி செய்யும்.
ஆனால், சம்பிரதாய வழக்கத்தின்படி அந்த தேர்வுக்குழு இறுதி செய்யும் பெயர்கள் சட்டத்துறை மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த பட்டியலில் இடம்பெறும் நீதிபதிகள் அல்லது மூத்த வழக்கறிஞர்கள் தொடர்பாக உளவுத்துறை விசாரணை, நன்னடத்தை சரிபார்ப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் அந்த பட்டியல் சில நேரங்களில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்படும்.
பிரச்னை உள்ளதாக கருதப்படும் பெயர்கள், மீண்டும் பரிசீலிக்கப்படலாம் என்ற குறிப்புடன் மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்பது பேரையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிபதிகளின் விவரம்:
பெண் நீதிபதிகள்
1) ஹிமா கோஹ்லி, தெலங்கானா உயர் நீதி்மன்ற தலைமை நீதிபதி
2) பி.வி. நாகரத்னா, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி
3) பீலா திரிவேதி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி.
வழக்கறிஞர் பணியில் இருந்து தேர்வானவர்
4) பி.எஸ். நரசிம்மா, மூத்த வழக்கறிஞர்
பிற மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள்
5) ஏ.எஸ். ஓகா, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
6) விக்ரம் நாத், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
7) ஜே.கே. மகேஸ்வரி, சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
8) சி.டி. ரவிகுமார், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
9) எம்எம். சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
இந்த பட்டியலில் உள்ள நீதிபதிகளின் வயது, பணி மூப்பு அடிப்படையில் பார்த்தால், நீதிபதிகள் விக்ரம் நாத், பி.வி. நாகரத்னா, மூத்த வழக்கறிஞர் பி.எஸ். நரசிம்மராவ் ஆகியோர் எதிர்காலத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாய்ப்பிருக்கிறது.
இதில் நீதிபதி நாகரத்னாவுக்கு 2027இல் தலைமை நீதிபதியாகவும் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாகவும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள ஒன்பது நீதிபதிகளின் நியமன ஆணையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டதும் இவர்களுக்கான பணி ஆணை வெளியிடப்படும்.
அதன் மூலம், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 24இல் இருந்து 33 ஆக உயரும்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 34.
இன்றைய நிலவரப்படி 10 நீதிபதி பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்போது ஒன்பது நீதிபதிகளின் நியமன ஆணை வெளியான பிறகும் ஒரு நீதிபதி பணியிடம் காலியாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது துருக்கி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரிசெப் தயீப் எர்துவான், துருக்கி அதிபர்
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது துருப்புகளை திரும்பப் பெறத் தொடங்கியிருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நேட்டோ கூட்டுப்படையில் துருக்கியின் ராணுவ வீரர்கள் 500க்கும் அதிகமானோர் உள்ளனர்.
அந்த நாட்டின் பஞ்ஷிர் பகுதி நீங்கலாக மற்ற அனைத்து பகுதிகளின் முழு கட்டுப்பாடும் தற்போது தாலிபன் வசம் உள்ளது.
தாலிபனுடன் ஏற்கெனவே அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாட்டின்படி அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டுப் படையினர் வெளியேற ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை கெடு உள்ளது.
இதையொட்டி அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டுப் படைகள் மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், தாலிபன் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தில் இருந்து ஆகஸ்ட் 31க்குப் பிறகும் துருக்கி படையினர் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் அந்த இலக்கை எட்டுவதற்கு அந்த நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் துருக்கி நெருக்கமாக பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் அங்கமாக உள்ள துருக்கிய துருப்புகள் திரும்பப் பெறப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரிசெப் தயீப் எர்துவான் கூறினார்.
ஆளும் கட்சிக்கு சில காவல் அதிகாரிகள் ஒத்து ஊதுவது சங்கடமான போக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
பட மூலாதாரம், K.P. SINGH
படக்குறிப்பு, குர்ஜிந்தர் பால் சிங், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி
ஆளும் கட்சியின் நன்மதிப்பில் இருக்க விரும்பும் சில அதிகாரிகள், தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்கட்சியினருக்கு தொந்தரவு கொடுப்பது சங்கடமான போக்கு என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 1994ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில பிரிவு அதிகாரி குர்ஜிந்தர் பால் சிங். கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வந்த நிலையில் இவர் அம்மாநில அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த மாநிலத்தில் முந்தைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக தான் நடந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தேச துரோக செயலில் ஈடுபட்டதாகவும் சில குற்றச்சாட்டுகளை சுமத்தி தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தான் பணியில் இருந்து இடைநீக்கம் செய்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிடுமாறும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
இவரது மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது.
அப்போது குர்ஜிந்தர் பால் சிங் தரப்பு வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, அவர் மீதான வழக்கில் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
அதே சமயம், மனுவில் காவல்துறை அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, "ஆளும் கட்சிக்கு ஒத்து ஊதும் சில காவல்துறை அதிகாரிகளின் சங்கடமான போக்கு வளர்ந்து வருகிறது,அத்தகைய போக்குக்கு காவல்துறை அதிகாரிகளே பொறுப்புடைமையாக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
மேலும், ஆளும் கட்சியின் நன்மதிப்பில் இருக்க விரும்பும் சில அதிகாரிகள், தங்களுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்கட்சியினருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கான விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டும் யூடியூபர் மதன் - ஆடியோ வெளியிட்டார்
பட மூலாதாரம், Annamalai
பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக கூறி சில ஆடியோக்களை வெளியிட்டுள்ளார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன்.கே.டி.ராகவன் தொடர்புடைய பாலியல் வீடியோ விவகாரம் தொடர்பாக தமக்கும் அண்ணாமலைக்கும் நடந்த உரையாடல் என்று கூறி இவற்றை வெளியிட்டுள்ளார் மதன்.
பாஜக மாநிலப் பொதுச்செயலாளராக இருந்து ஒரு பாலியல் வீடியோ விவகாரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பதவி விலகினார் கே.டி.ராகவன். இந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் விவாதித்துவிட்டே இந்த வீடியோக்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். ஆனால், இந்த விவகாரம் வெளியான நிலையில் மதன், வெண்பா ஆகியோரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்தார் அண்ணாமலை. அந்த அறிவிப்பில் சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பாக தம்மிடம் கூறி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மதன் வலியறுத்தினார் என்றும், ஆனால், குறிப்பிட்ட வீடியோக்களை அளிக்க மதன் மறுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலையின் கூற்றுகளை மறுப்பதாக கூறி இந்த ஆடியோக்களை வெளியிட்டுள்ளார் மதன்.
புதுவை சட்டப் பேரவையில் முதல் முறை தமிழில் ஆளுநர் உரை
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. புதுவை சட்டப் பேரவையின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆளுநர் உரை தமிழில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான தமிழிசை சௌந்திரராஜன் துணை நிலை ஆளுநராக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சி புதுச்சேரியில் அமலுக்கு வந்தது. இதனால் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட வேண்டிய இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு 5 மாதத்திற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கான காலம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் முடிவடையவுள்ளது. இதனால் அடுத்த மாத செலவினங்களுக்காக புதுச்சேரி அரசு நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, ரங்கசாமி முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், 15வது சட்டபேரவைக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் உரை இடம்பெற்றுள்ளது. தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பில் உள்ளதால் ஆளுநர் உரையை தமிழில் வாசித்துள்ளார்.
கூட்டம் தொடங்கியது கொரோனா நோய்த் தொற்று சூழலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட முன் கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் துணை நிலை ஆளுநர் தமிழிசை.
முன்னதாக துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜவேலு மனுதாக்கல் செய்திருந்தார். இப்பதவிக்கு வேறு யாரும் மனு செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆகவே காலை 11.15 மணிக்கு அவர் ராஜவேலு துணை சபாநாயகராக பதவி ஏற்கிறார்.
இதையடுத்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்திற்கான 2021-22ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கையை பிற்பகல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூபாய் 10 ஆயிரத்து 100 கோடிக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கு, சாலை சீர்கேடுகள், மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 14 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள், 6 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 32 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
படக்குறிப்பு, தமிழிசை.
கேரளாவில் கொரோனா மீண்டும் தீவிரம்: ஒரே நாளில் 31,000 பேருக்கு தொற்று
பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பரிசோதனை செய்யும் நூறுபேரில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதால், அச்சம் ஏற்பட்டுள்ளது.
எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நேற்று மட்டும் தலா 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதுமான மொத்த எண்ணிக்கை 31,445.
ஒட்டமொத்தமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1.7 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
கடந்த பல வாரங்களாக நாட்டின் மொத்த பாதிப்பில் பாதிக்கும் அதிகமாக கேரளாவில் கண்டறியப்பட்டு வருகிறது.
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பகுதியில் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.